மெர்சலின் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த சர்ச்சைக்குரிய வசனக் காட்சிகளை விஜய் ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
மெர்சல் திரைப்படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி பற்றி நடிகர் விஜய் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இதற்கு தமிழக பாஜக மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவின் எதிர்ப்பைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் அறிவித்திருக்கிறார். இது நாடு முழுவதும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அந்தக் காட்சியில் " 7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக தரும் போது 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் நமது அரசாங்கத்தால் ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியவில்லை..? மெடிசனுக்கு 12 சதவீதம். ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கிற சாராயத்திற்கு ஜிஎஸ்டி இல்லை. நமது நாட்டில் நம்பர் 1 அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லை. காரணம் என்னவென்று கேட்டால், சப்ளை செய்ய பணம் பத்தவில்லையாம். இன்னொரு அரசு மருத்துவமனையில், டயாலிசஸ் செய்யும் போது கரண்ட் கட்டாகி 4 பேர் செத்தே போய்விட்டனர். கேவலம் அங்கு ஒரு பவர் பேக்கப் இல்லை. இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை பெருச்சாளி கடித்து இறந்து போகும் நிலைமை எல்லாம் நமது நாட்டில்தான் இருக்கிறது. ஜனங்கள் அரசாங்க மருத்துவமனையை பார்த்துத்தான் பயப்படுகிறார்கள். அந்த பயம் தான் தனியார் மருத்துவமனையின் இன்வெஸ்மென்ட்" என பேசியிருக்கிறார்.
இதேபோல் மற்றொரு டயலாக்கில் திருடனை பார்த்து நடிகர் வடிவேலு பேசும்போது, ' கிழிஞ்ச பர்ஸ்ல என்னடா தேடுற..? நியூ இந்தியா.. ஒன்லி டிஜிட்டல் மணி.. அங்கு யாருகிட்டயும் பணம் கிடையாது. எல்லாமே கியூதான். உன்கிட்ட சொல்றதுக்கு என்ன.. அங்கு எல்லோருமே என கூறியவாறே நாக்கை வழித்து காமிப்பார்" இந்த இரண்டு வசனங்களும்தான் தற்போதைய சர்ச்சைக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கின்றன.