ஜிகர்தண்டா 2
ஜிகர்தண்டா 2ட்விட்டர்

மலைவாழ் மக்களின் சிக்கலும் அரசியலும் கலந்த கலவை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

மலைவாழ் மக்களின் சிக்கல், அதன் பின் இருக்கும் அரசியலை ஜிகர்தண்டாவில் கலக்கி கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்(2.5 / 5)

கோம்பை காளை மலையில் வசிக்கும் பழங்குடிகளுக்கு, காட்டில் யானைகளை தந்தத்திற்காக வேட்டையாடுபவனாலும் சிக்கல். வேட்டையனைப் பிடிக்க வந்த காவல்துறையாலும் பிரச்னை. இது ஒருபுறம் நடக்க, ச.மூ.க.ம் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி கார்மேகம் (இளவரசு), அதே கட்சியில் இருக்கும் நடிகர் ஜெயக்கொடி (சைன் டாம் சாக்கோ) இருவர்களுக்குள், இருவரில் யார் அடுத்த முதல்வர் என்பதில் மோதல்.

மற்றொருபுறம் மதுரையின் முக்கியமான கேங்க்ஸ்டர் சீசர் (ராகவா லாரன்ஸ்), தன்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குநரை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு அப்படி கிடைக்கும் இயக்குநர் ரே தாசன் (எஸ்.ஜே.சூர்யா). இந்த மூன்று புள்ளிகளும் இணைந்து ஒரே பிரச்னையாக உருவெடுப்பதும், அதற்கான முடிவு என்ன என்பதும்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

”நீ எல்லாம் எப்படி ஹீரோவா நடிக்க முடியும் என்று அவமானப்படுத்தப்படும் ஒரு கேங்கஸ்டர், சினிமா ஹீரோவாக நடிக்க முடிவெடுக்கிறான்” என எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜிகர்தண்டா படத்தின் பாணியில்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை முக்கியமான அரசியலையும் இந்தப் படத்தில் இணைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

ஜிகர்தண்டா முதல் பாகம் நேர்கோட்டிலான ஒரு கதையை சொல்லியிருந்தது. ஆனால் இந்த பாகத்தில், அரசியல்வாதிகளான கார்மேகம் - ஜெயக்கொடி, காவலதிகாரி - தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லும் நபர், ஒரு கேங்க்ஸ்டர் - அவனை வைத்து படம் இயக்கும் இயக்குநர் என மூன்று விதமான களங்கள் மூலம் கதை துவங்கப்படுகிறது. ஆனால், இவை அனைத்துக்கும் பின் ஒரு சுயநல அரசியல் இருக்கிறது என சொல்லி முடிக்கப்படுகிறது.

படத்தின் நகர்வை இயக்குநர் வடிவமைத்திருந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. இடைவேளைக்கு முன்பு வரை, சீசர் கதாபாத்திரம் தன் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சமூகத்தின் முன், முதல் கருப்பு நிறமுள்ள நடிகராக நிற்க நினைக்கிறார். அதனைச் சுற்றி தான் பெரும்பாலான கதை நடக்கிறது. இடைவேளைக்குப் பிறகு, கேங்க்ஸ்டர் நடிகர் - இயக்குநர், கேங்க்ஸ்டர் கூட்டத்தில் இருக்கும் கருப்பு ஆடு என்பது மட்டுமில்லாமல், சிலரின் சுயநல அரசியலால், ஒரு பழங்குடி இனத்தை எப்படி பாதிக்கிறது, மறைமுகமாக யாரை எல்லாம் பாதிக்கிறது என்று கதை களத்தை விரிவடையச் செய்கிறார்.

சில காட்சியமைப்புகளும் ரசிக்கும்படி இருந்தது. ரே தாசன், சீசரை வைத்து ஒரு க்ளிட் ஈஸ்ட்வுட் பாணி படத்தை எடுக்க வேண்டும் என சொல்வார். அது மிகப் பிரபலமான, காமிக் கதாப்பாத்திரம் டெக்ஸ் வில்லரை நினைவுபடுத்துவதாகவும் இருந்தது. நவோகா இன மக்களுக்காக போராடும் கதாபாத்திரம் டெக்ஸினுடையது. ஒரு காட்சியில் சீசரின் வீட்டிற்கு யானை வரும். அந்தக் காட்சி ஜெயமோகனின் யானை டாக்டர் கதையில் வரும் ஒரு முக்கியமான தருணத்தை நினைவுபடுத்துவதாய் இருந்தது. மேலும் அரசியலாக படத்தில் இடம்பெற்றிருந்த பல காட்சிகள், நிஜமாக நடந்த பல விஷயங்களை நினைவுகூர்வதாய் அமைந்திருக்கிறது. காட்டுக்குள் தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடும் ஒருவன் என்பது, அவனை பிடிக்க தனி சிறப்புப் படையை அரசாங்கம் அமைப்பது, அந்த வேட்டையனின் குற்றங்களும், காவலதிகாரிகள் நடத்திய கொடுமைகள் இவற்றின் பின்னணியில் இருப்பது அரசியல்தான் என பல விஷயங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தது.

