Mahesh Babu | Guntur Kaaram
Mahesh Babu | Guntur KaaramGuntur Kaaram

Guntur Kaaram Review | என்ன மிளகாய் மட்டும் தான் இருக்கு..!

படத்தின் பல காட்சிகளில், டப்பிங் தாறு மாறு நான் சிங்க்கில் இருக்கிறது. நடிகர்கள் உதடு எதையோ உச்சரிக்க, வசனம் வேறொன்றாக ஒலிக்கிறது. என்னதான் டப்பிங்கில் பாத்துக்கலாம் மொமண்ட்டாக இருந்தாலும், அதற்கு ஒரு எல்லை இல்லையா?.
Guntur Kaaram(1.5 / 5)

அம்மாவுக்கும், அந்த அம்மாவால் கைவிடப்பட்ட மகனுக்கும் இடையேயான பாசத்தில், டன் கணக்கில் வர மிளகாய் மிக்ஸ் செய்தால் அதுவே `குண்டூர் காரம்’

ரமணா (மகேஷ்பாபு) குண்டூரில் தன் குடும்ப தொழிலான மிளகாய் விற்பனையை பார்த்து வருகிறார்.ரமணா சிறுவனாக இருந்தபோதே அவனின் தந்தை சத்யம் (ஜெயராம்) ஒரு கொலை வழக்கில் சிறை செல்கிறார். அவன் தாய் வசுந்தராவும் (ரம்யா கிருஷ்ணன்) அவரை கைவிட்டு, தன் தந்தை வெங்கடஸ்வாமி (பிரகாஷ்ராஜ்) வற்புறுத்தலால் வேறொரு திருமணம் செய்து கொள்கிறார். 25 வருடங்கள் கழித்து சத்யம் சிறையிலிருந்து விடுதலையாகி மகன் ரமணாவுடன், என்றாவது தன் மனைவி வசுந்தரா திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் வசித்து வருகிறார். வசுந்தராவோ அமைச்சராகிறார். இது பிடிக்காத எதிரிகள் வசுந்தராவின் கடந்த காலத்தையும், அவர் தன் மகனை கைவிட்டு வந்தவர் என்ற உண்மையையும் பொது மக்களுக்குத் தெரிவிப்போம் என மிரட்டுகிறார்கள். எனவே வெங்கடஸ்வாமி ஒரு திட்டமிடுகிறார். ரமணாவை அழைத்து, தனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தனக்கு எந்த உரிமைகளும் வேண்டாம் என எழுதித் தரும்படி கட்டளையிடுகிறார். ரமணா தன் உறவை உதறினாரா? அல்லது தன் தாயுடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

த்ரிவிக்ரம் ஃபேமிலி ட்ராமா படங்கள் எடுப்பதில் வல்லவர் என்பது நாம் அறிந்ததே. அவரின் Athadu, Attarintiki Daredi, S/O Satyamurthy இதற்கு முன்பு வெளியான Ala Vaikunthapurramuloo வரை பல படங்களில் அதனை நிரூபித்திருக்கிறார். போலவே `Guntur Kaaram' படமும் ஃபேமிலி ட்ராமா தான். இந்தப் படத்தின் பலம் என்னவென்றால், இயக்குநர் த்ரிவிக்ரம் எப்போதும் திறமையாக கையாளும் விஷயங்களை இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். எமோஷனல் விஷயங்களை வைத்து அதை சுற்றி எப்படி ட்ராமாவை உருவாக்குவது என்பதை இப்படத்திலும் அழுத்தமாக செய்திருக்கிறார்.

அடுத்த மிகப்பெரிய பலம் மகேஷ்பாபு. படம் முழுக்க ப்ளாஸ்ட் மோடிலேயே இருக்கிறார். சுர்ர்ரென கார நெடி ஏறுவதைப் போன்ற ஒரு காரசாரமான ரோல். சண்டைக்காட்சிகள், பிரகாஷ்ராஜிடம் திமிராக பேசுவது, வெண்ணிலா கிஷோருடன் செய்யும் காமெடிகள், அம்மா பற்றி ஏக்கத்தோடு பேசுவது என அனைத்தும் நன்றாக செய்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு எக்ஸ்டண்டட் கேமியோ ரோல் தான். ஆனால் எமோஷனலான காட்சிகளில் அழுத்தமாக மனதில் பதிகிறார். பிரகாஷ்ராஜூக்கு தந்திரமான ஒரு வில்லன் பாத்திரம், அதை லெஃப்ட் ஹேண்டில் அசால்ட்டாக செய்திருக்கிறார். மேலும் த்ரிவிக்ரமின் சிக்னேசர் ரைமிங் டயலாக்குகள் இதிலும் மிஸ்ஸாகவில்லை.

