Kannappa review | சிவனாக அக்ஷய்... கண்ணப்பனின் கதை சினிமாவாக ஈர்க்கிறதா..?
Kannappa review(2.5 / 5)
நாத்திக திண்ணப்பன் எப்படி பக்தியில் திளைக்கும் கண்ணப்பன் ஆனான் என்பதே கண்ணப்பா படம்.
இரண்டாம் நூற்றாண்டில் மலை பிரதேசத்தில் வசித்துவரும் இனக்குழுவின் தலைவர் சரத்குமார். அவரது மகன் தின்னடு. தங்கள் குழுவின் நலனுக்காக தன் நண்பன் பலி கொடுக்கப்பட்டதை பார்த்த தின்னாவுக்கு தெய்வத்தின் மீது நம்பிக்கையை இழக்கிறார். கடவுள் இல்லை, அது வெறும் கல் என்று கடவுளை மறுதலிக்கிறார். 25 ஆண்டுகள் கழித்து தின்னா, கடவுள் மீது இன்னும் வெறுப்புடன் வளர்கிறார். இந்த வனப்பகுதியில் வசிக்கும் ஐந்து இனக்குழுக்களில் ஒரு குழுவிடம் உள்ள வாயு லிங்கத்தை கைப்பற்ற வருகிறது காலமுகாவின் குழு. அப்போது தின்னாவுடன் நடக்கும் மோதலில் இறந்து போகிறான் காலமுகாவின் தம்பி. தம்பியை இழந்த கோபத்தில் காலமுகா லட்சக்கணக்கான வீரர்களுடன் படையெடுத்து கிளம்புகிறான். இதனைத் தடுக்க வேண்டும் என்றால், ஐந்து இனக்குழுவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என முடிவெடுக்கப்படுகிறது. போர் நெருங்கும் சூழலில் தின்னா - நெமலி காதலால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் தின்னா தன் தந்தையாலேயே குழுவில் இருந்து நீக்கப்படுகிறார். விரைந்து வரும் போர் என்ன ஆகிறது? அதனிடையே திண்ணப்பன் எப்படி கண்ணப்பன் என்ற பக்திமான் ஆக மாறுகிறான் என்பதும்தான் கண்ணப்பா பட மீதிக்கதை.
சிறுவயதில் இருந்து நாம் கேட்டு வளர்ந்த ஒரு இதிகாச கதையை, அதன் பின்னணியை சேர்த்து சுவாரஸ்யமாக கொடுக்க முயன்றிருக்கிறார் கதாசிரியர் விஷ்ணு மஞ்சு மற்றும் இயக்குநர் முகேஷ் குமார் சிங்.
நடிப்பு பொறுத்தவரை திண்ணாவாக விஷ்ணு மஞ்சு முடிந்தவரை நல்ல நடிப்பை கொடுக்க முயன்றிருக்கிறார். கடவுளை மறுக்கும் கோபக்கார நபராக, பக்தி வந்த பின் கடவுளை நினைத்து மருகும் சிவ பக்தனாக என இரு பரிமாணங்களையும் தெளிவாக காட்டுகிறார். பாசமான தந்தையாய் சரத்குமார் வழக்கம் போல் இயல்பான நடிப்பை கொடுக்கிறார். பிரீத்தி முகுந்தன் காதலில் தவிப்பது, கடவுளை எதிர்க்கும் கணவனிடம் கோபம் கொள்வது என சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். சிவன் பார்வதியாக வரும் அக்ஷய்குமார், காஜல் அகர்வால் நடிப்பு பார்க்கையில் இந்தி சீரியலில் வரும் சிவன் பார்வதி போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. மிக செயற்கையாக இருந்தது. ஒரே காட்சியில் வந்தாலும் நல்ல நடிப்பை கொடுத்துவிட்டு செல்கிறார் மோகன் லால். இரண்டாம் பாதியில் ருத்ராவாக வரும் பிரபாஸ் ஸ்க்ரீன் பிரசன்ஸ் சிறப்பு. அவர் வரும் காட்சிகளும் நன்றாக எழுதப்பட்டிருந்தது.
படத்தின் முதல் பாதி முழுக்க திண்ணாவின் புற போராட்டங்களாக எதிரிகளுடன் சண்டை, தான் குழுவுடன் மோதல் போன்றவையும், இரண்டாம் பாதி திண்ணாவின் அக போராட்டமாக கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எழுதப்பட்டிருந்த விதமும் நன்று. ஸ்டீபன் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை நன்று. ஆக்ஷன் காட்சி, எமோஷன் என எல்லாவற்றிலும் உயிரைக் கொடுத்து வாசித்திருக்கிறார். கடவுள் நம்பிக்கை என்பது மற்றவர் மீது திணிப்பது அல்ல, விரதம் இருக்கவேண்டும் என எந்தக் கடவுள் சொன்னது? பக்தி என்பது கடவுள் அருகிருப்பது தானே தவிர உங்களை வருத்திக் கொள்வது அல்ல என சில வசனங்களும் கூட கவனம் பெறுகின்றன.
இந்தப் படத்தின் பிரச்சினை என்னவென்றால், இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்பதே. எழுத்தளவிலும், பல ஐடியாக்களும் மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால் அது செய்யப்பட்ட விதம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். முதல் பாதியில் ஒரு பிரச்சனை, இரண்டாம் பாதியில் இன்னொரு பிரச்சனை என பிரித்திருந்தாலும், இரண்டும் தனித்தனி படம் போலவே இருக்கிறது. படத்தின் மையமே தின்னா எப்படி சிவபக்தன் ஆகிறார் என்பதே. ஆனால் அந்த இடத்திற்கு வந்து சேர்வதே படத்தின் கடைசி 40 நிமிடங்களில் தான். ஆனால் அவையும் ஒரு சீரியல் தரத்திலேயே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தில் வரும் சில குரூர காட்சிகள், கவர்ச்சி போன்றவற்றை சற்று குறைத்திருக்கலாம்.
தொழிநுட்ப ரீதியாக பல இடங்களில் பிசிறு தட்டுகிறது. பட்டப்பகலில் எடுத்த காட்சியை இரவு போல மாற்றி காட்டுவது துவங்கி, பல கிரீன் மேட் காட்சிகள் என அத்தனையும் படு மோசம்.
இது போன்ற குறைகளைக் கடந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி உருக்கமாகவே அமைந்திருக்கிறது.
கதையாக கேட்டு வளர்ந்த ஒன்றை பெரிய திரையில் பார்க்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இது ஒருமுறை பார்த்து ரசிக்க கூடிய படம் தான். ஆனால் சினிமாவாக சுவாரஸ்யம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது திருப்தியான படமாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.