பாவக்கதைகள்: படம் எப்படி இருக்கு? - சினிமா விமர்சனம்..!

பாவக்கதைகள்: படம் எப்படி இருக்கு? - சினிமா விமர்சனம்..!
பாவக்கதைகள்: படம் எப்படி இருக்கு? - சினிமா விமர்சனம்..!

வெற்றிமாறன் உள்ளிட்ட முன்னனி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆந்தாலஜி சினிமாதான் பாவக்கதைகள். வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் தங்கம் பகுதியை இயக்கியிருக்கிறார் சுதா கொங்கரா.

தங்கம்:

ஒரு சிறிய கிராமத்தில் அழகான சில கதாபத்திரங்களை உருவாக்கி அதனதன் கதாபாத்திர இயல்பிலேயே கதை சொல்லி இருக்கிறார் சுதா கொங்கரா. படித்த இளைஞர் தங்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாந்தனு. அவரது நண்பன் சத்தார். சத்தாரின் தங்கை, சத்தார், சாந்தனு இம்மூவரின் வாழ்க்கை குறித்த முடிவுக்கு அவ்வூர் எப்படி எதிர்நிலையில் நின்றது. அந்த எதிர்நிலை எப்படி ஒரு உயிரைக் காவு வாங்கியது என்பதுதான் திரைக்கதை.

கதையின்படி தங்கமாக நடித்திருக்கும் சாந்தனுவும் சத்தாராக நடித்திருக்கும் காளிதாஸும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். சத்தார் பெண் தன்மையுடன் இருப்பவர். மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக பணம் சேர்த்து வைக்கிறார். சத்தார் மூலமே அவரது தங்கைக்கு காதல் தூதனுப்புகிறார் தங்கம்.

இஸ்லாமியப் பெண்ணும் மாற்று மதத்தைச் சேர்ந்த ஆணும் காதலிப்பதை எதிர்க்கும் பெற்றோர் இறுதியில் விபரீத முடிவுக்குத் தயாராவது பெரும் சோகம். சத்தார் போல பெண் தன்மை உள்ளவர்களை சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை திரைப்படுத்த முயற்சித்திருக்கிறார் சுதா கொங்கரா. இக்கதையினை எழுதியவர் ஷான் கருப்ப சாமி.

மேலோட்டமாகப் பார்த்தால் இக்கதைக்களம் வித்யாசமான முயற்சி போல தோன்றலாம் ஆனால் நிஜத்தில் சமூகத்தில் நடக்கும் இது தொடர்பான கொடுமைகளின் பத்து சதவிகித பாதிப்பைக் கூட இப்படமானது திரையில் தாங்கி நிற்கவில்லை என்றே தோன்றுகிறது. பெண் தன்மை உள்ளவர்களுக்கு இழைக்கப்படும் துன்பம் குறித்து பதிவு செய்யும் இயக்குநர் “அவங்கல்லாம் இப்படித்தான் பாஸ்” என்பது போலொரு காட்சியினையும் இப்படத்தின் துவக்கத்தில் வைத்திருக்கிறார். ரேஷன் கடையில் சத்தார் பேசும் இரட்டை அர்த்த வசனத்தை தவிர்த்திருந்தால் அக்கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்க முடியும். இறுதி காட்சியில் சத்தாரின் தங்கை பேசும் ஒரு வசனம் யதார்த்தம்.

சத்தாராக நடித்திருக்கும் காளிதாஸ் தன் நடிப்பால் அனைவரது மனதிலும் இடம் பிடிக்கிறார். சாந்தனுவும் சாந்தமான தனது முகபாவனைகளால் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கிறார். பாராட்டுகள் சாந்தனு. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் ‘தங்கமே தங்கமே’ பாடல் தங்கமாக மின்னுகிறது. கேமராவை டைம் மெஷின் போல கையாண்டு நம்மை சில தசாப்தங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று திருப்திபடுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான்.

