Fahadh Faasil
Fahadh FaasilAavesham

Aavesham Review | ஃபகத்... யாரு சாமி நீ..!

தரமான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஆவேஷம்.
Aavesham(3.5 / 5)

ஊரையே நடுங்க வைக்கும் கேங்க்ஸ்டர், மூன்று மாணவர்களின் பாசத்துக்கு பணிந்த பின் நடக்கும் முரட்டு சம்பவங்கள் தான் `ஆவேஷம்’.

பிபி (மிதுன் ஜெய் ஷங்கர்), அஜூ (ஹிப்ஸ்டெர்), ஷாந்தன் (ரோஷன் ஷாநவாஸ்) மூவரும் கேரளாவில் இருந்து பெங்களூர் கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்கள். சீனியர்களின் ரேகிங்கிலிருந்து தப்பிக்க ஒட்டுமொத்த கேரளா பாய்ஸும், மஞ்ஞுமல் பாய்ஸ் போல கூட்டமாகவே போகிறார்கள் வருகிறார்கள். ஒரு கட்டத்தில் பிபி, அஜூ, ஷாந்தன் மூவரும், சீனியரான குட்டி ஏட்டனின் கோபத்திற்கு ஆளாக, அவர்களை வெளுத்து விடுகிறார் குட்டி. எப்படியாவது குட்டியைப் பழிதீர்க்க வேண்டும் எனக் கிளம்பும் மூவரும், லோக்கலில் பெரிய ரௌடி கிடைக்கிறார்களா எனத் தேடுகிறார்கள். அப்போது அவர்களின் வாழ்க்கையில் வருகிறான் ரங்கன் (ஃபகத் பாசில்). அதன் பின் `ஜிகர்தண்டா’வை பாட்டம் ஸிப் அடித்தது போல் ஜிவ்வென செல்கிறது கதை. மூவரின் பகை என்ன ஆனது? வாழ்க்கையில் என்ன நடக்கிறது? ரங்கன் அண்ணா அன்பாளனா, அரக்கனா? என்பதை எல்லாம் சொல்கிறது மீதிக்கதை.

`ரோமாஞ்சம்’ படத்தின் மூலம் அசரடித்த ஜிது மாதவன், இம்முறை ஆவேஷத்தில் வேறு ஒரு விருந்து படைத்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது, மெல்ல மெல்ல மையப் பிரச்சனைக்கு கதை நகர்வது இடைவேளையின் போது உச்சம் தொடுவதென சற்றே பொறுமையாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாகத்தில் வேறு விதமாக வேகமெடுக்கிறது. முதலில் யாரை நம்பினார்களோ, அவனே அவர்களுக்கு சிக்கலாவது என்ற முரணை அழகாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். ரங்கனின் முன் கதையாகட்டும், அவன் அடிதடியில் இறங்குவதாகட்டும் எதையுமே காட்சியாக காட்டாமல், வெறும் வர்ணனைகளாகவே சொல்வது, அதற்கான பே ஆஃபை க்ளைமாக்ஸில் கொண்டு வந்தது எல்லாம் வெகு சிறப்பு.

