உடல்நலக் குறைவால் அவதிப்படும் மிதுன் சக்கரவர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இந்தி, பெங்காலி, போஜ்புரி உட்பட பல்வேறு மொழிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடித்த, ‘யாகாவராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்திருந்தார். மும்பையை சேர்ந்த மிதுன், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஊட்டியில் உள்ள தனது பங்களாவில் வசிப்பது வழக்கம்.
70 வயதான மிதுன் கடந்த சில வருடங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் வலி அதிகமானது. இதையடுத்து டெல்லியில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிற தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்களும் இந்திய திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.