அன்னபூரணி
அன்னபூரணிAnnapoorani

Annapoorani | சாப்பிடற மாதிரி சமைச்சு இருக்கலாமே அன்னபூரணி..!

தமனின் பின்னணி இசையும் பாடல்களும் அத்தனை ஈர்ப்பாக இல்லை. அதிலும் அன்னபூரணிக்கு வரும் தீம் ட்ராக் கேட்க சகிக்கவில்லை. படத்தில் எங்கு பின்னணி இசை நிற்கும் நாம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் என்ற படபடப்பு வருகிற அளவு படம் முழுக்க வாசித்து தள்ளியிருக்கிறார்.
Annapoorani(1.5 / 5)

ஒரு பெண், இந்தியாவின் சிறந்த செஃப் ஆகும் முயற்சியில் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதே கதை.

அன்னபூரணி (நயன்தாரா) பிறப்பிலேயே சுவைகளை அதீதமாக உணரக்கூடிய திறனுடன் பிறக்கிறார். கண்ணைக் கட்டிக் கொண்டு சாப்பிட்டாலும், உணவின் பெயரை சொல்வார். அதை மீண்டும் அதே சுவையுடன் சமைத்தும் கொடுப்பார். அவருடைய கனவு எல்லாம், இந்தியாவின் சிறந்த செஃப்பாக திகழும் ஆனந்த் (சத்யராஜ்) போல் ஆக வேண்டும் என்பதுதான். அதில் சிக்கல் என்னவென்றால், அன்னபூரணி பிராமண சமுதாயத்தை சார்ந்தவர். செஃப் ஆக வேண்டும் என்றால், அசைவம் சமைக்க வேண்டும், சாப்பிட வேண்டும் என்பதால், அதனைத் தடுக்கிறார் தந்தை ரங்கநாதன் (அச்யுத் குமார்). மேலும் ஸ்ரீரங்கம் கோவிலில் பிரசாதம் சமைக்கும் ரங்கநாதனின் மகள் அசைவம் சமைப்பார் என்றால் ஊர் என்ன சொல்லும் என பல தடைகள். இருந்தாலும், தான் நினைத்தது போலவே ஹோட்டல் மேனேஜ்மெண்டில் சேர்கிறார் அன்னபூரணி. அதன் பிறகு நடக்கும் ஒரு விபத்தால், அன்னபூரணிக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. அது நேரடியாக அவரது சமையல் கலைஞர் வாழ்வை பாதிக்கிறது. அது என்ன? அன்னபூரணியால் அவரது கனவை நிறைவேற்ற முடிந்ததா? இவை எல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.

Food Genre திரைப்படங்கள் உலகம் முழுக்கவே பிரபலமானது. ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருக்கின்றன. அனிமேஷனில் தயாரானாலும் கூட Ratatouille இந்த வகையில் சிறப்பானதொரு படம். மலையாளத்தில் Ustad Hotel, Salt and Pepper, கொரிய மொழியில் Cook up a storm, தாய் மொழியில் Hunger உட்பட பல படங்கள் சிறப்பானவை. இந்த ஒவ்வொரு படங்களும் வாழ்வைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி பேசும். அன்னபூரணி மூலம் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா வாழ்க்கை, சமூகம் என இரண்டையும் பேச முயன்றிருக்கிறார்.

ஆண் - பெண் இடையேயான ஏற்றத்தாழ்வு, ஒருவரின் உணவுத் தேர்வு என்பது அவரது விருப்பமாக இருக்க வேண்டும், மதம் சார்ந்து இருக்கக் கூடாது, உணவை சுவையாக மாற்றும் ஒரே விஷயம் அன்பு மட்டும் தான் போன்ற விஷயங்களைத் தொட்டிருக்கிறார். மேலும் இடைவேளையின் போது வரும் ஒரு முக்கியமான திருப்பம், மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் பின்பு கதையில் என்ன நடக்கும் என்ற ஆர்வமும் ஏற்படுகிறது.

