ACE REVIEW | மீண்டும் விஜய் சேதுபதியிடம் சூது கவ்வுகிறதா..?
ACE REVIEW (2.5 / 5)
காதலிக்காக எதையும் செய்யத் துணியும் ஒருவன் சந்திக்கும் சிக்கல்களே இந்த ACE.
சிறையில் இருந்து வெளியே வரும் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி), தன் பழைய வாழ்க்கையை விட்டு, புதிய மனிதனாக வாழ மலேஷியா செல்கிறார். அங்கு எதேர்ச்சையாக அறிவை (யோகிபாபு) சந்திக்க, அவர் மூலம் கல்பனா (திவ்யா பிள்ளை) நடத்தும் உணவகத்தில் வேலைக்கு சேர்கிறார். அவர் குடியிருப்புக்கு அருகில் வசிக்கும் ருக்மினி பார்த்ததும் காதல் கொள்கிறார். கல்பனா, ருக்மினி இருவருடனும் பழக ஆரம்பித்த பின் இருவருக்குமே பணப் பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்கிறார் விஜய் சேதுபதி. அதனைத் தீர்க்க அவர் சாமர்த்தியமாய் ஆரம்பிக்கும் சூது, தர்மா (அவினாஷ்) ரூபத்தில் கவ்வத் தொடங்குகிறது. அவர் உட்பட எல்லோருமே சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து போல்ட் கண்ணன் அனைவரையும் மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
பிரச்சனைகளில் இருந்து மீள நினைத்து புது வாழ்க்கையை தேடி வரும் ஒருவன், வந்த இடத்தில் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்குகிறான் என்ற ஒன்லைன் சுவாரசியமான ஒன்று. அதனை படத்தில் முடிந்தவரை காமெடி சேர்த்து கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.
போல்ட் கண்ணனாக விஜய் சேதுபதி. ஒவ்வொரிடமும் ஒவ்வொரு கதை சொல்வது; யோகி பாபுவை ஜாலியாக டீல் செய்வது; ஓடிக்கொண்டே இருப்பது என இன்னொரு ஜூங்கா வேடம். ஜாலியாக நடித்துக் கொடுத்திருக்கிறார். ராஜதுரை (பப்ளூ)யிடம் சிக்கிக்கொண்டு அல்லல்படும் நபராக ருக்மினி. 24*7 வேலை; கிடைக்கும் ஓய்வில் காதல் என தமிழில் நடிக்கும் முதல் படத்திலேயே நல்லதொரு வேடம். நல்லதொரு அறிமுகம். போல்ட் கண்ணனின் கடை ஓனராக வரும் கல்பனா (திவ்யா பிள்ளை) காமெடி, ஆக்சன் என எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஓக்கேவாக நடித்திருக்கிறார். போல்ட் கண்ணன், கல்பனா ஆன் ஸ்கீரின் பிரெசன்ஸ் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஹெய்ஸ்ட் காமெடி படம் என்பதால் யோகி பாபுவும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். கோபம் வரும் போதுதான் தமிழ் பேச முடியும் என்பது மாதிரி, படம் மலேசியாவில் நடைபெறுகிறது என்பதை நினைவுபடுத்த அவ்வப்போது பப்ளூ மட்டும் என்னலா, சொல்லுலா, போடாலா என எஸ் ஏ ராஜ்குமாருக்கே டஃப் கொடுக்கிறார். டெரர் வில்லனாக வர வேண்டிய பாத்திரம், ஆனால் பப்ளூ அதை முடிந்த வரையில் காமெடியாக மாற்றிவிட்டார். படத்தின் மெயின் வில்லன் தர்மாவாக அவினாஷ். கன்னடத்தில் முரட்டு வில்லனாய் சுற்றிக் கொண்டிருந்தவரை இதில் காமெடி வில்லன் ஆக்கியிருக்கிறார்கள். GBUவிலும் காமெடி வில்லனாகத்தான் நடித்திருந்தார்.
படத்தின் முக்கியமான குறை, சரியாக எழுதப்படாத கதை தான். எதிலும் ஒரு முழுமையோ, சுவாரஸ்யமோ இல்லை. 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ' ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' . கலவையான விமர்சனங்கள் திரைப்படங்களுக்கு வருவது வேறு. ஆனால், சில படங்களுக்கு மட்டுமே ' செம்ம படம் ' என்றும், 'படமா இது' என்றும் இரண்டு எக்ஸ்டிரீம்களில் விமர்சனங்கள் வரும். அப்படியானதொரு படம் தான் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' அந்தப் படத்தை இயக்கிய ஆறுமுக குமாருடன் மீண்டும் விஜய் சேதுபதி ACE படத்திற்கு இணைந்திருக்கிறார் என்னும் செய்தி வந்த நாள் முதலே, இந்தப் படம் எப்படி இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
இரண்டாம் பாதி திரைப்படத்தை பாஸ்ட் கட்டில் இடைவேளையின் போதே காட்டுவது; க்ளைமேக்ஸ் சாமர்த்திய காட்சிகள்; புதிது புதிதாக கதை சொல்வது என சில இடங்களில் ஈர்க்கிறார் ஆறுமுக குமார். ஆனால், காமெடி படமா சீரியஸ் படமா என்கிற குழப்பத்தில் திரைக்கதை பல இடங்களில் படுத்து விடுகிறது. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள் எதேர்ச்சையாக மும்பை போய் வடா பாவ் சாப்பிடுவது போல், படத்தில் எக்கச்சக்கச்சக்க எதேர்ச்சைகள். குடும்பக் கஷ்ட கதாபாத்திரங்கள் ஒருவருக்கு அம்மா படுத்த படுக்கை, இன்னொருவருக்கு அப்பா படுத்த படுக்கை. ACE திரைப்படம் கொஞ்சம் லேட் ரிலீஸ் என்பதால், படத்தின் போஸ்ட் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டை வேறு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் சுந்தர் சியின் கேங்கர்ஸில் பார்த்தோம் என்பதால், பாவமாய் இருந்தது. அதிலும் கொள்ளையடிப்பதை, டீ அடிப்பது போல இத்தனை சுலபமாக அடித்தவர் நம்ம போல்ட் கண்ணன் மட்டும்தான்.
ஜஸ்டினின் இசையில் மெலடி பாடல்கள் ஈர்க்கின்றன. பின்னணி இசை என்றாலே சாம் CS என்னும் அளவுக்கு இப்போதெல்லாம் பல படங்களுக்கு பின்னணி இசையை மட்டும் சாம் கவனித்துக்கொள்கிறார். சாதாரண காட்சிகளுக்குக்கூட ஓவர்டைமில் பின்னணி இசையை வாரி வழங்கியிருக்கிறார். அவ்ளோ மேல போக வேணாம் சாம் என சொல்லத் தோன்றுகிறது. கரன் B ராவத்தின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகிய இயற்கைக் காட்சிகளை இன்னும் அழகாகக் காட்டுகிறது. விஜய் சேதிபதி, ருக்மினி, திவ்யா, தர்மா, யோகி பாபு என படத்தின் ஒட்டுமொத்த காஸ்டிங்கிற்கும் காஸ்டியூம்ஸ் செம்ம கூல். காஸ்டியூம் டிசைனர் சப்னா கல்ராவுக்கு ஒரு ஸ்பெஷல் மென்சன்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால், ACE பிடிக்க வாய்ப்புகள் உண்டு.