பாவக்கதைகளின் நான்கு எபிசோடுகளில் ‘தங்கம்’ எபிசோடு 24 கேரட்டில் மின்ன முயற்சித்து ஏற்ற இறக்கங்களுடன் முடிந்திருக்கிறது.

லவ் பண்ணா உட்றனும் :

பாவக்கதைகளின் இன்னொரு பகுதியை இயக்கி இருப்பவர் விக்னேஷ் சிவன். ‘லவ் பண்ணா உட்றனும்’ என்ற இந்த எபிசோடிற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அஞ்சலி, கல்கி கோச்சிலின், பதம் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்பகுதி ஆணவக் கொலைகளை மையமாகக் கொண்டுள்ளது.

ஊர் மக்கள் முன் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிப்பவர் போல தோன்றும் வீரசிம்மன் கதாபாத்திரம் திரைமறைவில் முரண்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் பதம் குமார். இக்கதையில் காட்டப்படும் ஊர், வீடு என அனைத்தும் ஆந்திர நிலத்தின் பாணியில் இருக்கிறது. நரிக்குட்டியாக நடித்திருப்பவர் கொலைகளை ஏதோ கடலைமிட்டாய் தின்பது போல ஜஸ்ட் லைக் தட் செய்கிறார்.

ஆதியாக நடித்திருக்கும் அஞ்சலியை வீரசிம்மனாக நடித்திருக்கும் பதம்குமார், நரிக்குட்டி உதவியுடன் கொலை செய்து முடிக்கிறார். இன்னொரு மகள் கதாபாத்திரத்திலும் அஞ்சலியே நடித்திருக்கிறார். அஞ்சலியை தன்பாலின ஈர்ப்பாளர் போல சித்தரித்து பிறகு அப்படி இல்லை அவர் வேறு ஒரு ஆணைத்தான் காதலிக்கிறார் என்றெல்லாம் சமாளித்து குழப்பி இருக்கிறார் இயக்குநர்.

தெளிவற்ற திரைக்கதை. ஆணவக் கொலையினை விக்னேஷ் சிவன் நியாயப்படுத்துகிறாரா? எதிர்த்துப் பேசுகிறாரா? என புரியாத கதையோட்டம் என ஏனோ தானோ என உருவாக்கியிருக்கிறார்கள் இந்த ‘லவ் பண்ணா உட்றனும்’ எபிசோடை. எங்கள விட்ருங்க விக்னேஷ் சிவன் என புலம்பித் தள்ளும் அளவுக்கு வைத்துச் செய்திருக்கிறார்.

அனிருத்தின் பங்களிப்பு சற்று திருப்தியளிக்கிறது. உண்மையில் ‘லவ் பண்ண விட்றனும்’ இவ்வளவு இலகுவாக கையாள வேண்டிய கதை அல்ல. இன்னுமே பெரிய பொறுப்புடன் கையாண்டிருக்க வேண்டிய கதை. இன்றைய சமூகத்தில் விஷம் போல பரவியிருக்கும் ஆணவக் கொலைகள் குறித்த கதையினை குழந்தைகளுக்குச் சொல்லும் அம்புலிமாமா கதை போல சொல்லி இருப்பது அதிருப்தி. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விக்னேஷ் சிவன். உங்ககிட்ட இருந்து மீண்டும் ஒரு ‘நானும் ரவுடிதான்’ போன்ற படத்தை எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்.

வான்மகள் :

சராசரி நடுத்தரக் குடும்பம். கவுதம் மேனன், சிம்ரன் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அமைதியாக வாழும் குடும்பத்தில் தன் பெண் பிள்ளைக்கு ஒரு துயரம் நிகழவே அதனை அக்குடும்பம் எப்படி எதிர் கொண்டது என்பது தான் கதை. 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவனைப்பற்றி போலீஸில் புகார் கொடுக்கக் கூட துணியாத மனநிலையினை இச்சமூகம் எப்படி கட்டமைத்து வைத்திருக்கிறது என்பதை மிடில்கிளாஸ் மனநிலையில் நின்று பேசுகிறது இப்படம்.

