ரசிகர்களின் கொண்டாட்டத்துடனும், பல தடைகளை கடந்து வரும் மெர்சல் படம் வெற்றி அடைந்தாலும், தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் ஏற்படும் என சில விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில், அட்லியின் இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தீபாவளியான நாளைய தினத்தில் திரைக்கு வருகிறது மெர்சல் படம். இதற்காக டிக்கெட்டுகளை வாங்க துடிக்கும் விஜய் ரசிகர்கள், திரையரங்களில் நீண்ட வரிசையிலும், இணையதளங்களில் போட்டி போட்டுக்கொண்டும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தப் படம் வசூலை அள்ளிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் நஷ்டத்தைத்தான் கொடுக்கும் என்று
கணித்திருக்கிறார்கள் சில விநியோகஸ்தர்கள்.
இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.120 கோடி எனச் சொல்லப்படுகிறது. 150 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். அப்படிப்பார்த்தால் படம் லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது போலத் தெரியும். உண்மையில் 120 கோடி பட்ஜெட் என்பதில் அந்தப் பணத்திற்கான வட்டி சேராதாம். 120 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டு, பல மாதங்கள் வரையில் அதற்கான வட்டித் தொகை அளவுக்கு மீறி இருக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். வழக்கமாக
வெளியே புழக்கத்தில் உள்ள வட்டிக்கணக்குகளுக்கும் சினிமாவில் உலவும் வட்டிக்கணக்குக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி இருக்கும். சினிமாவின் வட்டி சதவீதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பயங்கரமாக இருக்கும். எனவே இந்தப்படத்தை தயாரிப்பாளர் 150 கோடிக்கு விற்பனை செய்திருந்தாலும் அது அவருக்கு லாபத்தைக் கொடுக்காது என்கிறார்கள் அந்த விநியோகஸ்தர்கள்.