ஏப்ரல் 12ல் வெளியாகிறது ‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம்
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை குறித்த திரைப்படம் வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட தேர்தலுக்கு அடுத்த நாள் வெளியாகவுள்ளது.
ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓபுராய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. இப்படத்தில் விவேக் ஓபுராய் பிரதமர் மோடியின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தை சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் மற்றும் சுரேஷ் ஓபுராய் தயாரிக்கின்றனர். இந்தப் படம் மோடியின் கடந்த கால வாழ்க்கையில் தொடங்கி அவர் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 தேர்தலில் இந்திய பிரதமராகும் வரையுள்ள நிகழ்வுகளை கொண்டுள்ளது. இந்தப் படத்தை ஜனவரி 7ஆம் தேதி மகாரஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கிவைத்தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் 28ஆம் தேதி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நரேந்திர மோடி திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து அதன் தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 11ஆம் தேதிக்கு அடுத்த நாளாகும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க முற்படும் நிலையில் இப்படத்தின் வெளியீடு அதிக எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளன.
அத்துடன் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் மக்கள் எவ்வாறு இவ்வளவு விரைவில் படம் முடிக்கப்பட்டுள்ளது என வினவியுள்ளனர். இந்த அறிவிப்பினால் பலர் பிரம்மிப்பும் அடைந்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஸ்ரினா வாஹாப் மோடியின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பர்கா பிஸ்ட் மோடியின் மனைவியாக இப்படத்தில் நடிக்கிறார். மேலும் அமித் ஷா கதாபாத்திரத்தில் மனோஜ் ஜோசி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.