விடாமுயற்சி அஜித்
விடாமுயற்சி அஜித்எக்ஸ் தளம்

விடாமுயற்சி: பிரேக்டவுன் அனுபவத்தை மீண்டும் உருவாக்கிய அஜித்-த்ரிஷா..!

படத்தின் பாசிட்டிவ் எனப் பார்த்தால், ஹாலிவுட் படமான `பிரேக்டவுன்' தான் படத்தின் அவுட் லைன், அதில் பல சுவாரஸ்யங்களை சேர்த்திருக்கிறார் மகிழ் திருமேனி.
Published on
விடாமுயற்சி(2.5 / 5)

காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடிக்க, கணவன் எடுக்கும் முயற்சிகளே, விடாமுயற்சி.

அர்ஜுன் (அஜித்) கயல் (த்ரிஷா) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அசர்பைஜானில் வாழ்ந்துவரும் தம்பதி. ஆரம்பத்தில் மகிழ்ச்சியும் காதலுமாக கடந்த நாட்கள், போக போக கசந்துவிடுகிறது. குறிப்பாக ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட12 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளலாம் என கயல் முடிவெடுக்கிறார்.

விடாமுயற்சி பற்றி மகிழ் திருமேனி
விடாமுயற்சி பற்றி மகிழ் திருமேனி கோப்புப்படம்

விவாகரத்துக்கு முன் சில காலம் தன் அப்பா வீட்டுக்கு செல்ல வேண்டும் என கயல் விரும்ப, தானே அழைத்து சென்று விடுவதாக முடிவெடுக்கிறார் அர்ஜுன். செல்லும் வழியில் கார் பிரேக்டவுன் ஆகிறது. அதைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக கயல் காணாமல் போகிறார். அர்ஜுன், கயலை கண்டுபிடித்தாரா? இதற்கு யார் காரணம்? அதன் பின் நடக்கும் திருப்பங்கள் என்ன? என்பதெல்லாம் தான் விடாமுயற்சியின் மீதிக்கதை.

படத்தின் பாசிட்டிவ் எனப் பார்த்தால், ஹாலிவுட் படமான `பிரேக்டவுன்' தான் படத்தின் அவுட் லைன், அதில் பல சுவாரஸ்யங்களை சேர்த்திருக்கிறார் மகிழ் திருமேனி. அர்ஜுன் - கயல் இடையேயான திருமண உறவு சிக்கலை எழுதியிருந்ததும், திருமணத்தை தாண்டிய உறவு பற்றி முதிர்ச்சியாக கையாண்டிருப்பதும் சிறப்பு. பெரிய ஸ்டாரான அஜித் தன் படத்தில் இதை பேச வேண்டும் என முடிவு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. முதல் பாதி முழுக்க, 12 வருடம், 9 வருடம், 3 வருடம் என வெவ்வேறு காலகட்டங்களில் அர்ஜுன் - கயல் உறவு எப்படி இருந்தது என திரைக்கதையை நான் லீனியராக எழுதியிருந்த விதமும் கவனிக்க வைத்தது.

நடிப்பாக, அர்ஜுன் கதாப்பாத்திரத்தில் அஜித் யதார்த்தமாக நடித்திருக்கிறார். மனைவியின் முடிவை ஏற்பதா, வேண்டாமா என்ற குழப்பம், சண்டை வரும் போது தவிர்ப்பது, ஆவேசமாக சண்டையிடுவது என அனைத்திலும் பாஸ். கயல் கதாபாத்திரத்தில் த்ரிஷா, மிக பொருத்தம். தன் முடிவில் தீர்க்கமாக இருப்பது, அதை பொறுமையாக எடுத்து சொல்வது என கொஞ்ச நேரமே வந்தாலும் அவரின் காட்சிகள் கவர்கிறது. அர்ஜுன் - ரெஜினா ஜோடியின் டபுள் ஷேட் நடிப்பு சிறப்பு. குறிப்பாக ரெஜினா எதிரில் இருப்பவரை குழப்பும்படி பேசுவது மிக சிறப்பு. ஆரவ் டீம் மிக வழக்கமான டெம்ப்ளேட் வில்லன்கள்.

டெக்னிகலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மிகத் தரமான அவுட்புட்டை கொடுத்திருக்கிறது. அசர்பைஜானின் ரோடுகளில் சேசிங், ஆக்ஷனில் டெரர், பிளாஷ்பேக்கில் கலர்ஃபுல் என இரண்டிலும் கவர்கிறார். அனிருத் இசையில் பின்னணி இசை வழக்கம் போல் மிரட்டல். ஆக்ஷன் காட்சிகளில் டெம்போவை ஏற்றுவதே அவர்தான்.

முதல் பாதியில் சுவாரஸ்யமாக நகரும் கதை, இரண்டாம் பாதியில் நகர முடியாமல் திணறுகிறது. இடைவேளைக்கு முன் பல விஷயங்கள் நடக்கிறது, ஆனால் இரண்டாம் பாதியில் ரெஜினாவின் manipulative குணாதீசியம் மட்டுமே சற்று சுவாரஸ்யம். மத்தபடி வழக்கம் போல் வெற்று சண்டைகளே நிறைந்திருக்கிறது. அர்ஜுன் - ரெஜினாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் பிளாஷ்பேக், ஜோக்கர் - ஹார்லி குயினின் 144 குவாலிட்டி போல தான் இருந்தது. தனியாகப் பார்த்தால் அது நன்றாக இருந்தாலும், படத்துக்குள் துருத்திக் கொண்டு தெரிகிறது. அதை வெட்டியிருந்தால் 2 மணி நேரத்தில் படம் க்ரிஸ்ப்பாக முடிந்திருக்கும். படத்தில் வரும் அதீத வன்முறைக்காக இது குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய படம் இல்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது.

`பிரேக்டவுன்' படத்தின் ஒன்லைனை எடுத்துக் கொண்டு அதை இன்னும் அழகாக மெருகேற்றி இருக்கிறார் என்பதற்காக மகிழ் திருமேனியை பாராட்டலாம். ஆனால் விடாமுயற்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க முயற்சி செய்திருக்கலாம். வழக்கமான அஜித் படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏமாற்றத்தை தரலாம். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகும் பார்வையாளர்களுக்கு, ஓரளவு திருப்தி அளிக்கும் படமே.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com