அரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு!

அரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு!

அரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு!
Published on

மாணவர்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தொகையை ஆந்திர அரசு செலுத்தாதைக் கண்டித்து பேரணி செல்ல முயன்ற  தெலுங்கு நடிகரும் வித்யாநிகேதன் கல்வி நிறுவனத் தலைவருமான நடிகர் மோகன் பாபு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரை அடுத்து வந்த அரசுகளும் இதை தொடர்ந்து செய்து வருகிறது. அதாவது அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்கள், ஏற்கனவே கட்டணம் செலுத்தி படித்துவருகின்றனர். இந்தப் பணத்தை மாணவர்களுக்கு கல்லூரி வாயிலாக அரசு திருப்பிச் செலுத்தும்.

சமீப காலமாக கல்லூரிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை  அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் சில தனியார் கல்லூரிகள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

தெலுங்கு நடிகர் மோகன் பாபு, திருப்பதியில் வித்யாநிகேதன் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது கல்லூரிக்கு 20 கோடி ரூபாயை, ஆந்திர அரசு பாக்கி வைத்துள்ளது. கடந்த 3 வருடங்களாக கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் இது தொடர்பாக மனுக்கள் அளித்தும் பதில் இல்லை என்றும் அதைத் திரும்பக் கொடுக்குமாறும் நடிகர் மோகன்பாபு மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பதி அருகில் உள்ள ரங்கம்பேட்டா பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் நேற்று போராட்டம் நடந்தது. பின்னர் அங்கிருந்து பத்து மணியளவில்  பேரணியாகச் செல்ல முடிவு செய்திருந்தார். இதில் மோகன்பாபு மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோரும் கலந்துகொண்டனர்.  இதன் காரணமாக, திருப்பதி-பிலெரு சாலையில் சுமார் 15 கி.மீ-க்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

 பின்னர், மோகன் பாபுவை, கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சிறை வைத்தனர். அவரை வெளியே அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில், ’மாணவர்களின் கட்டணத்தைக் கேட்டு பேரணி செல்ல இருந்தேன். திருப்பதியில் என் வீட்டுக்கு வந்துள்ள போலீசார், வெளியே செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார் மோகன்பாபு.

 இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com