ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்.. நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக உருவாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் ‘எந்திரன்’. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த இப்படத்திற்கு A.R. Rahman இசையமைத்திருந்தார். தற்போது இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எந்திரன்’ படத்திற்காக உலகப் புகழ்பெற்ற பாப் நட்சத்திரம் Michael Jackson-உடன் இணைந்து பணியாற்ற A.R. Rahman திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். அந்த விஷயம் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
‘Honest Townhall’ நிகழ்ச்சியில் பேசிய தமன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது A.R. Rahman மற்றும் Michael Jackson இடையிலான இந்த நிறைவேறாத இசைக் கூட்டணி குறித்தும் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “ ‘எந்திரன்’ படத்துக்காக மைக்கேல் ஜாக்சனுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து ஒரு பாடலில் பணியாற்றத் திட்டமிட்டிருந்தார். மே மாதம் அதற்கான ஒப்பந்ததை முடித்தார், ஆனால் ஜூன் மாதம் மைக்கேல் இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால், மைக்கேல் ஜாக்சன் - ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி ரஜினிகாந்த் படத்தில் நடந்திருக்கும்" எனக் கூறினார்.
இந்தக் கூட்டணி இணைய திட்டமிட்டது இதற்கு முன்புகூட ஒருமுறை நடந்தது. 2009-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற பிறகு Los Angeles-ல் Michael Jackson-ஐ சந்தித்ததாக Rahman தெரிவித்திருந்தார். அந்த சந்திப்பில் இருவரும் இசை மற்றும் உலக அமைதி குறித்து பேசியதாகவும், Michael Jackson தனது குழந்தைகளை Rahman-க்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், ‘We Are The World’ போன்ற மற்றொரு பாடலை இணைந்து உருவாக்கலாம் என்ற எண்ணத்தையும் Michael Jackson தெரிவித்ததாக Rahman பகிர்ந்திருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு இந்தியா திரும்பிய A.R. Rahman, இயக்குநர் ஷங்கரிடம் Michael Jackson உடனான சந்திப்பு குறித்து தெரிவித்ததாகவும், அதன் பின்னர் ‘எந்திரன்’ படத்திற்காக Michael Jackson-ஐ இணைத்துக்கொள்ள முடியுமா என்ற யோசனை உருவானதாகவும் Rahman முன்பு கூறியிருந்தார். ரஜினிகாந்தின் ‘எந்திரன்’, A.R. Rahman-ன் இசை மற்றும் Michael Jackson-ன் சர்வதேச புகழ் — இந்த மூன்றும் ஒரே இசைப் படைப்பில் இணைந்திருந்தால் அது இந்திய சினிமாவின் மிகப் பெரிய சர்வதேச இசை கூட்டணிகளில் ஒன்றாக அமைந்திருக்கும். ஆனால் Michael Jackson-ன் திடீர் மறைவு அந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் வெளியிட்டுள்ள இந்த தகவல், ‘எந்திரன்’ படத்துடன் தொடர்புடைய நிறைவேறாத ஒரு பிரம்மாண்ட இசைக் கனவை மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