ஆனால் படத்தின் குறை எனப் பார்த்தால், படத்தின் கதையைத் தான் சொல்ல வேண்டும். த்ரிவிக்ரமின் முந்தைய படங்களில் எல்லாம் (Agnyaathavaasi தவிர) எண்டெர்டெய்ன்மெண்ட் கொஞ்சமும் குறையாது. மேலும் அந்த எண்டெர்டெய்ன்மெண்ட் படத்தின் கதையுடனே நகரும். ஆனால் குண்டூர் காரத்தில், கதைக்கு தேவையே இல்லாத காட்சிகள் மட்டுமே வரிசையாக அடுக்கியிருக்கிறார்கள். ஒரு சிலையை உடைத்ததற்காக நடக்கும் சண்டைக் காட்சி, குடவுனுக்குள் `ஒக்கடு’ படத்தில் வரும் `செப்பவே சிறுகாலி’ பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடுவது, பாபுஜி என்ற கதாப்பாத்திரத்தை வைத்து நடக்கும் சண்டைக் காட்சி எனப் பல விஷயங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இது போன்ற ஃபில்லர் காட்சிகள் மட்டுமே பிரதானமாக படத்தில் இருக்கிறது. அவை கதைக்கு தேவை இல்லை என்பதோடு சேர்த்து, சுவாரஸ்யமாகவும் இல்லை என்பதுதான் பிரச்சனையே.

Mahesh Babu | Guntur Kaaram
Ayalaan Review | ஏலியன் VFX செம்ம... அப்ப அயலான்..?

இந்தப் படத்தில் கதை இல்லை என்பதில், நான் சொல்ல வருவது இதைத்தான். த்ரிவிக்ரம் ஒரே பேர்டனில் தான் தனது எல்லா படங்களையும் இயக்கிவருகிறார். Athadu படத்தில் ஹீரோ, தனக்கு அடைக்கலம் தந்த குடும்பத்தை ஆபத்திலிருந்து காக்கிறார், இறுதியில் அக்குடும்பத்தில் ஒருவராக இணைவார். Attarintiki Daredi படத்தில் ஹீரோ தனது தாத்தாவின் ஆசைக்காக, குடும்பத்திலிருந்து கோபித்துக் கொண்டு சென்ற அத்தையை சமாதானம் செய்து மறுபடி குடும்பத்தை ஒன்று சேர்ப்பார். S/O Satyamurthy படத்தில் ஹீரோ, தன் தந்தை மீது ஏற்பட்ட களங்கத்தை துடைத்து, சொத்துக்களை இழந்து மிடில் க்ளாஸான தன் குடும்பத்துக்கு மறுபடி வசதியான வாழ்வை கொடுப்பார். த்ரிவிக்ரம் இதற்கு முன் இயக்கிய Ala Vikuntapuramlo படத்தில் கூட, ஹீரோ, தனது உண்மையான குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட அதை சரி செய்து குடும்பத்தை காப்பார். இந்தப் படங்களில் எல்லாம் ஒவ்வொரு காட்சியும் கதைக்குத் தேவையானதாக இருக்கும். ஒருவேளை படத்திலிருந்து விலகியிருக்கும் காட்சிகளாக இருந்தால் அவையும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்த மாதிரி விஷயங்கள் தான் குண்டூர் காரத்தில் மிஸ்ஸிங்.

கதாப்பாத்திரங்களாகவும் மகேஷ்பாபு, ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் இம்மூவரைத் தவிர வேறு எவருக்கும் முக்கியத்துவம் இல்லை. ஸ்ரீலீலா இந்தப் படத்திலும் ஒரு ஜெனிலியா மோடிலேயே நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி சௌத்ரி ஹீரோவின் வீடெங்கிலும் நடக்கிறார், ஓடுகிறார். வீட்டுக்கு யாரவது வருகிறார் என்றால் அதை வீட்டினரிடம் அறிவிக்கிறார். வீட்டில் மது அருந்தும் ஹீரோவுக்கும், அவரது தந்தைக்கும் மிக்ஸிங்கிற்கு தண்ணீர், சோடா, சைட் டிஷ் வழங்கும் பார் டெண்டராக இருக்கிறார். ஹீரோ அசதியாக இருந்தால் மசாஜ் செய்கிறார். இந்த அளவிலேயே இருக்கிறது ஒவ்வொரு பாத்திரங்களும்.

படத்தின் பல காட்சிகளில், டப்பிங் தாறு மாறு நான் சிங்க்கில் இருக்கிறது. நடிகர்கள் உதடு எதையோ உச்சரிக்க, வசனம் வேறொன்றாக ஒலிக்கிறது. என்னதான் டப்பிங்கில் பாத்துக்கலாம் மொமண்ட்டாக இருந்தாலும், அதற்கு ஒரு எல்லை இல்லையா?.

படத்தில் ஹீரோவின் குணாதீசியத்தை பிரதிபலிக்கும் படி படத்திற்கு ரெட் தீமில் ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மனோஜ் பரமஹம்சா. தமனின் பாடல்களில் தம் மசாலா, குர்ச்சி ரெண்டு பாடல்களும் ஃபயர், மற்ற ரெண்டு பாடல்க பேக் ஃபயர். ஏனென்றால் ஓ பேபி, `புஷ்பா’ படத்தில் வந்த சாமி சாமி பாடலின் ஸ்லோ வெர்ஷன் போல இருக்கிறது. நன்றாக இருக்கும் குர்ச்சி பாடல் கூட `சரைனோடு’ படத்தில் வந்த ப்ளாக்பஸ்டரு பாடல் போன்றே இருந்தது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும், அதிலும் இதே தேஜாவூ ஃபீல்.

மொத்தத்தில் படத்தில் மாஸ் பில்டப், எமோஷன், காமெடி என எல்லா மசாலாவும் அதிகமாக இருந்தாலும், மிக முக்கியமான கதை என்ற வஸ்த்து மட்டும் மிஸ்ஸிங்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com