சிறுவர்களின் ஸ்போர்ட்ஸ் டிராமா ஈர்த்ததா? | 7 Star Boys Review
சிறுவர்களின் ஸ்போர்ட்ஸ் டிராமா ஈர்த்ததா?(1.5 / 5)
கால்பந்துக்கும் கிராமத்து சிறுவர்களுக்குமான பிணைப்பை சொல்கிறது 7 Star Boys
கால்பந்து மீது தீராத ஆர்வம் கொண்ட கிராமத்து சிறுவர்கள், திறமை இருந்தும் முறையான பயிற்சியும் விளையாடுவதற்கான மைதானமும் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவ முன்வரும் நாயகன், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் மைதானத்தைச் சுத்தம் செய்து, சிறுவர்களுடன் இணைந்து அதை விளையாடத் தயார்படுத்துகிறார். இதற்கிடையே உள்ளூர் கால்பந்துப் போட்டி அறிவிக்கப்பட, முன்னாள் இந்திய கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன் சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்குகிறார். அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், போராட்டங்கள் மற்றும் வெற்றியை நோக்கிய பயணமே 7 Star Boys படத்தின் மையக்கதை.
கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் கால்பந்தை உயிராக நேசிக்கும் 14 வயதுக்குட்பட்ட ஏழு சிறுவர்களை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘7 Star Boys’. கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவும், அந்தக் கனவை நோக்கிய பயணத்தில் அவர்கள் சந்திக்கும் தடைகளும்தான் படத்தின் கதை. படத்தின் மிகப்பெரிய பலம் சிறுவர்களின் இயல்பான நடிப்பு. குறும்பு, நட்பு, போட்டி, தோல்வி, வெற்றி என அவர்களின் உணர்வுகள் செயற்கைத்தனம் இல்லாமல் வெளிப்படுகின்றன. குறிப்பாக தனிஷின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.
ஆண்டனி வர்கீஸ் சிறுவர்களின் கால்பந்து கனவுக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் இயல்பான எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் பயிற்சியாளராக இடம்பெறுவது படத்தின் விளையாட்டு பின்னணிக்கு கூடுதல் நம்பகத்தன்மையை கொடுக்கிறது. படத்தின் இன்னொரு முக்கியமான பலம் கால்பந்து போட்டிக் காட்சிகள். ஒரு கிராமத்தில் நடக்கும் போட்டிகளின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. ஃபயஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு கிராமத்தின் பசுமையையும், கால்பந்து மைதானத்தின் உற்சாகத்தையும் அழகாக பதிவு செய்திருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் இசையும் பின்னணி இசையும் குறிப்பாக போட்டிக் காட்சிகளுக்கு நல்ல வேகத்தை சேர்க்கின்றன.
அதேநேரத்தில் படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. மேலும், ஒரு Sports Drama-வில் வழக்கமாக இடம்பெறும் சில சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க முடிவதால், கதையில் பெரிய ஆச்சரியங்கள் குறைவாகவே இருக்கின்றன. கேரளா + கால்பந்தாட்டம் என்பது பிரிக்க முடியாத ஒரு கூட்டணி. அந்த தாக்கத்தை இன்னும் இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில், ‘7 Star Boys’ சிறுவர்களின் கனவையும் கால்பந்து மீதான காதலையும் வைத்து உருவாக்கப்பட்ட ஒரு அழகான Feel-Good Sports Drama. படத்தில் இன்னும் இயல்புத்தன்மை இருந்திருந்தால் ஈர்த்திருக்கும்.