ஆனால், இதைத் தவிர படத்தில் ரசிக்க பெரிய விஷயங்கள் இல்லை. இந்தப் படம் dramaticகாக இருக்கிறது, ஆனால் அது எழுதப்பட்ட விதம் அத்தனை அழுத்தமாக இல்லை. எல்லா முக்கியமான காட்சிகளும் மிக செயற்கையாக இருக்கிறது, நம்பகத்தன்மையற்று இருக்கிறது. முதலில் அன்னபூரணியின் செஃப் கனவை எடுத்துக் கொள்ளலாம். அவர் எப்படியாவது செஃப் ஆகிட வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் துளியும் ஏற்படவில்லை. பிறகெப்படி, அவரது பயணம் மட்டும் நமக்கு எப்படி சுவாரஸ்யமாக இருக்கும். படத்தின் முதல் காட்சியில் ஒரு விபத்து நடக்கிறது, முக்கியமான கதாபாத்திரத்திற்கு பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால் அது நமக்கு எந்த பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது போல படத்தின் பல காட்சிகள், 'சரி அடுத்து என்ன' என்ற அளவிலேயே நகர்கிறது.

படத்தில் மிக மோசமாக இருந்தது, படத்தின் ரைட்டிங் தான். மேலும் படத்தில் co incidents ஆக நடக்கும் விஷயங்கள் எல்லாம் படு பயங்கரம். நயன்தாரா சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் செஃபிடம் வேலை கேட்பார், ஆனால் அவர் நயன்தாராவை அவமானப்படுத்தி அனுப்புவார். அன்று இரவே முன்பின் தெரியாத ஒரு கல்யாண வீட்டுக்குள் புகுந்து சாப்பிட முயற்சிக்கிறார். அந்த கல்யாண பஃபேயில் இருக்கும் சாப்பாட்டை எல்லாம் சமைத்தது, காலையில் நயன்தாராவை துரத்திய அதே செஃப். படத்தின் ஒரு இடத்தில் சத்யராஜின் அமைதிப்படை சீனை அவரை வைத்தே ரீக்ரீயேட் செய்திருக்கிறார்கள். அதுவும் மற்றுமொரு காட்சி லெவலிலேயே இருந்தது. திரைக்கதையாக மட்டுமல்ல வசனங்களாகவும் எதுவும் புதிதாகவோ, ரசிக்கும்படியோ ஏதும் இல்லை. தேவையே இல்லாமல் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரம் வேறு.

நடிப்பு பொறுத்தவரை நயன்தாரா சில காட்சிகளில் நன்றாக நடிக்கிறார், பல காட்சிகளில் வந்து போகிறார். சத்யராஜ், ஜெய், கார்த்திக்குமார் போன்றவர்கள் ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் முடிக்கிறார்கள்.

தமனின் பின்னணி இசையும் பாடல்களும் அத்தனை ஈர்ப்பாக இல்லை. அதிலும் அன்னபூரணிக்கு வரும் தீம் ட்ராக் கேட்க சகிக்கவில்லை. படத்தில் எங்கு பின்னணி இசை நிற்கும் நாம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் என்ற படபடப்பு வருகிற அளவு படம் முழுக்க வாசித்து தள்ளியிருக்கிறார்.

அன்னபூரணி
PARKING Review| ஒரே பார்க்கிங்... இரண்டு கார்... ஈகோ யுத்தம் என்ன ஆகிறது..?

மேலே Food Genre சம்பந்தப்பட்ட மற்ற மொழிப் படங்களை குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அவை எல்லாம் ஏதோ ஒரு வகையான உணர்வை கடத்தும். அதற்கென எல்லா Food Genre படமும் உணர்வை பேச வேண்டுமா என்றால் இல்லை. ஆனால் என்ன பேசுகிறோம் என்பதைத் தெளிவாக பேச வேண்டும் . அன்னபூரணி என்ன சொல்கிறது என்ற தெளிவில்லை. அப்பா - மகள் பற்றியதா, ஒரு குரு - சிஷ்யர் பற்றியதா, சைவம் - அசைவம் பற்றியதா, ஆண்கள் அளவுக்கு பெண்களால் ஏன் செஃப் ஆக முடியவில்லை என்பது பற்றியா என எதுவும் புரியவில்லை.

மொத்தத்தில் அன்னபூரணி, சுவையற்ற விருந்து. மிக சுமாரான படத்தைக் கூட பார்ப்பேன் என்றால் முயற்சிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com