பிரச்னையில் இருந்து தப்பிக்க போராடும் காவல்நிலையம்.. மாற்று திரைக்கதையால் மிளிரும் ’மேக்ஸ்’!
இன்ஸ்பெக்டர் அர்ஜுன் (கிச்சா சுதீப்) இரண்டு மாத சஸ்பென்ஷனுக்கு பிறகு மீண்டும் பணியில் சேருகிறார், புதிய ஊரில், புதிய ஸ்டேஷனில். அவர் இன்ஸ்பெக்டராக சார்ஜ் எடுத்துக் கொள்வதற்கு முந்தைய நாள் இரவில், இருவர் குடித்துவிட்டு போலீசிடம் தகராறு செய்ய, அவர்களை அடித்து இழுத்துவந்து சிறையில் தள்ளுகிறார் அர்ஜுன்.
அன்றைய இரவில் அந்த ஸ்டேஷனில் நடக்கும் ஒரு சம்பவம், ஸ்டேஷனை சேர்ந்த மொத்த காலவர்களையும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அந்த சம்பவம் வெளியே தெரிந்தால் மொத்த பேரின் உயிருக்கும், இரு அமைச்சர்களால் ஆபத்து. இந்த பிரச்சனையில் இருந்து அத்தனை காலவர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார் அர்ஜுன். ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு காரணம் யார்? பிரச்சனைகளை எப்படி அர்ஜுன் சமாளிக்கிறார்? என்பதெல்லாம் தான் மேக்ஸ்.
திரைக்கதை, மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குநர்..
இது போன்ற ஒரு த்ரில்லர் கதைக் களத்தை வைத்து கதை சொல்லும் போது, அந்தப் படத்திற்குள் செட் செய்யப்பட்டிருக்கும் லாஜிக்கை தாண்டி பார்வையாளர்கள் யோசிக்கக் கூடாது, அப்படியான மேஜிக்கை படத்திற்குள் இயக்குநர் செய்ய வேண்டும். அதை மிஸ் செய்யாமல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா. உதாரணத்திற்கு, அந்த காவல் நிலையம் அமைந்திருக்கும் பகுதியே எடுத்துக் கொள்ளலாம். சுற்றி எந்த கட்டடமும் இல்லாத வெட்டவெளி, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் மிகப்பெரிய காவல் நிலையம். அங்கு எப்படி காவல் நிலையம் இருக்கும் என்ற கேள்வி, படம் துவங்கி முடியும் வரை நமக்கு எழவே எழாது.
மேலும் ஒரு த்ரில்லர் படமாக திரைக்கதை மூலம் நகர்த்தியது போல, மாஸ் படமாகவும் உருவாக்கி இருக்கிறார். படத்தின் மாஸ் விஷயங்களை கிச்சா சுதீப் அட்டகாசமாக தாங்குகிறார். ஒரு பக்கம் அடியாட்களை துவம்சம் செய்யும் ஒன்மேன் ஆர்மியாக, இன்னொரு பக்கம் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க ஸ்கெட்ச் போடும் மாஸ்டர் மைண்டாக என இரண்டையும் கச்சிதமாக செய்கிறார்.
போர் வீரர்கள் இருக்கும்போது தளபதியின் முக்கியத்துவம் என்ன?
படத்தில் வரும் திருப்பங்களும் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. ஹீரோ என்னதான் திட்டமிட்டாலும், அதில் நடக்கும் தவறுகள், அதனால் உருவாகும் புதிய சவால், அதை தீர்க்க புதிய திட்டமிடும் ஹீரோ என ஒவ்வொரு காட்சியையும் பரபரவென நகர்த்தி கொண்டு செல்கிறார்கள். அப்படியான ஒரு சிக்கலில் மொத்தக்க குழுவும் சிக்கிக் கொள்வதை இடைவேளையாக வைத்தும், அங்கு வரும் ஒரு வசனமும் மிக சுவாரஸ்யமான ஒன்று. "போர் வீரர்கள் எல்லோரும், தளபதி அளவுக்கு புத்திசாலியாக இருந்துவிட்டால், பின்பு சண்டையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்?".
வழக்கமாக இது போன்ற கதைகளில் தப்பிக்க நினைப்பது, குற்றவாளிகளாகவோ (உ.ம்: பல கேங்க்ஸ்டர் படங்கள்), அல்லது ஒரு குடும்பமாகவோ (உ.ம்: த்ரிஷ்யம்) இருக்கும். ஆனால் இம்முறை ஒரு போலீஸ் குழு, ஒரு அரசியல் பின்புலம் கொண்ட ரௌடிகளிடம் இருந்து தப்பிக்க நினைக்கிறது என்ற களம் பிரெஷ்ஷாக இருந்தது.
அஜனீஷ் இசை மற்றும் சேகர் கேமரா இரண்டும் ஒரு சிம்பிளான த்ரில்லரை, மிக பிரம்மாண்டமான த்ரில்லர் படமாக மாற்றுகிறது. பரபரப்பான திரைக்கதையை இன்னும் சுறுசுறுப்பை ஏற்றுகிறது கணேஷ் பாபுவின் படத்தொகுப்பு.
சிறுசிறு குறைகள் இருந்தாலும் படம் நன்றாகவே வந்திருக்கிறது..
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், கதைக்குள் பல விஷயங்கள் தற்செயலாக நடப்பது. உதாரணமாக உடல்நிலை சரி இல்லாமல் ஒருவர் சரிந்து விழுந்த போது, அந்த வழியாக செல்லும் ஒரு ஆட்டோ நிற்கிறது. அதற்குள் இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து மருத்துவமனை அழைத்து செல்கிறார். இப்படி படம் முழுக்க பல காட்சிகளில் தற்செயலாகவே நடக்கிறது. அவற்றில் சிலவற்றுக்கு காரணம் சொல்லப்பட்டாலும், அது வலிந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வையே கொடுக்கிறது. இது போன்ற சில குறைகளை தாண்டி, ஒட்டு மொத்தமாக சிறப்பான ஒரு த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது படம்.
ஆக்ஷன் த்ரில்லர் விரும்பிகளுக்கு, நிச்சயம் ஒரு மினிமம் கேரண்டி என்டர்டெய்ன்மென்ட்டை கொடுக்கும் மேக்ஸ்.