யானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்!

யானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்!
யானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லாலுக்கு சம்மன்!

யானைத் தந்தங்கள் வைத்திருந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் மோகன் லாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் மோகன் லாலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் 2012 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில், 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக கோடநாடு வனத்துறையினர் மோகன் லாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தந்தங்களைத் திருப்பிக் கேட்டு, அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை விடுத்தார். வனத்துறை சட்டப்படி, யானைத் தந்தங்களை வீடுகளில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் சட்டத்தில் திருத்தம் செய்து அன்றைய கேரள அரசு தந்தங்களை, மோகன் லாலிடம் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்பட்டது.  இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் 7 வருடத்துக்குப் பிறகு கோடநாடு வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வன அதிகாரியான ஜி.தனிக்லால், பெரும்பாவூர் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். 

இந்தக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன் லால் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘தந்தங்கள் வைத்திருக்க தன்னிடம் லைசென்ஸ் இருக்கிறது. இருந்தும் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதில் சதி இருக்கிறது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த புகாரை எழுப்பியுள்ளனர்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெரும்பாவூர் நீதிமன்றம், டிசம்பர் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் மோகன் லாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய, சென்னை டெய்லர்ஸ் சாலையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் உட்பட மேலும் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com