கானா கலைஞர்களின் உலகத்தை அழுத்தமாகப் பேசியதா ‘மீசைய முறுக்கு 2’? | Meesaiya Murukku 2 Review
கானா கலைஞர்களின் உலகத்தை அழுத்தமாக பேசியதா ‘மீசைய முறுக்கு 2’?(2 / 5)
கானா இசைக்கலைஞனின் அங்கீகாரத்துக்கான போராட்டமே ‘மீசைய முறுக்கு 2’.
தாத்தா கானா தாஸ், மகன் டைகர் சிவா, பேரன் ஜீவா என மூன்று தலைமுறை இசைக் கலைஞர்கள் தங்களுக்கான அங்கீகாரத்துக்காகப் போராடுகிறார்கள். flashbackல் இரண்டு நிகழ்காலத்தில் ஒன்று என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் ஆதி. நிகழ்கால தாத்தாவாக கருணாஸ், அப்பாவாக பாபா பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் இவர்களின் இசை கனவுக்கு வரும் தடைகள் என்ன? அவர்கள் எதிர்கொள்ளும் அவமதிப்பு, அரசியல், ஏற்றத்தாழ்வு என்ன? அவற்றைத் தாண்டி அவர்களால் சாதிக்க முடிந்ததா என்பதுதான் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் மையக்கரு.
‘இது உயர்ந்த இசை, இது தாழ்ந்த இசை’ என்ற பாகுபாட்டை ஒரு கமர்ஷியல் படத்தின் வழியாகப் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இசை உலகில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, அரசியல், நெப்போட்டிசம் போன்ற விஷயங்களையும் கதை தொட்டுச் செல்கிறது.
ஆதி தனது வழக்கமான ஸ்டைலில் கலர்ஃபுல்லான காட்சிகளுடனும் எனர்ஜியான பாடல்களுடனும் படத்தை நகர்த்துகிறார். குறிப்பாக, பாடல்கள் தியேட்டரையே ஒரு கான்சர்ட் VIBE-க்கு கொண்டு செல்கின்றன. படத்தின் மிகப்பெரிய பலமாக இசை இருக்கிறது. இசை உலகில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, அரசியல், நெப்போட்டிசம் போன்ற சீரியஸான விஷயங்களை கமர்ஷியல் கதைக்குள் பேச முயற்சித்திருப்பது கவனிக்க வைக்கிறது. ஆதி - ஹர்ஷத் கூட்டணியின் காமெடி காட்சிகளும் பல இடங்களில் நன்றாகவே வேலை செய்கின்றன. கதையின் சீரியஸ் தன்மைக்கு இடையே இந்தக் காட்சிகள் ஓரளவுக்கு ரிலீஃப் கொடுக்கின்றன. தாத்தாவாக வரும் கருணாஸ் மிகச் சிறப்பான தேர்வு. அவர் வரும் காட்சிகளும் சரி, அந்தப் பாத்திரத்தை எழுதி இருந்த விதமும் சரி நேர்த்தியாக இருந்தது. அப்பாவாக வரும் பாபா பாஸ்கரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சைத்ரா, கேத்திகா ஷர்மா, ரம்யா என மூன்று நாயகிகள். இதில் சில காட்சிகளே வந்தாலும் சைத்ரா நடிப்பு அழுத்தமாகப் பதிகிறது. ரம்யா ரங்கநாதனும் ஒரு நல்ல நடிப்பை வழங்குகிறார்.
பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் எனர்ஜியை அப்படியே திரையில் கொண்டுவருகிறது. குறிப்பாக, பாடல் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் காட்சிகளில் கேமரா ஒர்க் படத்தின் கொண்டாட்ட மனநிலையை வலுப்படுத்துகிறது.
இந்தப் படத்தின் குறைகள் என்றால், படம் தொடங்கியதும் 1979 காலகட்டத்தைச் சேர்ந்த காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்கின்றன. ஆனால், கதை நிகழ்காலத்துக்கு வந்த பிறகு அதன் வேகம் குறைந்து, சற்றுப் போரடிக்கத் தொடங்குகிறது. இரண்டாம் பாதியில் கதை வேகம் எடுக்கிறது. ஆனால், அந்த வேகம் நீண்ட நேரம் தொடராமல் மீண்டும் தடுமாற ஆரம்பிப்பது திரைக்கதையின் முக்கியமான குறையாக இருக்கிறது.
மேலும், கானா இசைக்கலைஞர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்காதது பற்றி பேசும் படத்தில், LGBTQ சமூகத்தை வைத்து இடம்பெறும் சில தேவையற்ற காமெடி காட்சிகள் படத்தின் மையக் கருத்துடன் முரண்படுகின்றன. குறிப்பாக ‘வானவில்லே’ பாடலை வைத்து கிண்டல் செய்வதும், அதற்குப் பிறகு ஹீரோ மூலமாக அதைச் சமாளிக்கும் வகையில் வசனம் வைப்பதும் சரியானதாக இல்லை.
மிக முக்கியமாக, கானா இசைக்கலைஞர்களின் பிரச்னையை மையமாக வைத்து கதை தொடங்கினாலும், அந்தப் பிரச்னையை அழுத்தமாக உணரவைக்கும் காட்சிகள் படத்தில் போதுமான அளவில் இல்லை. இத்தனை பெரிய களத்தை எடுத்துக்கொண்ட நிலையில், அதன் சமூகப் பின்னணியை இன்னும் ஆழமாக பதிவு செய்திருக்கலாம்.
‘மீசைய முறுக்கு 2’ தேர்ந்தெடுத்திருக்கும் களம் சுவாரஸ்யமானது. கானா இசை, அதன் கலைஞர்களுக்கான அங்கீகாரம், இசை உலகில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, அரசியல், நெப்போட்டிசம் எனப் பல விஷயங்களை ஒரே கமர்ஷியல் படத்தில் பேச முயற்சித்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி. ஆனால், இந்தக் கருவை இன்னும் அழுத்தமாகவும் ஆழமாகவும் கையாண்டிருந்தால் படம் வேறொரு அனுபவத்தைத் தந்திருக்கும். குறிப்பாக, கானா கலைஞர்களின் போராட்டத்தை உணர வைக்கும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில், அருமையான களத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது போல, அதையே அழுத்தமான திரைக்கதையுடன் கொடுத்திருந்தால் ‘மீசைய முறுக்கு 2’ இன்னும் சிறப்பான சினிமா அனுபவமாக அமைந்திருக்கும்.

