Jiiva - Thalaivar Thambi Thalaimaiyil
JiivaThalaivar Thambi Thalaimaiyil

பஞ்சாயத்து தலைவராக ஜீவா... கலாட்டா, காமெடி ஈர்க்கிறதா? | Thalaivar Thambi Thalaimaiyil Review

ஜீவாவுக்கு இது ஒரு புத்துணர்ச்சியான வேடம். இதற்கு முன்பு வரை அவர் பல காமெடி படங்கள் செய்திருந்தாலும், ஒரு சின்ன ஊருக்குள், இரு குடும்பங்களுக்குள் இடையே சிக்கிக் கொண்டு அவர் திணறும் காமெடிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
Published on
பஞ்சாயத்து தலைவராக ஜீவா...கலாட்டா, காமெடி ஈர்க்கிறதா?(2.5 / 5)

இருவரின் பகையை சமாளிக்க போராடும் பஞ்சாயத்து தலைவரின் கதையே `தலைவர் தம்பி தலைமையில்'

ஜீவரத்தினம் (ஜீவா) மாட்டிப்புதூர் ஊரின் பஞ்சாயத்து தலைவர். ஊரின் எந்த தேவை என்றாலும் முன்னின்று செய்யும் ஜீவா, விரைவில் தேர்தல் வர இருப்பதால் தன் கட்சிக்கு நற்பெயர் எடுத்துக் கொடுக்கும் பொறுப்புக்கு ஆளாகிறார். அந்த ஊரில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் இளவரசு (இளவரசு) மற்றும் மணி (தம்பி ராமையா) இருவருக்கும் இடையே பெரிய பகை. இந்த சூழலில் தன் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்கிறார் இளவரசு. ஒரு பக்கம் மார்த்தாண்டத்தில் இருந்து மாப்பிளை வீட்டார் திருமணத்துக்காக கிளம்பி வந்து கொண்டிருக்க, பெண் வீட்டில் கல்யாண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்குகிறார் ஜீவா. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியை சேர்ந்த தவிடு (ஜென்சன் திவாகர்) எப்படியாவது இதில் தானும் பெயர் சம்பாதிக்க முயற்சிக்கிறார். இந்த நேரம் பார்த்து மணி வீட்டில் நடக்கும் ஒரு சம்பவம், இந்தக் கல்யாணத்திற்கு தடையாக வந்து நிற்கிறது. அதன் பின் என்ன ஆனது? தவிடு என்ன சதி வேலைகளை செய்கிறார்? அவற்றை எல்லாம் ஜீவா எப்படி சமாளிக்கிறார் என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.

Jiiva
Jiiva

ஒரு எளிமையான, இயல்பான கதையை சில காமெடிகளை சேர்த்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சஹாதேவ். அதற்குள் மனிதர்களின் கௌரவம் சார்ந்து உருவாகும் ஈகோவையும், சமூகத்தின் பொது புத்தியால் விளையும் மோசமான விஷயங்களையும் கேள்வி கேட்கிறது படம்.

ஜீவாவுக்கு இது ஒரு புத்துணர்ச்சியான வேடம். இதற்கு முன்பு வரை அவர் பல காமெடி படங்கள் செய்திருந்தாலும், ஒரு சின்ன ஊருக்குள், இரு குடும்பங்களுக்குள் இடையே சிக்கிக் கொண்டு அவர் திணறும் காமெடிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கிறது. வரும் ஒவ்வொரு சிக்கல்களையும் சமாளிப்பது, இளவரசு, தம்பிராமையா இருவரின் மோதலை தடுக்க முயல்வது, மணப்பெண்ணிடம் ஆறுதலாக பேசுவது என நிறைய காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அடுத்தபடியாக கவனிக்க வைப்பது தம்பிராமையா. பல படங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் அவரின் காமெடி சிறப்பாக இருக்கிறது. அதிலும் "இப்போ எனக்கு 9 வயசு, திருவிழாவுல அப்பாவ தேடிகிட்டு இருக்கேன்" என சொல்லும் இடம் எல்லாம் பிளாஸ்ட். எப்படியாவது ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு அதில் ஒரு பேரெடுக்கலாம் என முயலும் ஜென்சன் கவனிக்க வைக்கிறார். வருங்கால மனைவி பற்றி மட்டுமே யோசிக்கும் மார்த்தாண்டம் மாப்பிள்ளையும், அவர் குடும்பத்தின் மார்த்தாண்டம் பாஷையும் படத்துக்கு கூடுதல் ஃபிளேவர் சேர்க்கிறது.

TTT
TTT

பாப்லு அஜூ ஒளிப்பதிவு இந்த எளிமையான களத்தையும் மிக அழகாக்கி இருக்கிறது. சில சிங்கிள் ஷாட் காட்சிகள், க்ளைமாக்ஸ் கலாட்டா என பல இடங்களில் படத்திற்கு பலம் சேர்க்கிறது. மேலும் இது FLAT ஆக உருவாகி இருப்பதால், நல்ல Epiq திரையில் பார்ப்பது சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். விஷ்ணு விஜய் பின்னணி இசை படத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப வலு சேர்க்கிறது. மனிதர்களின் ஈகோ எப்போதும் அழிவை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதையும், பெண்கள் மீதான அடக்குமுறை எவ்வளவு மனிதத்தன்மை அற்றது என்பதையும் சொல்லாமல் சொல்லிய விதமும், ஒரு தண்ணீர் தொட்டியில் தொடங்கும் பிரச்னை, அதே தொட்டியில் முடிவதும் என எழுத்தாக படத்தில் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள்.

இப்படத்தின் சிக்கல் எனப் பார்த்தால், படம் முழுக்க காமெடி படம் என்ற உணர்வு இருந்தாலும், ரசித்து, வெடித்து சிரிக்கும் தருணங்கள் ஒன்றிரண்டு தான் இருக்கிறது. அப்படியான விஷயங்கள் குறைவாக இருப்பது, 2 மணிநேரத்துக்கும் குறைவாக ஓடும் இப்படத்தையும் சோர்வாக உணர வைக்கிறது. அவற்றை மட்டும் அதிகமாக வைத்திருந்தால் ஒரு தரமான காமெடி படமாக இருந்திருக்கும்.

மொத்தமாக பார்க்கையில் ஆங்காங்கே சோர்வளித்தாலும், ஒரு சுவாரஸ்யமான காமெடி படமாக ஈர்க்கிறது இந்த `தலைவர் தம்பி தலைமையில்'.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com