ஆன்லைன் விமர்சனத்திற்கு தடை விதிப்பது கருத்து சுதந்திரத்தில் தலையிடுவதற்கு சமம்! - நீதிமன்றம்
திரையரங்குகளில் படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்யவேண்டும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் திருந்தது . இவ்வழக்கு நேற்றைய தினம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் முன் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த அவர்,தெரிவிக்கையில், “ நீதிபதிகளைப் பற்றி கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலத்தில் உள்ளோம். சமூக ஊடகங்களில் எப்படி என்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது.
இவையெல்லாம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. பிரபல சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை மதிப்பாய்வு செய்வதும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதி .
எனவே, தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை முன்கூட்டியே முடக்க முயற்சிக்கக்கூடாது .” என்று தெரிவித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்தார்.