5 ஸ்டார் ஓட்டலில் புழுக்கள் நெளிந்த உணவு: தமிழ் ஹீரோயின் அதிர்ச்சி
ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக நடிகை மீரா சோப்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில், லீ, கில்லாடி, ஜாம்பவான், மருதமலை, காளை உட்பட சில படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் மீரா சோப்ரா. இவர் பிரபல இந்தி நடிகை, பிரியங்கா சோப்ராவின் உறவினர். இவர், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாகக் கூறி இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவருக்கு வழங்கப் பட்ட உணவில் இருந்து புழு ஒன்று ஊர்ந்து செல்கிறது. அதில் பேசியுள்ள மீரா சோப்ரா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தி லுள்ள 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’நான் அகமதாபாத்தில் உள்ள டபுள் ட்ரீ ஹில்டன் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கிறேன். ரூம் சர்வீஸ் மூலம் உணவு ஆர்டர் செய்தேன். அதில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நன்றாக பாருங்கள், இதை தவிர்த்துவிடக் முடியாது. இதுபோன்ற ஓட்டல்களில் தங்கி, அதிக வாடகையை கொடுக்கிறோம். ஆனால், அவர்கள் புழுக்களைக் கொண்ட உணவைத் தருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக அங்கு தங்கியிருக்கிறேன். நான் இங்கு வந்ததில் இருந்து நோயில் விழுந்துவிட்டேன். உடல் நிலை சரியில்லை. அதற்கான காரணத்தை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இதை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இந்தி நடிகர் ராகுல் போஸ், இரண்டு வாழைப்பழத்துக்கு ரூ.422 கேட்ட நட்சத்திர ஓட்டல் பற்றி பரபரப்பு புகார் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீரா சோப்ராவின் புகார் சமூக வலைத்தளங்களில் அனலை ஏற்படுத்தியுள்ளது.