படத்தின் ஒரே ஆறுதல் 2 மணி நேரத்தில் படம் முடிவடைகிறது என்பதுதான்!- `கேப்டன்’ பட விமர்சனம்!

படத்தின் ஒரே ஆறுதல் 2 மணி நேரத்தில் படம் முடிவடைகிறது என்பதுதான்!- `கேப்டன்’ பட விமர்சனம்!
படத்தின் ஒரே ஆறுதல் 2 மணி நேரத்தில் படம் முடிவடைகிறது என்பதுதான்!- `கேப்டன்’ பட விமர்சனம்!

காட்டுக்குள் இருக்கும் வினோத உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையான யுத்தம் தான் கேப்டனின் ஒன்லைன்.

சிக்கிமில் இருக்கும் செக்டார் 42 வனப்பகுதி, 50 வருடங்களாக மனித நடமாட்டமே இல்லாத இடம். இராணுவ கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதி என்பதால் அதை மனிதர்கள் உலவ பாதுகாப்பான பகுதியாக மாற்றி, ஒரு ஃபேக்டரியை இயக்க நினைக்கிறது அரசு. ஆனால் அங்கு பார்வையிட அனுப்பப்பட்ட இராணுவ குழு திரும்ப வரவில்லை. இரண்டாவதாக கேப்டன் வெற்றிச்செல்வனுடைய (ஆர்யா) குழுவினர் அனுப்படுகின்றனர். அங்கு மர்மமான ஒரு தாக்குதல் ஆர்யாவின் குழுவினரால் நடத்தப்படுகிறது. அவரது குழுவில் இருக்கும் ஹரீஷ் உத்தமன் திடீரென்று எல்லோரையும் சுட ஆரம்பிக்கிறார்.

பின்பு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறக்கிறார். அங்கு என்ன நடந்தது? ஹரீஷ் ஏன் சுட்டார்? என எதுவும் தெரியாமல் திரும்புகிறது குழு. ஒரு வருடத்திற்குப் பிறகு மறுபடி ஆர்யாவின் குழுவை ஆராய்ச்சிக்காக அதே இடத்துக்கு அழைத்துச் செல்கிறார் ஆராய்ச்சியாளர் சிம்ரன். அந்தக் காட்டுக்குள் இருப்பது என்ன? அது ஏன் மனிதர்களை தாக்குகிறது? அதை எப்படி சமாளித்து ஆர்யாவின் குழு? இதுதான் படத்தின் கதை.

நாணயம் படத்தில் பேங்க் ஹெய்ஸ்ட், மிருதன் படத்தில் ஸோம்பி, டிக்டிக்டிக் படத்தில் ஸ்பேஸ் என ஹை கான்செப்ட் படங்களை இயக்கும் சக்தி சௌந்தர் ராஜன் இந்த முறை ஏலியன் + ப்ரிடேட்டர் கலந்து கட்டிய ஒரு கான்செப்ட்டுடன் வந்திருக்கிறார். அதை முடிந்த அளவு எளிமையாகவும், இந்தியத் தன்மையுடனும் சொல்ல முயன்றிருக்கிறார். படத்தின் கதையை மிக எளிமையாக வடிவமைத்திருப்பது இயக்குநரின் ப்ளஸ். எனவே அதிகம் சிந்திக்காமல் கதையின் ஓட்டத்தில் பயணிக்க சுலபமாக இருக்கிறது. அடுத்த ப்ளஸ் யுவாவின் ஒளிப்பதிவு, தபஸ் நாயக், அருண் சீனுவின் ஒலி வடிவமைப்பு, எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கம். படம் காட்டும் விஷயங்கள் ஓரளவுக்காவது நம்பும்படி இருக்க காரணம் இவர்களது உழைப்பே. இமானின் பின்னணி இசை படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

ஆர்யா எப்போதும் போல இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிம்ரன், ஐஸ்வர்ய லஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் போன்றவர்கள் கதைக்கு தேவையான அளவு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கதையில் கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் பெரிய அளவில் இல்லாததால் நடிப்பு பற்றி தனியாக கவனிக்க எதுவும் இல்லை.

படத்தின் சறுக்கல் என கதை மற்றும் திரைக்கதையை தான் சொல்ல வேண்டும். பொதுவாக ஹை-கான்செப்ட் படங்கள் வொர்க் ஆக முக்கியமான காரணம், அது எடுத்துக் கொள்ளும் களத்தைத் தாண்டி கதை சொல்லப்படும் விதத்தால் சுவாரஸ்யம் ஆவதே. அது இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை. வெறுமனே ஒரு வினோத உயிரினத்தைக் காட்டுவது, அதன் செயல்பாடுகள் என படம் வரைந்து பாகத்தைக் குறித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாயகனுக்கு வரும் சவாலும் பார்வையாளர்களுக்கு படபடப்பையோ, இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற ஆவலையோ தூண்டவில்லை. நாயகனின் புத்திசாலித்தனமான யோசனைகளும் பார்வையாளர்களால் எளிதில் கண்டுபிடிக்கும் படி எழுதப்பட்டிருக்கிறது.

விஷூவலாக இந்தப் படம் ஆடியன்ஸூக்கு திருப்தி அளிக்கிறதா என்று பார்த்தால் மோசமான சிஜி அதற்குத் தடையாக இருக்கிறது. ஐஸ்வர்யா லெஷ்மிக்கு ஆர்யா மீது காதல் வருவதற்கு சொல்லப்படும் காரணம், ஃபேக்டரியை செப்பனிட வரும் ஒருவர் வாக்குமூலம் கொடுப்பது போல VOLG வீடியோ எடுத்து வைத்திருப்பது இவை எல்லாம் லாஜிக்கையும் மீறி சிரிப்பு வரவழைக்கும் மெட்டீரியல். படத்திற்குள் தேவையே இல்லாமல் சிம்ரனுக்கும் - பணக்கார வாரிசின் மகனுக்குமான உறவை பற்றி சொல்லும் இயக்குநர், படத்தின் பிரதானமான கதாபாத்திரம் காட்டுக்குள் இருக்கும் மினேட்டர்ஸ் எனப்படுகிற வினோத உயிரினம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை தெளிவாக சொல்லப்படவில்லை.

மொத்தத்தில் பார்வையாளர்களுக்கு எந்த எக்சைட்மென்ட்டையும் கொடுக்காத ஒரு திரைப்படமாக வந்திருக்கிறது இந்த கேப்டன். படத்தின் ஒரே ஆறுதல் இரண்டே மணிநேரத்தில் படம் நிறைவடைகிறது என்பதுதான். சுவாரஸ்யம் என்பதெல்லாம் பெரிதாக தேவை இல்லை, தமிழில் ஒரு ஏலியன் வகையறா படத்தை பார்க்க ரெடி என்றால் தாராளமாக பார்க்கலாம்.

-ஜான்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com