நடிப்பைப் பொறுத்தவரையில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய வழக்காமான பாணியை தொடர்கிறார். ஆனாலும் முக்கியமான காட்சிகளில் அதை சமாளிக்கும்படி நடித்து தப்பிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு எக்ஸ்பிரஷனில் நடிக்க சில இடங்கள் கிடைக்கிறது அதை அசத்தலாக பயன்படுத்துகிறார். இவர்கள் இருவரை விட கதையில் முக்கியத்துவம் சற்று குறைவுதான் என்றாலும், நடிப்பில் இருவரையும் ஓவர் டேக் செய்கிறார் நிமிஷா சஜயன். அவர் ஏற்றிருக்கும் மலையரசி பாத்திரத்தில் அப்படிப் பொருந்துகிறார். இவர்கள் தவிர சைன் டாம் சாக்கோ, இளவரசு, நவீன் சந்திரா கதைக்கு தேவையான நடிப்பை வழங்குகிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய பலம். முதல் பாகத்தின் சிக்னேச்சர் ஸ்கோர் வரும் இடங்களும் மாஸ். திரு நாவுக்கரசு ஒளிப்பதிவு பாண்டியா வெர்ஸ்டனுக்கான ரெட்ரோ வைப் அளிக்கிறது.

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், கதைக்கு தேவையான அடர்த்து படத்தில் இல்லை என்பதே. சீசர் கதாப்பாத்திரத்திற்கு நடந்த ஒரு சம்பவத்தால், கருணையே இல்லாத ஒருவனாக மாறுகிறான். பின்பு மீண்டும் கருணை உள்ளவனாக மாறுகிறான் என்பதே கதாபாத்திர வடிவமைப்பு. ஆனால் அது அழுத்தமாக சொல்லததால், பார்வையாளர்களால் அதை உணரமுடியவில்லை. ரே தாசன் கதாப்பாத்திரம் ஒரு திட்டத்துடன் இந்தக் கூட்டத்தில் நுழைகிறார். ஆனால் பின்பு மனம் மாறுகிறார். அந்த மாற்றம் எங்கும் பதிவு செய்யப்படவே இல்லை.

ஜிகர்தண்டா முதல் பாகம் வந்தபோது, அந்தப் படம் பற்றி எந்த அறிமுகமும் இல்லாததால், படம் மிக ஃப்ரெஷ்ஷான உணர்வைக் கொடுத்தது. இந்த பாகம் பார்க்கும்போது இந்தப் படம் எப்படி நகரும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். சொல்லப்போனால் படத்தின் மிக முக்கியமான காட்சி, கேங்க்ஸ்டர் ஒரு சினிமா நட்சத்திரமாக வேண்டும் என முடிவெடுக்கும் காட்சி. அது அப்படியே ஜிகர்தண்டாவின் முதல் பாகத்தை நினைவுபடுத்துகிறது. இங்கு ஒற்றுமைகள் எப்போதும் பிரச்சனை இல்லை. ஆனால் அது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே விஷயம். அந்த பாகத்தில் அந்த காட்சியில் அசால்ட் சேது, கார்த்திக், கயல்விழி இடையே நடக்கும் உரையாடல், அந்த டென்ஷன் மெல்ல மெல்ல உயர்த்தப்படும். மேலும், கயல்விழி எதற்காக அப்படி நடந்து கொண்டாள் என்பதன் காரணமும் வலுவாக இருக்கும். அப்படியான வடிவமைப்பு டபுள் எக்ஸில் மிஸ்ஸிங். எல்லாமும் மிக அவசர அவசரமாக நடக்கிறது, அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்கிறது.

படத்தின் கடைசி 20 நிமிடம் மிக பிரம்மாதமாக எடுக்கப்பப்பட்டிருந்தது. அதிலிருந்த அந்த அழுத்தமும், தாக்கமும் மொத்தப் படத்திலும் இருந்திருந்தால் மிகச் சிறப்பான படமாக இருந்திருக்கும். ஆனாலும், கண்டிப்பாக ஒரு பொழுது போக்கை படம் வழங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. நிச்சயம் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com