மெர்சல் பாடல்கள்... ரகசியம் உடைத்த பாடலாசிரியர்!
மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனக்கு பாடல் எழுதும் பாக்கியம் கிடைத்ததாக பாடலாசிரியர் விவேக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளர்.
36 வயதினிலே படத்தில் வாடி ராசாத்தி, இறைவி படத்தில் மதினி, கபாலி படத்தின் உலகம் ஒருவனுக்கா உள்ளிட்ட பல பாடல்களை எழுதியவர் விவேக். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள மெர்சல் படத்தில் விவேக் பாடல் எழுதியுள்ளார். மெர்சல் படத்தின் ஆடியோ ஆகஸ்டு 20ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’மெர்சல் படத்திற்காக பாடல்களை எழுதியுள்ளேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடல் எழுத ஒருசில பாடலசிரியர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ ஆகியோருக்கு நன்றி. தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பாடல் எழுதிய உற்சாகத்தோடு மேலும் பயணிக்க இருக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படம்பற்றிய தகவல்கள் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இப்படம் பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே அறிவித்து வந்தது. அத்தோடு பொதுவாகவே படம் பற்றிய தகவல்களை இயக்குநரோ, அல்லது தயாரிப்பு நிறுவனமோ அறிவிப்பதுதான் வழக்கம். ஆகஸ்டு மாதம் 20ம் தேதி மெர்சல் படத்தின் ஆடியோ வெளியாக உள்ள நிலையில் வழக்கத்துக்கு மாறாக, பாடலாசிரியரே முன் வந்து இப்படத்தில் தான் பாடல்களை எழுதியுள்ள ரகசியத்தை உடைத்துள்ளார்.
அட்லீ இயக்கியுள்ள மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.