Empuraan | லூசிஃபர் டூ L 2 எம்புரான்... ஈர்க்கிறதா இந்த இரண்டாம் பாகம்..?
Empuraan(2.5 / 5)
அதிகாரத்தில் இருக்கும் கைகளில் கரைபடிய... அதை சரி செய்ய எம்புரான் திரும்பி வருவதே கதை.
முதல் பாகமான `லூசிஃபர்’ படத்தில், ஐ யு எஃப் கட்சித் தலைவரான பி கே ராமதாஸ் (சச்சின் கடேகர்) இறந்துவிட, தலைமையைப் பிடிக்க சில கொடியவர்கள் நினைக்கிறார்கள். ராமதாஸின் வளர்ப்பு மகனான ஸ்டீஃபன் (மோகன்லால்) இந்தப் பிரச்சனைகளை சரி செய்து, ராமதாஸின் மகன் ஜதினை (டொவினோ தாமஸ்) முதலமைச்சராக்குகிறார். கூடவே உடன் பிறவா சகோதரி ப்ரியாவிடமும் (மஞ்சு வாரியர்) இணக்கமாகிறார். இதன் பின் ஊரைவிட்டு கிளம்பிய ஸ்டீஃபன் என்ன ஆனார் எனத் தெரியாத படி, தலைமறைவாகிறார். அங்கிருந்து இந்த பாகமான எம்புரான் கதை துவங்குகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜதினின் ஆட்சியில் பலருக்கும் அதிருப்தி, அவனின் அக்கா ப்ரியாவே கூட அவரை எதிர்த்து நிற்கிறார். இன்னொரு பக்கம் பாபா பஜ்ரங்கி (எ) பல்ராஜ் (அபிமன்யூ சிங்), கேரளாவின் மீது கண் வைக்கிறார். எப்படியாவது கேரள அரசியலில் காலடி எடுத்து வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என நினைப்பவர் ஜதினுடன் கை கோர்த்து புது கட்சியை துவங்க வைக்கிறார். நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும் கோவர்தன் (இந்திரஜித்), கம்பேக் எம்புரான் என ஃபேஸ்புக் லைவ் வருகிறார். லூசிஃபராய் காணாமல் போனவர், பிரச்சனைகளை சரி செய்ய எம்புரானாய் வந்து என்ன செய்கிறார் என்பதே கதை.
முரளி கோபி `லூசிஃபர்’ என்ற உலகத்தை கட்டமைக்க, அதனை அப்படியே இம்முறையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ப்ரித்விராஜ். அரசியல் தான் படத்தின் பின்புலம் என்பதால், உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அத்தனை ரெஃபரன்ஸையும் படத்துக்குள் இணைத்திருக்கிறார்கள். நிகழ்காலம், கடந்தகாலம் என பல அரசியலை சார் காட்சிகளை காணும் போது அதைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நம் கண் முன்னே வந்து போகின்றன. குறிப்பாக அபிமன்யூ சார்ந்திருக்கும் கட்சி அகண்ட சக்தி மோக்ஷா, யாரைக் குறிக்கிறது என்பதில் இருக்கும் நக்கலும் கவனிக்க வைக்கிறது. படத்தின் ஒரு துவக்கத்தை இடைவேளையிலும், இன்னொரு துவக்கத்தையும் க்ளைமாக்ஸுடன் இணைத்திருந்த விதமும் நன்று.
நடிப்பு பொறுத்தவரை கம்ப்ளீட் ஆக்டர் என்பதை மறுபடி நிரூபிக்கிறார் மோகன்லால். முதல் பாகத்தைப் போலவே இதிலும் கொஞ்ச நேரமே தான் வருகிறார் லாலேட்டன். ஆனாலும் அவரது பிரசன்ஸ் படம் முழுவதும் உணர முடிகிறது. மாஸ் காட்சிகள், எமோஷனல் காட்சிகள், ஆக்ஷன் என எல்லாமே தரமாக செய்திருக்கிறார். முதலமைச்சராக முறைப்பும் விறைப்புமாக வந்து போகிறார் டொவினோ தாமஸ். நடிப்பாக கவனிக்க வைக்கவில்லை என்றாலும், படத்துக்கு தேவையானதை செய்திருக்கிறார். படத்தில் உண்மையாக மாஸ் காட்டுவது மஞ்சு சேச்சி தான். பொதுக்குழு கூட்ட காட்சி ஒன்று போதும், அசால்ட்டாக க்ளாப்ஸ் அள்ளும் மாஸ் நடிப்பை கொடுக்கிறார். அபிமன்யூ சிங் வழக்கமான ஒரு வில்லன் ரோல். மற்றபடி துணைக் கதாப்பாத்திரங்களில் கவர்வது பைஜூ சந்தோஷ், அனீஷ் மேனன். இருவரும் படத்தின் சூழலுக்கு ஏற்ப பேசும் வசனங்கள் நகைச்சுவைக்கு உதவுகிறது.
சுஜீத் வாசுதேவின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்ட உதவுகிறது. தீபக் தேவ் இசையில் பின்னணி இசை சில இடங்களில் படத்தின் மாஸ் மோடைக் கூட்டுகிறது. சில்வாவின் சண்டைக்காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், மிக லென்த்தாக இருப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்படையவைக்கிறது.
படத்தின் மைனஸ், கதையிலோ, திரைக்கதையிலோ பரபரப்பு ஏதும் இன்றி நீண்டு கொண்டே செல்வதுதான். கடவுளின் பிள்ளைகளே தவறு செய்யும் போது, சாத்தானிடம் தானே முறையிடுவார்கள் என்பது படு சுவாரஸ்யமான ஒன்லைன். ஆனால் அதற்குள் நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே எடுபடவில்லை. குறிப்பாக ப்ரித்விராஜ் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் எதற்காக அவ்வளவு நீளமாக இருக்கிறது எனப் புரியவே இல்லை. அதுபோக முதல் பாதி முழுக்க பெரிதாக எந்த சுவாரஸ்ய நிகழ்வுகளும் இல்லாததால், மிக மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியிலும் மோகன்லாலின் திட்டங்கள் பரபரப்பை சேர்த்தாலும், அதில் சர்ப்ரைஸ் எதுவுமே இல்லை. மிக எளிதாக யூகிக்க முடிகிற விஷயங்களே நடக்கின்றன.
முதல் பாகத்தில் படத்தின் இறுதியில், இரண்டாம் பாகத்துக்கு லீட் வைக்கும் போது லேசாக ஒரு ஆர்வம் வரவே செய்தது. ஆனால் இந்த பாகத்தின் இறுதியில் லூசிஃபர் தி பிகினிங் என்ற போஸ்ட் கிரெடிட் அத்தனை ஈர்ப்புடையதாக இல்லை. மொத்தத்தில் ஒரு ஆவரேஜான ஆக்ஷன் படமாக முடிகிறது இந்த எம்புரான். மேலும் படத்தில் வரும் அதீத வன்முறைக்காக இது குழந்தைகளுடன் பார்க்கும் படம் இல்லை என்பது குறிப்பிட வேண்டியது.