vikram prabhu shraddha srinath
vikram prabhu shraddha srinathirugapatru

Irugapatru | கணவன் மனைவிக்குள்ள சண்டை வர கணவன் மனைவியா இருந்தாலே போதுமா... என்னங்க இது..!

மேலும் படத்தில் எந்த இடத்திலும் விவாகரத்து தவறானது என்ற கருத்தை முன் வைக்காமல் இருந்தது குறிப்பிட்டு பாராட்ட வேண்டியது.
irugapatru(3.5 / 5)

கணவன் மனைவிக்கு இடையே வரும் சிக்கல்களுக்கு பிரிவு மட்டும் தான் தீர்வா என்பதை விவாதிக்கிறது `இறுகப்பற்று’

மனோகர் (விக்ரம் பிரபு) - மித்ரா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்), ரங்கேஷ் (விதார்த்) - பவித்ரா (அபர்ணதி), அர்ஜுன் (ஸ்ரீ) - திவ்யா (சன்யா ஐயப்பன்) இந்த மூன்று தம்பதிகள் தங்கள் திருமண உறவில் இருக்கும் பிரச்னைகளால் திணறுவதும், அதிலிருந்து எப்படி வெளியேறுகிறார்கள் என்பதும் தான் படத்தின் மையக் கதை. ரங்கேஷ் - பவித்ரா தம்பதி தங்கள் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள். ரங்கேஷுக்கு தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதை மனைவியிடம் சொல்கிறார். அர்ஜுன் - திவ்யா காதல் திருமணம் செய்து, மகிழ்ச்சியாக இல்லறத்தை துவங்கினாலும் இப்போது அவர்களிடம் அந்த மகிழ்ச்சி இல்லை. எதற்கெடுத்தாலும் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் தான். மனோகர் - மித்ரா தம்பதி இவர்களிலிருந்து மிக வித்தியாசமானவர்கள். அவர்களிடையே எந்த சண்டையும் வந்ததில்லை, மிக அழகாக செல்கிறது வாழ்க்கை. காரணம் மித்ரா. விவாகரத்து பெற வரும் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பவர். கணவன் - மனைவி சண்டைகளுக்கான வேர் காரணம் என்ன என்பது தெரிந்து, அவை எல்லாம் தன் குடும்ப வாழ்வை பாதிக்கக்கூடாது என திட்டமிட்டு வாழ்கிறார். இருந்தும் ஒரு பிரச்னை வருகிறது. அதன் பின் இந்த மூன்று ஜோடிகளும் என்ன செய்தனர் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் யுவராஜ் தயாளன் இந்த கதையை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். கதையின் பிரதானமே மூன்று ஜோடிகள் தான், வெளியிலிருந்து வரும் வில்லன் கதாபாத்திரம் இல்லை. படத்தின் வில்லனே தம்பதிகளுக்கு நடுவே வரும் பிரச்சனைகள் தான். அதுவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் வரும் சிக்கல்தான். அந்த மனப் போராட்டங்களை அவர்கள் எதிர்கொள்வதை அழகான திரைக்கதை மூலம் கூறியிருக்கிறார். நடிகர்கள் அனைவரும் அதற்கு மிகப் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். தான் நினைத்ததை செய்ய முடியாதது பற்றி புலம்பும் இடத்தில் விதார்த், உடல் பருமனை பற்றி சொன்னதும் நொறுங்கிப் போகும் இடத்தில் அபர்ணதி, தான் செய்தவற்றை நினைத்து உடைந்து அழும் இடத்தில் ஸ்ரீ, கணவன் கொடுக்கும் மன ரீதியான துன்புறுத்தலை வெளியில் காட்ட முடியாமல் திணறும் இடத்தில் சன்யா, தன் மனைவியின் அன்பு உண்மைதானா என நினைத்து கலங்கும் இடத்தில் விக்ரம் பிரபு, கணவனை எப்படி கையாள்வது எனக் குழம்பும் இடத்தில் ஷ்ரத்தா என ஒவ்வொரு நடிகரும் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள்.

இறுகப்பற்று
இறுகப்பற்றுஇறுகப்பற்று

மணவாழ்க்கையில் சிக்கலை சந்திக்கும் தம்பதிகளின் சிக்கல் ஒரு புறம் பேசப்படும் போது, பிரச்சனைகளே நடந்து விடக்கூடாது என பயந்து ஓடுவதும் ஒருவித பிரச்சனை தான் என்பதையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. ”கணவன் மனைவிக்குள்ள சண்ட வர்றதுக்கு பெரிய காரணமெல்லாம் தேவையில்ல, அவங்க கணவன் - மனைவியா இருக்கறதே காரணம் தான்” என்பது போன்ற பல வசனங்கள் பளிச் என கவனம் ஈர்க்கின்றன. கூடவே குடும்ப வன்முறை செய்யும், இன்னொருவருடன் தொடர்பு வைத்திருக்கும், போதைக்கு அடிமையானவர் மாதிரியான நபராக கதாபாத்திரத்தை எழுதாமல் இருந்தது ஸ்மார்ட் சாய்ஸ். மாறாக மிக நுட்பமாக கணவன் - மனைவிக்கு இடையே புரிதலில் உள்ள குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் படத்தில் எந்த இடத்திலும் விவாகரத்து தவறானது என்ற கருத்தை முன் வைக்காமல் இருந்தது குறிப்பிட்டு பாராட்ட வேண்டியது. மனரீதியான குழப்பங்களும், நாம் கவனிக்க மறந்த விஷயங்களும் ஒரு பிரிவுக்கு காரணமாக அமைய இடம் தராமல், அதற்கான காரணத்தை கண்டடைவது முக்கியம் என்பதைச் சொல்கிறது படம். மனைவி தன்னைவிட புத்திசாலி எனத் தெரியும் போது ஆணுக்குள் எழும் ஈகோ, கணவருடன் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று பயந்து பயந்து அதுவே ஒரு பிரச்சனையாக உருவெடுக்கும் இடம், உடல் எடை குறைப்பது தனக்காக என உணரும் கதாபாத்திரம் என படத்தில் பல இடங்கள் சிறப்பான காட்சிகளாக அமைந்திருந்தது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பிரியாதிரு பாடல் அத்தனை அழகு. படத்தின் பல எமோஷனலான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது அவரின் பின்னணி இசை. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு அழுத்தமான கதைக்கு ஏற்ப காட்சிகளைக் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் `இறுகப்பற்று’ இந்த வருடத்தில் வெளியான மிக அழகான படம். கண்டிப்பாக தம்பதிகளும், குடும்பங்களும் இணைந்து சென்று பார்க்க வேண்டிய படம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com