மூடநம்பிக்கைக்கு எதிராக களமாடிய கோலி: ஆப்பிரிக்க பெண்களின் கண்ணீர் பக்கம் காட்டும் சினிமா!

மூடநம்பிக்கைக்கு எதிராக களமாடிய கோலி: ஆப்பிரிக்க பெண்களின் கண்ணீர் பக்கம் காட்டும் சினிமா!
மூடநம்பிக்கைக்கு எதிராக களமாடிய கோலி: ஆப்பிரிக்க பெண்களின் கண்ணீர் பக்கம் காட்டும் சினிமா!

1960-ஆம் வருடம் பிரான்சின் ஆளுகையில் இருந்து மாலிக் கூட்டமைப்புடன் இணைந்து சில நாடுகள் விடுதலை பெற்றன. அதில் ஒன்றுதான் மேற்கு ஆப்பிரிக்க நாடான 'செனகல்'. எபோலா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் செனகலும் ஒன்று.

உலகில் முதன்முதலில் விவசாயத்தை முன்னெடுத்தவர்கள் பெண்கள். சமுதாயத்தை வழி நடத்தியவர்கள் பெண்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சிந்தனையிலும் வலுவுடன் முன்நகர்ந்த பெண்களைக் கட்டுப்படுத்தவும், தங்கள் அடிமைகளாக மாற்றவும் ஆண்கள் கையாண்ட வழிமுறைகளில் ஒன்றுதான் மதமும், அதைத் தொடர்ந்த மூட நம்பிக்கைகளும் என்பது மானுடவியல் பார்வைகளில் ஒன்று. இந்தக் கோணத்தில் வரலாறு நெடுகிலும் மூடநம்பிக்கையின் பெயரால் பெண்களின் ரத்தம், நதியாக ஓடியிருக்கிறது. 'மூலாடி' என்ற மூட வழக்கத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க செனகல் பெண்களை கதைக் கருவாக கொண்ட இந்தத் திரைப்படத்திற்கும் அதே பெயர்தான்... 'மூலாடி' (2004).

'மூலாடி' என்பது ஒரு சடங்கின் பெயர். பெண்பிள்ளைகளின் பிறப்புறுப்பை சிதைப்பதுதான் 'மூலாடி'. பிறப்புறுப்பு அறுபடும்போது சிந்தப்படும் ரத்தம், அம்மண்ணையும் பெண்ணையும் புனிதம் செய்கிறதாம். இஸ்லாமியர்கள், யூதர்கள். கிறிஸ்தவர்கள், ஆப்பிரிக்காவின் சில இனத்தினர் என பலரும் இந்த சடங்கினை செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. சூடான் நாட்டை சேர்ந்த ருஷ்மான் என்பவர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில், மொத்தமாக 4000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் 'ஏன் இந்த சடங்கு செய்யப்படுகிறது?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. 'இது எங்கள் மரபு, கணவன்மார்கள் மகிழ்வார்கள், பெண்கள் புனிதமடைவார்கள்' எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், 'மூலாடி' செய்யப்படுவதற்கான துல்லியமான காரணப் பின்புலன்கள் ஏதும் இன்று வரை அறியப்படவில்லை.

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து சமீப காலம் வரை இது நடைமுறையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சடங்கினால் பல ஆயிரம் பெண்கள் ரத்தப் போக்கிலும், வலியிலும் தற்கொலை செய்துகொண்டும் இறந்து போயிருக்கிறார்கள். செனகல் நாட்டின் ஒரு சிறிய பசுமையான கிராமத்தை கதைக் களமாக கொண்டு களமாடியிருக்கிறார் இயக்குனர் ஔஸ்மேன் செம்பேன். பெரிதினும் பெரிய தடைகளுக்கு பின்னரே அவரால் இந்தப் படத்தை திரைக்கு கொண்டுவர முடிந்தது.

கோலி என்ற கதாபாத்திரம்தான் இப்படத்தின் நாயகி. இவர் மூலாடி சடங்கினால் தனது முதல் இரண்டு பெண்பிள்ளைகளை பறிகொடுத்தவர். திருமண வயதிலிருக்கும் தனது மூன்றாவது மகளுக்கு அச்சடங்கு செய்வதிலிருந்து போராடி விலக்கு பெற்றவர். இந்நிலையில், அவர் தன் வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கையில், நான்கு சிறுமிகள் ஓடி வந்து அவரிடம் தஞ்சம் அடைகிறார்கள். மொத்தம் ஆறு பெண்களுக்கு 'மூலாடி' செய்ய ஏற்பாடுகள் நடந்ததாகவும், நாங்கள் நான்கு பேரும் தப்பித்து வந்ததாகவும், இரண்டு பேர் காணாமல் போனதாகவும் சொல்லும் அச்சிறுமிகளை கோலி எப்படி மதவாதிகளிடமிருந்து காப்பாற்றினார் என்பதே மீதிக் கதை.

கோலி தன் கணவரின் மூன்று மனைவிகளில் இரண்டாமவர் மூவரில் கோலி மீது தான் கணவருக்கு பிரியம் அதிகம். தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கும் அவர், திரும்பிவர சில நாட்கள் ஆகலாம். இந்நிலையில், கோலியிடம் தஞ்சம் அடைந்திருக்கும் சிறுமிகளை மூலாடி செய்ய அனுப்புமாறு வயதான பெண்கள் சிலர் கோலியின் வீட்டு வாயிலை அடைகிறார்கள்.

