KINGDOM REVIEW | அண்ணனை மீட்கும் தம்பியின் சாகசம் ஈர்க்கிறதா..?
KIngdom Review(2.5 / 5)
அண்ணனை மீட்க உளவாளியாகும் தம்பியின் கதையே 'கிங்டம்'
1920 ஸ்ரீகாகுளம் பகுதியை கைப்பற்ற நினைக்கும் பிரிட்டிஷ் அரசு அந்த பூர்வ குடிகளுடன் மோதுகிறது. அம்மக்களின் தலைவன் குழந்தைகளுடன் சிலரை பாதுகாத்து இலங்கையில் திவி என்ற தீவுக்கு அனுப்புகிறார். கூடவே புதிய தலைவனின் வருகைக்காக காத்திருக்கவும் சொல்கிறார். இதிலிருந்து 70 ஆண்டுகளுக்குப் பின் 1991ல் போலீஸ் கான்ஸ்டபிள் சூரி (விஜய் தேவரகொண்டா), 17 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தன் அண்ணனை தேடும் முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார். அந்த சூழலில் அவரது அண்ணனைப் பற்றி ஒரு தகவலும், அவரை மீட்டு வர ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது. அதற்காக உடனே இலங்கை கிளம்புகிறார் சூரி. இன்னொரு பக்கம் திவி தீவில் வசிக்கும் பூர்வகுடிகள், கடத்தல் கும்பலுக்கு அடிமைகள் போல் பணியாற்றி வருகின்றனர். தங்களை விடுவிக்க ஒரு தலைவன் வருவான் எனக் காத்திருக்கிறார்கள். சூரிக்கு அவரின் அண்ணன் கிடைத்தாரா? அந்த மக்களுக்கு தலைவன் கிடைத்தானா? என்பதை எல்லாம் சொல்வதே கிங்டம் மீதிக்கதை.
ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை அண்ணன், தம்பி எமோஷன் கலந்து கொடுத்திருக்கும் கௌதம் தின்னனுரியின் கதைக்களம் சிறப்பு. அதனை சொல்லும் விதத்திலும் சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா, திவி குழுவினருடன் ஒருவராக இணைவது வரையிலான முதல்பாதி பெரிய குறை ஏதும் இல்லாமல் பரபரப்பாக நகர்கிறது. நடிப்பாக விஜய் தேவரகொண்டா நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். அண்ணனுக்காக ஏங்குவது, அம்மாவைப் பார்த்ததும் அடங்கிப் போவது, சில மாஸ் காட்சிகள் என அனைத்திலும் கவனிக்க வைக்கிறார். முக்கியமான பாத்திரத்தில் வரும் சத்யதேவ் வழக்கம் போல் தன்னுடைய பங்கை சிறப்பாக சொல்கிறார். தன் மக்கள் கூட்டத்தை பாதுக்காக்க வேண்டும் என பதறுவது, என்ன முடிவு எடுப்பது என தடுமாறுவது போன்ற இடங்களில் வெகு சிறப்பு. முருகன் கதாப்பாத்திரத்தில் வரும் வெங்கடேஷுக்கு வழக்கமான வில்லன் வேடம். அதில் இயன்றவரை சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி பாக்யஸ்ரீ படத்தில் மொத்தம் 10 நிமிடங்கள் வந்தாலே பெரிய விஷயம். அதற்கேற்ற அளவிலேயே அவர் பாத்திரத்துக்கான முக்கியத்துவமும் இருக்கிறது.
படத்தின் மிகப்பெரும் பலம் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும். படத்தில் ஆங்காங்கே உணரக் கூடிய பதைபதைப்பு, மாஸ், எமோஷன் என எல்லாவற்றையும் நமக்கு கொடுப்பது அனிருத்தின் இசை மட்டுமே. ரகிலே ரகிலே பாடலும் பக்கா மாஸ். கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு படத்திற்கான ஒரு ரஸ்டிக் உணர்வை காட்சிகளில் கொடுக்கிறது. படத்தொகுப்பாளர் நவீன் நூலி முடிந்தவரை படத்தை பரபரப்பாக முயற்சித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இரண்டாம் பாதியைத்தான் சொல்ல வேண்டும். புதிதாக இல்லை என்றாலும் படத்தின் முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாகவாவது நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி கண்ணா பின்னாவென நகர்கிறது. நாயகன் ஒரு எண்ணத்தை மனதில் வைத்து செல்கிறார் என்றால், அதை எப்படி நிறைவேற்றினார் என்பதில் தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவர் அதை நிறைவேற்ற வரவில்லை, அதை விட அவருக்கு பெரிய பர்பஸ் உள்ளது. அது என்ன பர்பஸ் என்பதை அடுத்த பாகத்தில் சொல்கிறோம் என படத்தை முடிப்பதெல்லாம் சுத்த போங்கு. இதுதான் படம் சரிவடைய முதன்மையான காரணம்.
அதைத் தாண்டி, புதிதாக எந்த விஷயமும் யோசிக்காமல், ஹீரோதான் ஸ்பை என தெரிந்துவிடுமோ என்ற ஒரு த்ரில் காட்சி கூட இல்லாமல், படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அண்ணன் - தம்பி இடையே உள்ள பாசமோ, அந்த தீவு மக்கள் தப்பிக்க வேண்டும் என்ற அவசியமோ நமக்கு அழுத்தமாக புரியவைக்கப்படவே இல்லை. அதனாலேயே இவர்கள் சேர வேண்டும் என்பதோ, தப்பிக்க வேண்டும் என்பதோ நமக்கு கடைசி வரை தோன்றவே இல்லை.
மொத்தமாக பார்க்கும் போது, இது பெரிய புதுமையோ, சுவாரஸ்யமா இல்லாத மிக சுமாரான ஸ்பை த்ரில்லர் படமாக முடிகிறது. மேலும் படத்தில் இருக்கும் அதீத வன்முறைக்காக, இப்படம் குழந்தைகளுக்கானது அல்ல.