3BHK Review | மிடில் க்ளாஸ் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவு நிறைவேறியதா..?
3BHK(3 / 5)
ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவு, நனவானதா? என்பதே 3BHK
வாசுதேவன் (சரத்குமார்) கணக்கராக பணியாற்றிவருகிறார், மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தி (மீதா) என அழகான குடும்பம். ஆனால் இந்தக் குடும்பத்துக்கு என சொந்தமாக ஒரு வீடில்லையே என்பது வாசுதேவனுக்கு பெரும் கவலையளிக்கிறது. எப்படியாவது தன்னுடைய ஏரியாவிலேயே சொந்த வீடு வாங்க வேண்டும் என பணம் சேர்க்கிறார். அவருடன் உதவியாக அக்குடும்பமும் தங்களால் ஆனா பங்களிப்பை செய்கிறது. ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை என்பதால், உடல்நிலை, கல்வி, நிலத்தின் விலை ஏற்றம், திருமணம் எனப் பல காரணங்களால், வீடு வாங்கும் கனவு தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பாவுக்கு அடுத்து குடும்ப பொறுப்பை சுமக்க தயாராகும் பிரபு, அப்பாவின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொள்ளும் ஆர்த்தி, தன் விருப்பு வெறுப்புகளை ஒரு போதும் வெளிக்காட்டாத சாந்தி என இக்குடும்பம், வரும் தடைகளை மீறி தங்கள் கனவை நிறைவேற்றுகிறதா? பல வருடமாக நீளும் இப்பயணத்தில் அவர்கள் கற்றுக் கொள்வது என்ன? என்பதெல்லாம்தான் 3BHK படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தின் முதல் பலமே ஒரு எமோஷனலான கதைக்களத்தை, சிறப்பாக எடுத்தியிருப்பதுதான். அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய சிறுகதையை மிக அழகாக விரிவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். முக்கால்வாசி இந்திய குடும்பங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு களம். அதற்குள் ஒரு குடும்பத்தின் coming of age கதை போல படத்தை கொடுத்திருந்த விதம் சிறப்பு. நடிகர்களில் அத்தனை பேரும் மிகச்சிறப்பான பங்களிப்பை செய்திருக்கின்றனர். குடும்ப தலைவராக சரத்குமார், அதிர்ந்து பேசாத, தான் தோற்றுவிட்டோம் என்று கலங்குகிற, குழந்தைகளுக்கு பிடித்ததை விட எது பாதுகாப்பு என யோசித்து அதை திணிக்கிற ஒரு சராசரி இந்திய தந்தையை பிரமாதமாக பிரதிபலிக்கிறார். முதல் பாதி முழுக்க சரத்குமாரின் ஆக்கிரமிப்பு என்றால், இரண்டாம் பாதியை அழகாக கையாள்கிறார் சித்தார்த். தன் வாழ்வின் ஒவ்வொரு முடிவையும் பிறர் எடுப்பதை பொறுத்துக் கொள்ளும், ஒரு கட்டத்தில் உடைந்து அழும் இளைஞனாக கண்முன் நிற்கிறார். பள்ளிக் காட்சிகளில் அவர் உருவம் அத்தனை பொருத்தம் இல்லை என்றாலும் நடிப்பால் குறைகளை மறக்க வைக்கிறார். மீதா ரகுநாத், குடும்ப பொறுப்புகளை தன்மையாக எதிர்கொள்வதும், திருமணத்துக்குப் பிறகு பிரச்சனைகளை பற்றிக் கூறி வெடிக்கும் இடமுமாக கவர்கிறார். தேவயானி, சைத்ரா நடிப்பில் குறையேதும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கு படத்திற்குள் அழுத்தம் எதுவும் இல்லை.
சொந்த வீடு என்பது மரியாதை என்பதாக கதை ஆரம்பித்தாலும், அதை ரொமான்டிசைஸ் செய்யவில்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்களை, அதன் உரிமையாளர்கள் நடத்தும் விதம், இதனால் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற நெருக்கடி உருவாவது, அதன் பொருட்டு வாங்கப்படும் கடன், அந்தக் கடனை அடைக்க பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ ஒரு வேலைக்கு சென்று EMI கட்ட ஓடுவது என இந்த சமூக சுழற்சியை படத்தில் பதிவு செய்திருந்ததும் சிறப்பு. அதே சமயம் காட்சிகளாகவும் சுவாரஸ்யக் குறைவாக ஏதும் இன்றி ஒன்வொன்றையும் அழகாக சேர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சித்தார்த் ஒரு இன்டர்வியூ சென்று வீடு திரும்பும் காட்சியில் வசனம் ஏதும் இன்றி விஷயத்தை புரிய வைக்கும் இடம் ஒன்று வரும். அவ்வளவு அழகாக அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். "அடிக்கிறது மட்டும் வயலன்ஸ் இல்ல... அப்டி பாத்தா நானும் அதே தானே பண்ணியிருக்கேன்" என வாசுதேவன் உணரும் இடமும் வெகு சிறப்பு.
படத்தின் பெரிய ப்ளஸ் அம்ரித் ராம்நாத் இசை. கனவெல்லாம், துள்ளும் நெஞ்சம் என பாடல்கள் மூலம் கவனம் ஈர்ப்பவர், பின்னணி இசையிலும் படத்திற்கு அழுத்தம் சேர்க்கிறார். தினேஷ் கிருஷ்ணன் - ஜித்தின் ஒளிப்பதிவு படத்தின் மிக அழகான காட்சிகளுக்கு உதவி இருக்கிறது. வீடு வாங்கும் கனவு தடைபடுவது, மீண்டும் அதற்காக குடும்பம் முயல்வது என்ற சூழலை எங்கும் தேங்காமல் நகர்த்துகிறது கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால் ஒரு உடம்புக்குள்ள ஒரு கோடி வியாதியா என்பது போல், ஒரு குடும்பத்துக்கு இத்தனை பிரச்சனையா, இவர்கள் வாழ்க்கையில் நல்லது என எதுவுமே நடக்காதா என்ற அளவு சோக லெவல் ஓவர் டோஸ் ஆக இருக்கிறது. அதே போல படத்தின் மென்மையான டோனும் சற்றே நாடகத்தன்மையை கூட்டி சீரியல் தன்மை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது. ஆனால் படத்தில் இருக்கும் ஒரு முழுமை நம்மைக் கவர்கிறது. சின்ன சின்ன விஷயங்களை இறுதியில் கொடுப்பது மிக அருமை. முன்பு சொன்னது போல படம் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவைப் பற்றியதாக துவங்கி, அந்தப் பயணத்தின் ஊடாக தங்கள் குடும்பத்தைப் பற்றி தாங்களே கண்டு கொள்ளுவதாக நிறைவடைகிறது.
நிச்சயமாக சின்ன குறைகளைக் கடந்து பார்க்கையில் மிகவும் நெகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு படமாகத்தான் இருக்கிறது இந்த 3BHK.