veera dheera sooran part 2
veera dheera sooran part 2PT

திரை விமர்சனம் | கடந்த கால விசுவாசம் + நிகழ்கால பகை.. வென்றானா வீர தீர சூரன்?

நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் 2 படத்தின் திரை விமர்சனம்..
Published on

வீர தீர சூரன் 2 - (2.5 / 5)

மதுரையில் கட்டப்பஞ்சாயத்து செய்து சொகுசாக வாழ்கிறார்கள் ரவி (பிருத்விராஜ்) மற்றும் அவரது மகன் கண்ணன் (சுராஜ்). இவர்களை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி அருணகிரி (எஸ் ஜே சூர்யா). அதற்கு ஏற்றார் போல ஒரு வழக்கு வருகிறது, அதை வைத்து இருவரையும் இரவோடு இரவாக என்கவுன்டர் செய்ய திட்டமிடுகிறார்.

ஒருபக்கம் ஊர் திருவிழா நடக்கிறது, இன்னொரு பக்கம் என்கவுன்டர் விஷயம் தெரிந்து சுதாரிப்பாகிறார்கள் அப்பாவும், மகனும். விடிந்த பின் இருவரும் கோர்ட் சென்று சரணடைந்தால் ஒன்றும் செய்ய முடியாது என பரபரக்கிறார் அருணகிரி. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் முன்னாள் அடியாளான காளியால் (விக்ரம்) தான் முடியும் என அவரிடம் உதவி கேட்கிறார் கண்ணன். மளிகைக்கடை, மனைவி, குழந்தைகள் என நிம்மதியாக வாழும் காளி தயக்கத்தோடு ஒப்புக் கொள்கிறார். காளி என்ன செய்தார்? அருணகிரியின் என்கவுன்டர் திட்டம் என்ன ஆனது? கண்ணன், ரவி தப்பித்தார்களா? ஆகியவையே மீதிக் கதை.

கதையும் தாங்கும் விக்ரம்..

முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் சென்றுவிட வேண்டும் என கச்சிதமாக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ் யு அருண்குமார். ஒரே இரவில் நிகழும் கதை என்பதால், காட்சிகள் ஒவ்வொன்றையும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். முதல் அரைமணி நேரம் கதையில் களத்தையும், அதில் உள்ள சிக்கல்களையும் அழுத்தமாக பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் ஹீரோவை அறிமுகம் செய்து சட்டென கதைக்குள் கொண்டு வந்த விதமும் சிறப்பு.

veera dheera sooran part 2
veera dheera sooran part 2PT

நடிப்பு பொறுத்தவரை விக்ரம் மிரட்டலாக படத்தை தாங்கியிருக்கிறார். மனைவியை வம்பிழுப்பது, பிருத்வியிடம் தயங்கியபடி மறுப்பது, எதிராளிகளிடம் கேம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகள் என அத்தனையும் அட்டகாசம். அடுத்தபடியாக கவனத்தைக் கவர்கிறார் எஸ் ஜே சூர்யா. போலீஸ் அதிகாரியாக முறைப்பிலேயே பதிலளிப்பது, இயல்பாக அதிகாரத் திமிரைக் காட்டுவது, பஞ்சாயத்தில் மத்தியஸ்தம் பண்ணுவது என ஒவ்வொரு காட்சியையும் இயல்பாக நடித்திருக்கிறார்.

veera dheera sooran
veera dheera sooran

சுராஜ் பேச்சில் மலையாள வாடை அடித்தாலும், நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. வியர்த்து நடுங்குவது, போலீஸில் மாட்டியதும் முழிப்பது, சந்தேகத்தில் பதறுவது என எல்லாத்திலும் சிக்சர் வெளுக்கிறார். பிருத்விக்கு இது, அவர் ஏற்கனவே புதுப்பேட்டையில் செய்தது போன்ற கதாப்பாத்திரம் தான் என்றாலும், இதில் வேறொரு கோணத்தைக் காட்டியிருக்கிறார். துஷாராவுக்கும் சார்பட்டா பரம்பரை போன்ற கதாப்பாத்திரம் தான், அதில் தன்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் தனியாக தெரிந்தது எஸ் யூ பாலாஜியின் நடிப்பு. துடுக்கான அடியாளாக, ஆர்வக்கோளாறாக பேசும் நபராக என கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். சித்தாவுக்குப் பின் இதிலும் மிக அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு அட்டகாசம்..

படத்தில் பல நாயகர்கள் இருந்தாலும், நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தான். முக்கால்வாசி படம் இரவிலேயே நடக்கிறது. எந்த செயற்கைத்தனமும் இல்லாமல் நிஜமாகவே ஒரு இரவில் நாம் இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கிறோம் என்ற அளவுக்கான நெருக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த சிங்கிள் ஷாட் காட்சியும் வெகு சிறப்பு. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல் பெரிய அளவில் ஈர்க்கவில்லை, ஆனால் பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். விக்ரமின் விண்டேஜ் பாடலை பயன்படுத்தியது திணிப்பாக இருந்தாலும், ஒரு நல்ல மொமண்ட்.

வீர தீர சூரன்
வீர தீர சூரன்

படத்தின் பிரச்சனை என்ன என்றால், கதாப்பாத்திரங்களுக்குள் முறையான ப்ளே இல்லாமல் இருப்பதுதான். கதைக் களத்துக்கான செட்டப் மிக அட்டகாசமாக அமைந்துவிட்டது. இதன் பின் யார் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதற்கான இடமும் இருந்தது. ஆனால் அதை வைத்து எந்த சுவாரஸ்யத்தையும் சேர்க்கவில்லை. பிருத்வி - விக்ரம் திட்டம், எஸ் ஜே சூர்யா - விக்ரம் திட்டம், விக்ரம் - சுராஜ் திட்டம் என மிக மேலோட்டமாக அவை கையாளப்பட்டிருக்கின்றன. மேலும் இரண்டாம் பாதியில் படமும் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்படி நீள்கிறது. ஃப்ளாஷ்பேக்கில் வரும் `அந்த சம்பவம்’ ஒகே தான். ஆனால் அதைப் பெரிய பில்டப்பாக பேசுவதும் ஏன் எனப் புரியவில்லை.

வீர தீர சூரன்
வீர தீர சூரன்

மொத்தத்தில் ஒரு டீசண்ட்டான விறுவிறு திரில்லர் படமாக கவனம் ஈர்க்கிறது. இன்னும் திரைக்கதைக்குள் சுவாரஸ்யம் சேர்த்து ஆட்டத்தை சூடுபிடிக்க வைத்திருந்தால் பெரிய அளவில் கவர்ந்திருக்கும்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com