கமல்ஹாசனின் கனவுப்படம் - துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மருதநாயகம்.
18’ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர் மாவீரன் மருதநாயகம்., முகமது யூசுப் கான் எனப்படும் மருதநாயகத்தின் வாழ்க்கையினை படமாக்கும் முயற்சியில் இறங்கினார் கமல்ஹாசன். 1997 அக்டோபர் 16-ஆம் தேதி மருதநாயகத்தின் வேலைகள் துவங்கப்பட்டன. எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் நடந்த இதன் முதல் நாள் படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார், அவருடன் கருணாநிதி மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எலிசபத் தன் வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு மருதநாயகமாகத் தான் இருக்கும் என சில வருடங்களுக்கு முன் கமல் டுவிட் செய்திருந்தார். 22 வருடங்களுக்கு முன்பே மருதநாயகத்தை தயாரிக்க 50 கோடி தேவைப்படும் என கமல்ஹாசன் கூறினார்,
அவரது இப்பெரிய முயற்சி இன்னும் முழுமையடையவில்லை என்றாலும். படம் துவங்கப்பட்ட போது மக்கள் மத்தியில் மருதநாயகம் பற்றி உருவான அந்த எதிர்பார்ப்பு இப்போதும் அப்படியே இருக்கிறது, கமல்ஹாசனின் கனவாக இருந்த மருதநாயகம் காலப் போக்கில் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரின் கனவாகவும் மாறிப்போனது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாயகனின் வரலாறினை சற்றே திரும்பிப் பார்க்கலாம்...
இந்திய விடுதலை யுத்தத்திற்கு சற்று முன்னே சென்றால் இந்திய நாட்டை கைப்பற்றி ஆள்வதில் ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுகாரர்களுக்கு இடையே நடந்த மோதல் களத்திற்குள் நுழையலாம்.
அக்காலகட்டத்தில் பிறந்த மாவீரன் தான் மருதநாயகம்., மருதநாயகம் இறந்த பிறகு அவரது உடலை என்ன செய்தார்கள் என்பதை பிறகு பார்க்கலாம் அதற்கு முன் யார் இந்த மருதநாயகம் என தெரிந்து கொள்வோம்.
இவர் பிறந்த ஆண்டு இது தான் என துல்லியமாக தெரியவில்லை என்றாலும். கிபி.1720’க்கும் கிபி.1730’க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் என கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில் இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் மருதநாயகம், பின் இஸ்லாத்தை தழுவிய பிறகு முகமது யூசுப் கான் என அழைக்கப்பட்டார்.
தஞ்சாவூரை தலைமையகமாக கொண்டு ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் இணைந்த முகமது யூசுப் கான் அங்கு ராணுவபயிற்சி பெற்றார். பாண்டிச்சேரி வந்த அவர் பிரஞ்சு காரரான ஜாக் வில்லா மூலம் குதிரை ஏற்றம் பீரங்கி பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொண்டார்.
துவக்கத்தில் அந்நியர்களுக்காக பாளையக்காரர்களிம் வரி வசூல் செய்யும் வேலையைச் செய்தார் கான் சாகிப் மருத நாயகம்., 1750 காலகட்டத்தில் இந்திய மண்ணை அபகரிப்பதில் ஆங்கிலேயர், பிரஞ்சுகாரர்கள், டச்சு காரர்களுக்கு இடையே சரி நிகர் போட்டி நிலவியது.
அப்போது முகலாயர்களில் பிரதிநிதியாக விளங்கிய ஆர்காடு நவாப் சந்தா சாகிப் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்., இவர் முந்தைய நவாப்பின் வாரிசு அல்ல எனவே வாரிசு உரிமை கோரினார் முகமது அலி., இந்த சிக்கலை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்களும் பிரஞ்சு காரர்களும்.,
சந்தா சாகிப்பிற்கு ஆதரவாக பிரஞ்சு காரர்களும்., முகமது அலிக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களும் திரள நெல்லூர் போர் மூண்டது. இப்போரில் பிரஞ்சு காரர்களுடன் இணைந்து சந்தா சாகிப்பிற்கு ஆதரவாக களமாடினார் மருத நாயகம். என்றாலும் இப்போரில் பிரஞ்சு படைகள் வெல்ல முடியவில்லை., முகமது அலி நவாப் ஆனார்.
இப்போர் மருத நாயகத்தின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியது., போரில் மருதநாயகம் பங்கேற்ற படை தோற்றாலும்., போரில் மருதநாயகத்தின் வீரச் செயலை கவனித்த ஆங்கிலேய தளபதி ராப்ர்ட் கிளைவ் மருதநாயகத்தை தன் படையில் இணைத்துக் கொண்டார்., கமாண்டே கான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது., தண்டல்காரன், அவில்தார், சுவேதார் என தொடர்ந்து பதவி உயர்வு பெற்றார் மருத நாயகம்.
போர்க்களங்களுக்குள் இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மருத நாயகத்தின் வாழ்வில் மார்சோ எனும் தேவதை வந்திணைந்தார்., இந்தோ ஐரோப்பியப் பெண்ணான மார்சோவை காதலித்து மணந்தார் மருத நாயகம்.,
தொடர்ந்து பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் வேலையை செய்து வந்த மருதநாயகம், ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்காத சிற்றரசர்களை எதிர்த்து போரிட்டார்., கப்பம் கட்ட மறுத்த வீரன் அழகு முத்துக் கோனை பீரங்கியில் கட்டி வைத்து வெடிக்கச் செய்து கொன்றார்.
