The Equalizer 3 | 'நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா..?' பல ஆண்டு கேள்விக்கு விடை சொல்லும் Equalizer 3..!
The Equalizer 3(3.5 / 5)
ஓய்வு காலம் நோக்கி நகரும் ராபர்ட் மெக்கால் , தன் புது வாழ்விடத்தின் மனிதர்களுக்காக போராடும் களமே இந்த The equalizer 3.
படத்தின் கதை மிகவும் சிம்பிளானது. ஒரு பக்கம் டிரக் மாஃபியாவுக்கான பில்ட் அப் காட்சிகள் இருந்தாலும், அந்த கும்பல் எல்லாம் ராபர்ட் மெக்காலுக்கு (டென்சல் வாஷிங்டன்) முன்னர் ஒன்றுமே இல்லை என்பதால் அந்தக் காட்சிகள் ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகின்றன. அந்தக் கும்பலை டக்கோட்டா ஃபேனிங் பிடிக்க அவ்வப்போது உதவி செய்கிறார் டென்சல் வாஷிங்டன். அதுவும் கிளைக்கதை தான். இப்போது டென்சல் வாஷிங்டன் ஏற்றிருக்கும் ராபர்ட் மெக்காலின் கதைக்கு வருவோம்.
இத்தாலியின் சிசிலியில் இருக்கும் ஓர் இடத்தில் எல்லோரையும் சுட்டுவீழ்த்திவிட்டு, வெளியே வரும் ராபர்ட் மெக்காலை அவர் எதிர்பார்த்திராத நொடியில் ஒருவர் சுட்டுவிட, வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். ஆனால், அவருக்கான காலம் என்பது முடிவுறவில்லை என்பதை சில தினங்களில் அவரே உணர்ந்துகொள்கிறார். அவரைக் காப்பாற்றிய அலுவலருக்கும், அந்த மக்களுக்கும் அவர் செய்யும் நன்றிக்கடனே மீதிப்படம்.
தந்தை, தாயைக் கொன்றவரை பழி வாங்கும் கதைகளில் ஆரம்பித்து தற்போது மகனை கொன்றவர்களைப் பழி வாங்கும் படலம் என நீண்டிருக்கும் ரஜினிக்கு பக்காவாக செட்டாகும் ஒன்லைன். டென்சல் வாஷிங்டனுக்கு அதைவிட பக்காவாகப் பொருந்திப்போயிருக்கிறது.
தளபதி 68 படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் விஜயும், வெங்கட் பிரபுவும் அமெரிக்காவிலேயே டென்சல் வாஷிங்டன் நடித்த இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார்கள். டென்சலின் தீவிர ரசிகரான விஜயின் ஃபேன் பாய் மொமன்ட்டை வெங்கட் பிரபு ட்விட்டரில் பகிர பற்றிக்கொண்டது இணையம். தமிழ்நாட்டில் ஓவர்நைட்டில் denzel washington என்னும் keyword கூகுள் தேடுதலில் முதலிடத்துக்கு வந்திருக்கிறதாம்.
டென்சல் வாஷிங்டன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றெல்லாம் எழுதத் தேவையில்லை. ஏனெனில் எண்ணற்ற ஆஸ்கார் பரிந்துரைகளும், அவர் பெற்றிருக்கும் விருதுகளுமே அவரின் நடிப்புத்திறன் பற்றி சொல்லிவிடும். equalizer படங்களுக்கும் ரசிகர்களிடம் அதிகளவிலான வரவேற்பு எப்போதுமே உண்டு.

இந்தப் படத்தில் அதிரடி சண்டைகளோ, பரபர சேஸிங்களோ எதுவும் இல்லை. ஆனால், எல்லாமே கிளாஸாக எடுக்கப்பட்டிருக்கிறது. பப்புக்குள் வந்து அலுவலர் ஜியோ பினோஸியை ஒரு கும்பல் மிரட்டுகிறது. டென்சல் வாஷிங்டன் அந்தக் கும்பலின் தலைவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார் அவ்வளவு தான். "என்னடா பெரிய ஆளா நீ" என மிரட்டும் தொனியில் டென்சலிடம் வர, " உன்னை தயார்படுத்துக்கிறேன் . அவ்வளவு தான் "என பதிலளிப்பார் டென்சல் வாஷிங்டன். கிட்டத்தட்ட டென்சலுக்கு படம் முழுக்க எழுதப்பட்ட எல்லா வசனங்களுமே, " நான் அடிச்சா நீ செத்துடுவடா " டைப் தான். அவ்வளவு கூலாக நடித்துக்கொடுத்திருக்கிறார்.
குண்டடி பட்டு உயிருக்குப் போராடும் ராபர்ட் மெக்காலிடம் , " நீங்க நல்லவரா கெட்டவரா " என வினவுவார் மருத்துவரான என்சோ அரிஸியோ. "தெரியலை" என்பார் ராபர்ட் மெக்கால். இந்தக் கேள்விக்கு தெரியலைன்னு பதில் சொல்றவன் நிச்சயம் நல்லவனாத்தான் இருப்பான் என்பார் என்சோ. இவ்வளவு எளிதாக ராபர்ட் மெக்கால் என்னும் கதாபாத்திரத்திற்கான தன்மையை சொல்லிவிடமுடிகிறது. படத்தின் நிறைய வசனங்கள் கவித்துவமாக எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் ரிச்சர்ட் வெங்கிற்கு நன்றிகள். ஆன்டனி ஃபுக்கோவின் இயக்கம் தான் இந்த மெல்லிய கதைக்கு அவ்வளவு அடர்த்தியைக் கொடுத்திருக்கிறது. மெக்கால் குணமாகிவிட்டார் என்பதையெல்லாம் ஒரு ஷாட்டில் கடந்துபோகிறார்கள். அந்த சின்ன நகரமும், அந்த மனிதர்களும் அவ்வளவு இனிமையக இருக்கிறார்கள். ஒரு பெரும் காட்டை தீக்கிரையாக்க ஒரு தீக்குச்சி போதும் என்பதாக அந்த ஊருக்குள் வருகிறது போதை மருந்து மாஃபியா. அந்த ஊரின் தேவதூதனான ராபர்ட் மெக்கால் அங்கிருக்கும் போது எந்த மாஃபியாக்கள் தான் என்ன செய்ய இயலும்.

Robert Richardson னின் நேர்த்தியான ஒளிப்பதிவும் Marcelo Zarvos இன் பின்னானி இசைஅமைப்பும் படத்துக்கு பக்க பலம். அதிரடி, சரவெடி என மின்னல்வேக சண்டைக் காட்சிகளுக்குப் பழகிப்போன நம் கண்களுக்கு, அமைதியான , ஆர்ப்பாட்டமில்லாத அனுபவத்தை தந்திருக்கிறது ராபர்ட் ரிச்சர்சனின் கேமரா. கன் பாயின்ட்டில் ராபர்ட் மெக்காலை வைத்திருக்கும் காட்சி; ஜியோவை ஊருக்கும் முன் மன்றாட செய்யும் காட்சி; க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி என பல இடங்களில் ஒளிப்பதிவு அட்டகாசம்.
ஆயிரம் யானை பலம் கொண்ட ஒருவனின் வீரத்தை உலகத்துக்குச் சொல்ல ஒவ்வொரு முறையும் அவன் ஆயிரம் யானைகளைக் கொல்ல வேண்டியதில்லை. மாறாக The equalizer3ல் டென்சல் வாஷிங்டன் நடித்ததை போட்டுக்காட்டினாலே போதும்.