ஒருவேளை ஸ்பூஃப் கல்லூரியா இருக்குமோ? எந்த ஊர் காலேஜுங்க இது..! எப்படியிருக்கு Engga Hostel

ஒருவேளை ஸ்பூஃப் கல்லூரியா இருக்குமோ? எந்த ஊர் காலேஜுங்க இது..! எப்படியிருக்கு Engga Hostel
ஒருவேளை ஸ்பூஃப் கல்லூரியா இருக்குமோ? எந்த ஊர் காலேஜுங்க இது..! எப்படியிருக்கு Engga Hostel

கனவுகளுடன் பொறியியல் கல்லூரிக்கு வரும் ஜூனியர்களும், அவர்களை ரேகிங் செய்யும் சீனியர்களும், இவர்கள் படிக்கும் கல்லூரியில் நடக்கும் தில்லுமுல்லுகளுமே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் #EnggaHostel கதைக்களம்.

எல்லா பொறியியல் கல்லூரிகளைப் போலவும் இந்தக் கல்லூரியிலும் ரேகிங் கொடிகட்டிப் பறக்கிறது. அதென்ன எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் என்கிறீர்களா? அதாவது சினிமாக்களில் காட்டப்படும் எல்லா பொறியியல் கல்லூரிகளிலும். என்னதான் ரேகிங் என்பதெல்லாம் அப்பாஸ், வினித் நடித்த காதல் தேசத்து காலத்திலேயே பல கல்லூரிகளில் மறைந்துவிட்டாலும், தமிழ் சினிமாவில் மட்டும் இன்னும் அது ஓய்ந்தபாடில்லை. அதிலும் புதிது புதிதாக வெவ்வேறு மாடலில் ரேகிங்கிற்கான சிந்தனையுடன் கல்லூரி தொடர்பான காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அப்படியானதொரு கல்லூரிக்குள் முதலாமாண்டு மாணவர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள் ஜெய வீர பாண்டியன், யுவராஜ், அஹானா, ராஜ திலகம், அஜய் , செந்தில்.

கல்லூரி என்றால் ஹாஸ்டல் இருக்கும். ஹாஸ்டல் என்றாலே அங்கே ஒரு ஏழரை சீனியர் ரேகிங் செய்ய காத்திருப்பான் என்னும் அடிப்படையில், அகஸ்மாத்தாய் அமர்ந்திருக்கிறார் சித்தப்பு என்கிற சித்தப்பு தான். எல்லோரும் பார்த்து பயப்படும் காலேஜ் அட்மினான மூசாவே, பார்த்து பயப்படும் ஒரே ஆள் சித்தப்பு தான். அப்படி சித்தப்புவிடம் மூசாவின் ரகசியம் என்ன இருக்கிறது என்பதையும், இந்த ஜூனியர் சீனியர் யுத்தம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை அடல்ட் வசனங்களுடன் சொல்கிறது இந்த ”எங்க ஹாஸ்டல்”.

இந்தியில் ஹிட் அடித்த TVF நிறுவனத்தின் ஹாஸ்டல் டேஸை ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து தமிழில் இயக்கியிருக்கிறார் சதீஷ் சந்திரசேகர். ஜெய வீர பாண்டியனாக பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வமும், ராஜதிலகமாக சரண்யா ரவிச்சந்திரனும் நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான முகங்கள். அஹானாவாக வரும் சம்யுக்தா விஸ்வநாதனும், சாங்காக வரும் சூ கொய் செங்கும் ஓக்கேவாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் போக, ஆங்காங்கே வரும் காலேஜ் பணியாளர்களாக `லொள்ளு சபா’ சேஸூ, `மீண்டும் மீண்டும் சிரிப்பு’ ராஜ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

நடிப்பில் பெரிதாக பிரச்னை இல்லயென்றாலும், நம்மைப் போட்டு படுத்துவது வெப் சீரிஸில் வரும் பொறியியல் கல்லூரி தான். நிழலுக்குக்கூட பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கியதில்லை என்பார்களே... அதுபோல, படத்தின் டெக்னிக்கல் டீம் மொபைல் சார்ஜ் போடுவதற்காகக்கூட பொறியியல் கல்லூரி பக்கம் போனதில்லை போல. ஐடி வேலைக்கும், ஐடி Enabled Services வேலைகளான பிபிஓவுக்கும் வித்தியாசம் தெரியாமல் தொடர்ந்து ஐடிவேலை என்றாலே ஹெட்ஃபோனும் கையுமாக உட்கார வைப்பது போல, நடிகர்களை கல்லூரிக்குள் உலவ விட்டிருக்கிறார்கள்.

சீனியருடன் ஒரே அறையில் தங்க நிர்பந்திக்கப்படும் ஜூனியருக்கு நெட் கிடையாதாம், ஆனால் அவரால் கேம் விளையாட முடியுமாம். Engineering in One Night என்பதுபோல, என்ன பாடம் முதல் செமஸ்டருக்கு இருக்கும் என்றுகூட தெரியாமல் ஒரே புத்தகத்தை தொடர் முழுக்கவே வைத்து, நம்மையும் பித்துப்பிடிக்க வைத்திருக்கிறார்கள். ஒருவேளை ஸ்பூஃப் கல்லூரியாக இருக்குமோ என சந்தேகிக்கும் அளவிற்கு எல்லாவற்றிலும் செயற்கைத்தனம். அதிலும் யுவராஜாக வரும் விடூரின் நடிப்பு அதன் உச்சம். தொடரின் ஒரே பாசிட்டிவ் ஆக இருப்பது ஆங்காங்கே வரும் அடல்ட் ஒன்லைனர்கள் சிரிக்க வைப்பதும், அஜயாக சச்சின் நாச்சியப்பனின் நடிப்பும் மட்டும் தான்.

அடுத்தடுத்த சீசன்களிலாவது நல்லதொரு தொடராக 'எங்க ஹாஸ்டல்' மாறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com