மெர்சலுக்கு தணிக்கைச் சான்று இன்னும் வழங்கப்படவில்லை
மெர்சல் படத்துக்கு தணிக்கைச் சான்று இன்னும் வழங்கப்படவில்லை என்று தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 6 ம் தேதி இயக்குநர் அட்லீ மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதனை அறிந்த விலங்குகள் நல வாரியம் தங்களின் தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் அதற்குள் எப்படி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி இருந்தது.
படத்தின் ட்ரெய்லரில் புறா உட்பட சில விலங்குகள் இடம் பெற்றிருந்தன. அவை துன்புறுத்தப்பட்டனவா என ஆராய்ந்து சான்றளித்த பிறகே தணிக்கை சான்றுகள் தரப்படுவது வழக்கம். ஆனால் இந்த நடைமுறைகளே இன்னும் முடிவடையாத நிலையில் சான்று எவ்வாறு பெறப்பட்டது என்பதில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தணிக்கை வாரியம் தரப்பில் இருந்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டவில்லை என மறுத்துள்ளது.
இந்நிலையில் படக்குழு சார்பில் விலங்குகள் நலவாரியத்தில் சில விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதில் பறவைகள், விலங்குகள் சம்பந்தமான காட்சிகள் தாய்லாந்தில் எடுக்கப்பட்டதாகவும் எந்தெந்தக் காட்சிகள் அதில் சிஜி என தெளிவாக குறிப்பிடுள்ளதாகவும் படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

