ரயிலுக்குள் அட்டகாசம் செய்யும் ஜாம்பிக்கள்...! "Train to Busan"

ரயிலுக்குள் அட்டகாசம் செய்யும் ஜாம்பிக்கள்...! "Train to Busan"
ரயிலுக்குள் அட்டகாசம் செய்யும் ஜாம்பிக்கள்...! "Train to Busan"

ஜாம்பிக்கள் எனப்படும் மிருகமனிதர்கள் பற்றி நிறைய சினிமாக்கள் வந்திருக்கின்றன. தமிழிலும் கூட அவ்வகைமையில் ஜெயம்ரவி நடிப்பில்
மிருதன் என்ற சினிமா உருவாக்கப்பட்டது. தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா கூட ஒரு வகையில் கண்ணுக்குத் தெரியாத ஜாம்பி
என்று தான் சொல்ல வேண்டும். கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரைச் சுற்றி இருக்கும் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
ஜாம்பியாகும் மனிதர்களும் அப்படித்தான். தான் ஜாம்பியானதும் சுற்றி இருப்பவர்களை கடித்து ஜாம்பி ஆக்கிவிடுவார்கள். 

க்யூங் யூ நடிப்பில் யான் ஷாங் ஹூ இயக்கத்தில் 2016’ல் வெளியான திரைப்படம் “ட்ரைன் டூ பூசன்”. கொரிய மொழித்திரைப்படமான
இது ஜாம்பி வகைமை கதையினை நல்ல செண்டிமெண்ட் ட்ராமாவாகவும் கலந்து உருவாக்கப்பட்டிருந்தது. 

நாயகன் ஸூக் வூ ஒரு சுயநலவாதி. அலுவலக வேலை மற்றும் குடும்பம் இரண்டிலும் அவன் தன்னளவில் சுயநலமாகவே வாழ்கிறான்.
அவனது 6 வயது மகள் சூ அன் சின்ன வயதில் மிகவும் பக்குவப்பட்ட குழந்தை. தாயை பார்க்க விரும்பும் தனது மகளை ரயிலில் அழைத்துக்
கொண்டு பூசன் நகருக்கு பயணிக்கிறான் நாயகன். அப்போது தான் அந்த ரயில் ஜாம்பி எனும் மிருக மனிதர்களால் பாதிக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது. அந்த ரயில் பயணத்தில் சந்திக்கும் தற்காலிக மனிதர்களுடன் சேர்ந்து ரயிலின் வேறொரு பெட்டியில் மாட்டிக்
கொண்டிருக்கும் தன் மகளை ஜாம்பிக்களுடன் போராடிக் காப்பாற்றுகிறான் நாயகன்., என்றாலும் அவனது முடிவு சோகமானது. கர்ப்பிணியின்
கணவனாக நடித்திருக்கும் மாங் டாங் சூவிற்கு நாயகனை விடவும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவன்
ஜாம்பிக்களுடன் சண்டையிடும் காட்சிகளில் ஒரு போர் வீரனைப் போல செயல்படுகிறான்.

கிராபிக்ஸ் காட்சிகள், எரிந்த நிலையில் ஓடும் ரயில், நிகழும் பெரிய விபத்துகள் என கதைக்குத் தேவையான அளவிலான பிரம்மாண்டம்
இருப்பது இப்படத்திற்கு பலம். இப்படம் வெறுமனே பேண்டஸி வகைமை ஷாம்பி படமாக இல்லை. மாறாக இது வாய்ப்பு கிடைத்த
இடங்களில் இவ்வகை நோய்கள் உலகில் பரவுவதற்கு பின் இருக்கும் கார்ப்பரேட்டுகளின் சுயநலத்தையும் சுட்டிக் காட்டுகிறது. 

அவ்வகையில் இது மற்ற ஷாம்பி படங்களில் இருந்து மாறுபடுகிறது. ஒளிப்பதிவினைப் பொருத்தவரை இது ரொம்பவே சவாலான கதைக்
களம். காரணம் கொத்துக் கொத்தாக நகரம் முழுக்க சிதறி ஓடும் ஷாம்பி மனிதர்களை தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
கிராபிக்ஸ் அமைப்புடன் இணைத்து பணியாற்றினால் தான் இந்த ரிசல்ட் கிடைக்கும். அவ்வகையில் ஒளிப்பதிவாளர் ஹ்யுங் டேயோக்
சிறப்பாக உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவின் ஷாம்பியாக மாறி மிரட்டியிருக்கிறார். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் கதை தான் என்றாலும் கூட
பார்வையாளனின் மனம் தாங்கக் கூடிய அலைவரிசையில் நிறங்களை கையாண்டிருப்பது கவனிக்கத்தக்கது. இசை கொஞ்சம் சுமார் தான்
என்றாலும் கூட திரைக்கதையும் திரை மொழியும் ‘பின்னணி இசை எல்லாம் இப்படத்திற்கு தேவையே இல்லை பாஸ்’ எனும் அளவிற்கு
இப்படம் பிரமாதமாக இருக்கிறது. 

நாயகன் க்யூங் யூ கொரிய சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான “A man and a women,
hard love, s dairy” ஆகிய படங்கள் முக்கியமானவை. ட்ரைன் டூ பூசன் என்ற இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
ஷாம்பிக்கள் பின்னணியில் குடும்ப உறவுகளின் ஆழம் மற்றும் கார்ப்பரேட் சதி குறித்து நேர்த்தியாக பேசியிருக்கும் இப்படம் 2016' ஆம்
ஆண்டுக்கான Blue dragon விருது மற்றும் Baeksang arts awards ஆகிய விருதுகளைப் பெற்றது.

ஜாம்பியைப் போலவே நம்மை அச்சுறுத்தும் இந்த கொரோனாவிலிருந்து நிச்சயம் ஒரு நாள் உலகம் மீண்டு எழும். அதுவரை தனிமனித விலகல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com