1759’ஆம் ஆண்டு மதுரை மற்றும் நெல்லை கவர்னராக பொறுப்பு கொடுக்கப்பட்டது மருதநாயகத்திற்கு., இக்கால கட்டத்தில் மதுரையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியிருக்கிறார் மருத நாயகம், இதனால் மக்களிடம் நன்மதிப்பு மருத நாயகத்திற்கு கூடிக் கொண்டே போனது., இது ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடியை கொடுக்கத் துவங்கியது.
ஆர்காடு நவாபிற்கு மருத நாயகத்தின் வளர்ச்சி பொறாமையை தந்தது., இந்நிலையில் மருதநாயகம் ஆர்காடு நவாபின் பணியாள் என ஆங்கிலேய அரசு அறிவித்தது. அது மருத நாயகத்திற்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது.,
ஒரு கட்டத்தில் தன்னை சுதந்திர ஆட்சியாளன் என அறிவித்துக் கொண்டார் மருதநாயகம்., மதுரையில் பறந்த பிரிட்டீஸ் கொடியை அகற்றிவிட்டு தன்னுடைய மஞ்சள் நிறக் கொடியை ஏற்றினார். 27,000 வீரர்களைத் திரட்டி பெரும் படையை உருவாக்கினார்., பிரிட்டீஸாருக்கு எதிராகத் திரண்ட முதல் பெரும் படை என இதனைச் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
இந்நிலையில் 1763 செப்டம்பரில் கலோனல் மேன்சன் தமைலையில் மதுரையை தாக்கினர் பிரிடீஸார்., பூலித் தேவனை மருதநாயகம் வீழ்த்திய கோவத்தை மனதில் கொண்டு பாளையக்காரர்களும் பிரிடீஸ்காரர்களுடன் இணைத்து மருத நாயகத்தை எதிர்த்தனர்.,
தஞ்சை, திருவிதாங்கூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை சமஸ்தானங்களும் இணைந்து மதுரையை தாக்கத் துவங்கின., நாற்புறமும் துரோகிகளும் எதிரிகளும் சூழ 22 நாட்கள் இடை விடாமல் நடந்த போரில் மருத நாயகத்தின் படை எதிர்களை சுழன்று அடித்தது.
பிரிடீஸ் படை பின்வாங்கும் நிலை உருவானது., என்றாலும் தளராத பிரிடீஸார் சென்னை மற்றும் மும்பையில் இருந்து படைகளைத் திரட்டி போரைத் தொடர்ந்தது., அப்போது மருத நாயகத்தின் உடன் இருந்த பிரஞ்சு காரர் மார்சண்ட் நாம் சரணடைந்து விடுவோம் எனக் கூற மருத நாயகம் கோபத்தில் அவரையும் தாக்கினார்.
மருதநாயகத்துடன் போரிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்த எதிரிகள் வரலாற்றின் வழக்கப்படி சூழ்ச்சியை கையிலெடுத்தனர். மருத நாயகத்துடன் இருந்த சீனிவாச ராவ் மற்றும் மார்சண்ட் மூலம் திட்டம் தீட்டினர்.
1764 அக்டோபர் மாதம் மருத நாயகம் ஆயுதங்களை களைந்துவிட்டு தொழுகையில் இருந்த போது அவரது கைகளைக் கட்டி சீனிவாசராவும் மார்சண்ட்டும் பிரிட்டீஸாரிடம் ஒப்படைத்தனர்.
1764 அக்டோபர் மாதம், மதுரை சம்மட்டிபுரத்தில் கான் மருத நாயகன் தூக்கிலிடப்பட்டார், முதல் இரண்டு முயற்சியில் மருத நாயகத்தின் உயிர் பிரியாத சூழலில் வர்ம கலையினை பயன்படுத்தி அவரது நரம்புகளை செயல் இழக்கச் செய்து பின் தூக்கிலிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இறந்த பிறகும் அவரது உடலை விட்டு வைக்க வில்லை எதிரிகள். உடலை துண்டு துண்டாக வெட்டி., தலையை திருச்சியிலும். கால்களை பெரியகுளத்திலும், கைகளை பாளையங்கோட்டையிலும், உடலை மதுரை சம்மட்டி புரத்திலும் புதைத்தனர்.
பிரிடீஸாரை எதிர்த்து வீர போர் புரிந்து மரண மடைந்த மருத நாயகம் துவக்கத்தின் ஆங்கிலேய பிரஞ்சு படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது இன்று அவர் மீது படிந்து கிடக்கும் கறை என்றாலும், இந்திய விடுதலை வரலாற்றில் மருத நாயகத்தின் தியாகம் போற்றுதற்குரியது.
மருதநாயகம் திரைப்படம் குறித்து இன்றும் கூட எதிர்மறையாக பேசாதவர் கமல்ஹாசன், இப்படத்திற்காக கமல்ஹாசன் எழுதிய "பொறந்தது பனையூரு மண்ணு – மருத நாயகம் என்பது பேர்களில் ஒண்ணு., மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும் மனுசனத் தொரத்துது மனு சொன்ன நீதி சித்தங்கலங்குது சாமி – இது ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி" என்ற இந்தப் பாடலை யூடியூபில் பல மில்லியன் பேர் பார்த்துள்ளனர். கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் விரைவில் புதிய பாய்ச்சலுடன் உருவாகி நம் அனைவரையும் கட்டி அணைத்துக் கொள்ள வாழ்த்துவோம்.