அப்பெண்கள் எந்த மயக்க மருந்தோ, மருத்துவ உதவியோ இல்லாமல் கத்தி, இரும்பு தகடு முதலானவற்றைக் கொண்டு சிறுமிகளை பிடித்து 'மூலாடி' செய்துவிடுவார்கள். சிறுமிகளின் அலறல் ஒலியும், உதிர நெடியும் நம்மை நிலைகுலையச் செய்துவிடுகிறது. பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட சிறுமிகள் சிறுநீர் கழிக்க முடியாமல் துடிக்கும் காட்சியில் பார்வையாளன் முகத்தில் வியர்வை தெறிக்கிறது.

கோலி தன்னிடம் அடைக்களம் பெறும் சிறுமிகளை அனுப்ப தயாராக இல்லை. அவர் தன் வீட்டின் வாயிலில் ஒரு சிறு சிவப்பு நிற கயிற்றைக் கட்டி, இதைத் தாண்டி போகாதீர்கள் என அக்குழந்தைகளிடம் சொல்லி வைக்கிறார். 'மூலாடி' செய்யவந்த கிராம கிழவிகளிடம், பெரிய கத்தியை காட்டி மிரட்டி விரட்டுகிறார். இடையிடையே கொண்டாட்டமாக நாட்டுப்புறப் பாடல் பாடி ஆடுவார். அவர்தான் கோலி.

இந்நிலையில், பிரான்சிலிருந்து ஊர்த் தலைவரின் மகன் கிராமத்துக்கு வந்து சேர்கிறான். அவனுக்கு கோலியின் மகளை திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு இன்னும் 'மூலாடி' செய்யப்படவில்லை என்பதால் திருமணம் முடிப்பது தடுக்கப்படுகிறது. ஆனால், நகரத்திலிருந்து வந்த அந்த இளைஞனுக்கு அந்தத் தவறு புரிந்தாலும் தந்தையின் சொல்லை மீற அவனால் முடியவில்லை.

கிராமப் பெண்களின் பிரதான பொழுதுபோக்கு, ரேடியோ கேட்பது. இதனால்தான் நகரத்திலிருந்து நம்மூர் பெண்களுக்கு செய்திகள் கிடைக்கிறது. விழிப்புணர்வு பெறுகிறார்கள் என என்னும் அந்த ஊர் ஆண்கள், வீட்டிலிருக்கும் அனைவரின் ரேடியோக்களையும் ஊர் மையத்திலிருக்கும் மசூதி முன்பு வந்து போட்டு உடைக்கிறார்கள். இந்த ரேடியோக்களுக்கு பேட்டரி உட்பட தினசரி மக்கள் தேவைகளான ரொட்டி உள்ளிட்டவற்றை வெளியூரிலிருந்து வாங்கிவந்து, அக்கிராமத்தில் விற்று வந்த ஒருவன், கோலிக்கு ஆதரவளித்தான் என்பதற்காக கொல்லப்படுகிறான்.

இதற்கிடையிலெல்லாம் வெளியூர் சென்றிருந்து கோலியின் கணவர் ஊர் திரும்பிடிருந்தார். அவரும் கோலிக்கு ஊர் வழக்கத்தை புரியவைக்க முயன்றாலும், கோலி மனம் மாறுவதாக இல்லை. நாயகி கோலி சவுக்கடிகள் பெறுகிறார். கோலி பொதுப் பஞ்சாயத்தில் ஊர் பெரியவர்களிடம் "மூலாடி செய்ய வேண்டும் என்பது நம் மதத்தில் சொல்லவேவில்லை. வருடம்தோறும் பல ஊர்களிலிருந்து பெண்கள் மெக்கா செல்கிறார்கள், அவர்கள் எல்லோரும் 'மூலாடி' செய்து கொண்டவர்கள் அல்ல. இதை நான் ரேடியோவில் கேட்டேன்" என வாதாடுகிறார் கோலி. அந்த ஊரின் பெண்களுக்கும் அதனை புரியவைக்கிறார். 'மூலாடி' சடங்கிலிருந்து தப்பிய ஆறு சிறுமிகளின் நிலை என்ன ஆனது என்பதும் திரைக்கதையில் முக்கியமான அம்சம்.

ஊர் இரண்டாக பிரிந்து ஒரு குழு கோலிக்கும், மற்றொன்று மதவாதிகளுக்குமாக ஆதரவு செய்து வரும் நிலையில், மூலாடி செய்யும் முதிய கிழவிகளிடமிருந்து கத்தி, துருபிடித்த தகடு உள்ளிட்டவற்றை பறித்து, தன் ஆதரவு பெண்களுடன் அவற்றை தீயிட்டு எரிக்கிறார் நாயகி கோலி. பின், ஆப்பிரிக்க கிராமிய பாடல் ஒன்றை பாடி குஷியாக நடனமாடுகிறார். அந்தப் பாடல் விடுதலை, வேதனை இரண்டின் குரலாகவும் இருந்தது.

'கேன்ஸ்' திரைப் படவிழா, அமெரிக்க பொலிடிகல் பிலிம் சொசைட்டி விருது, சினிமானிலா சர்வதேச விருது என பல விருதுகளை இத்திரைப்படம் வென்றது. 'மூலாடி' இப்போது வழக்கத்தில் இல்லை என்றாலும், அதை விட பெரிய பெரிய சவால்கள் பெண்கள் முன்னால் அதி பயங்கரமாக நின்று கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com