டைட்டில் கார்டில் போடுவது போல ஒரு நடிகனாக ஃபகத் பாசிலுக்கு இது ஒரு ரீ- இன்ட்ரொடக்‌ஷன் தான். தமிழுக்கு ஒரு ரங்கன் வாத்தியார் என்றால், மலையாளத்துக்கு ஒரு ரங்கன் அண்ணா. அடித்து துவம்சம் செய்திருக்கிறார். சிம்பிளாக சிகரெட் பற்றவைத்து அறிமுகமாவது துவங்கி, கடைசி ஃப்ரேமில் பிரம்பெடுத்து துரத்துவது வரை ஃபகத் மீதிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. டவலைக் கட்டிக் கொண்டு கும்மாங்குத்து ஆடுவது, தன்னுடைய கதையை கேட்டு தானே வெறியேற்றுவது, அழுவது தெரியாதவாரு மறைப்பது, தனக்கென யாரும் இல்லை என ஃபீலாகி மறுநொடியே கத்தியைத் தூக்கிக் கொண்டு பாய்வது என இது முழுக்க ஃபகத்தின் ஷோதான். சீனியர் கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல் குமுறுவது, ரங்கனின் அன்புத் தொல்லைகள் தாங்க முடியாமல் தவிப்பது, கடைசியில் உயிர்பயத்தில் நடுங்குவது என அசத்தியிருக்கிறார்கள் மாணவர்களாக வரும் மிதுன் ஜெய் ஷங்கர், ஹிப்ஸ்டெர், ரோஷன் ஷாநவாஸ். அம்பன் கதாப்பாத்திரத்தில் வரும் சஜின் கோபு நடிப்பும் படத்தின் எண்டர்டெய்ன்மெண்டுக்கு முக்கிய காரணம்.

அன்புக்கு ஏங்கும் ஒரு கேங்க்ஸ்டர், அவனுக்கு குடும்பம் போல் கிடைக்கும் மூன்று பேரிடம் சரணடைகிறான். அவனது அன்பை எப்படி வெளிப்படுத்த எனத் தெரியாமல் மது, சிகரெட், பெண் எனப் பலவற்றையும் அவர்களுக்குக் கொடுக்கிறான். இப்படியே போனால் படிப்பு பாழாகி வாழ்க்கையே வீணாகும் என அந்த மூன்று பேரும் உணரும் போது, ரங்கனின் கட்டுப்பாட்டில் முழுவதாக சிக்கிக் கொள்கிறார்கள். அதை விஷுவலாக உணர்த்தும் படி, கட்டிலில் மூவரும் அமர்ந்திருக்க, சுவற்றில் மாட்டியிருக்கும் புகைப்படத்தில் இவர்களைக் குறிபார்த்து துப்பாக்கி பிடித்திருப்பது போன்று இருக்கும். இது போன்று சின்னச் சின்ன விஷயங்கள் மூலம் படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சமீர்தாஹிர். சுஷின் ஷ்யாம் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படு எனர்ஜி ஏற்றுகிறது.


படத்தின் குறைகள் எனப் பார்த்தால் ஆங்காங்கே இருக்கும் மொமண்ட்ஸ் படத்திற்கு வலு சேர்த்தாலும் பல இடங்களில் ஒரு சோர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஜோக்கு ரங்கன் சொன்னது என்பதற்காக அவனின் அடியாட்கள் சிரிக்கலாம், அதற்காக நாமும் சிரிக்க முடியாதல்லவா. இடைவேளைக்கு முன்பும் சரி, பின்பும் சரி பல இடங்களில் டல்லடிக்கிறது. வெறும் காட்சிகளாக மட்டும் இருக்கிறதே தவிர கதைக்குத் தேவையான ஆழம் அவற்றில் இல்லை. கொஞ்சம் இதை எல்லாம் சரி செய்திருந்தால் மரண மாஸாக இருந்திருக்கும். ஆனாலும் வன்முறை தவறு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கும் ஸ்டைலும், படத்தில் பல இடங்களில் நாம் வெடித்து ரசிக்கும் மெமண்ட்ஸுக்கு பஞ்சமில்லை. மேலோட்டமாக ஒரு பழிக்குப் பழி கதை என்றாலும், உணர்ச்சி வசத்தால் நாம் எடுக்கும் முடிவுகள் எங்கும் நம்மைக் கொண்டு சேர்க்கலாம். அதை உணராத ரங்கன் என்ன ஆனான்? அதை உணர்ந்த மூன்று மாணவர்கள் என்ன ஆனார்கள் என்பதை சொல்லி, உணர்த்துகிறார் இயக்குநர்.

கண்டிப்பாக தரமான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஆவேஷம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com