கவுதம் மேனன் வான்மகளை இயக்கியிருக்கிறார். அவரது படத்தில் இயல்பாகவே தொற்றிக் கொள்ளும் செயற்கைத்தனங்களை இப்படத்திலும் தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் கவுதம் மேனன் கிராமத்து சராசரி அப்பாவாக தன்னாலான அளவு நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். 96 படத்தின் மூலம் கவனம் பெற்ற ஆதித்ய பாஸ்கரும் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தின் க்ளைமேஸ் கொஞ்சம் ஆறுதல். பல இடங்களில் வசனங்களும் அபத்தம்!

ஓர் இரவு :

வேறு சாதி ஆணை திருமணம் செய்து கொண்டு நகரத்தில் வாழும் தன் மகள் சாய் பல்லவியை காண வருகிறார் அப்பா பிரகாஷ்ராஜ். தன் மகள் தாயாகப் போகும் நிலையில் மகளை தன் ஊருக்கு அழைத்து வந்து வளைகாப்பு நடத்த ஆசைப்படுகிறார் தந்தை பிரகாஷ்ராஜ். அதன் படி விழா ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. விழாவிற்கு முதல் நாள் பிரகாஷ்ராஜுக்குள் இருக்கும் சாதி ஆணவம் வெளியே வரத் தொடங்குகிறது. அதன்பின் நடந்தவை அதிர்வுகள். மேலோட்டமாகப் பார்த்தால் இது சராசரிக் கதை போல தோன்றலாம். ஆனால் வெற்றிமாறன் தனக்குக் கிடைத்த சிறிய நேரத்தில் மிக நேர்த்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

“நான் குடுத்த தண்ணியவே நீங்க குடிக்காம வச்சுட்டீங்க” என சாய்பல்லவியின் கணவர் பேசும் காட்சியாகட்டும். “நீ படிச்சதாலதான் உன் விருப்பப்படி கல்யாணம் பண்ணிட்ட அதனால எங்கள அப்பா படிக்க வேணாம்னு சொல்லிட்டாரு” என சாய்பல்லவியின் சகோதரி பேசும் வசனமாகட்டும் அருமை. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு இக்கதை சொல்லல் முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு காட்சியின் அடர்த்திக்கும் பார்வையாளனுக்கும் இடையே இருக்கும் மனத்தொடர்பு சட்டென அறுந்து போய்விடாமல் இருக்க நிறைய லென்த்தான சிங்கிள் ஷாட்டுகளை பயன்படுத்தி இருக்கிறார்.

சாய்பல்லவி சின்னச் சின்ன பாவணைகளின் மூலம் பார்வையாளன் மனதில் அழுத்தமாகப் பதிகிறார். ஆணவக்கொலை குறித்த அழுத்தமான பதிவு. சாதி ஆணவப் போக்கின் நச்சு வீரியம் எப்படிப்பட்டது என்பதை பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் வாயிலாக தோலுரித்துக் காட்டுகிறது ஓர் இரவு. பாவக் கதைகளின் நான்கு எபிசோடுகளில் கூடுதலான ஆறுதல் தரும் படைப்பு இந்த ஓர் இரவு.

மொத்தமாக பாவக்கதைகளின் நிறை-குறைகளை பகுத்துப் பார்த்தால். இப்படியான முயற்சிகள் இப்போதுதான் தமிழ் சினிமாவில் மெல்ல மேலெழுந்து வருகின்றன. அவ்வகையில் பாவக் கதைகளை கைதட்டி வரவேற்பது நமது கடமை. அதேவேளையில், அபத்தங்களையும் சொதப்பல்களையும் தவிர்த்து, நேர்த்தியான ஆக்கங்களைக் கொடுக்கும் கடைமையும் படைப்பாளிகளுக்கு உண்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com