’நீங்களே சம்பளம் கொடுக்கல..’ தெருகுரல் அறிவின் சர்ச்சை பதிவு.. மன்னார் முத்து காட்டமான பதில்!
கானா பாடகர் மன்னார் முத்து, தெருக்குரல் அறிவின் சர்ச்சை பதிவுக்கு கடும் பதில் அளித்துள்ளார். 2016ல் உருவான ‘மன்னாருன்னா மன்னாரூ’ பாடலை இப்போது தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி வெளியிட்டதாகவும், சந்தோஷ் நாராயணன் மற்றும் ரகிட் என்டர்டெயின்மென்ட் தான் காரணம் என்றும் கூறினார். யாரும் தன்னை ஏமாற்றவில்லை, தேவையான அனைத்தையும் செய்து தந்ததாகவும் விளக்கம் அளித்தார்.
தெருக்குரல் அறிவு சமீபத்தில் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கானா பாடகர் முத்து பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் கானா பாடகர் மன்னார் முத்து எழுதி பாடியிருந்த மன்னாருன்னா மன்னாரூ பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பாடகர் தெருக்குரல் அறிவு இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். முன்னணி இசைக்கலைஞர்கள் Collaboration, Independent Music என்ற பெயரில் கானா பாடல் போன்றவற்றை வெளியிடுகின்றனர். ஆனால் அசல் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம், பொருளாதாரப் பலன் வழங்கப்படுவதில்லை என்று பதிவிட்டிருந்தார். எஞ்சாமி பாடலில் இருந்து சந்தோஷ் நாராயணன் மற்றும் தெருக்குரல் அறிவுக்கு பிரச்சனை இருந்து வந்ததால், தற்போதும் இவர் சந்தோஷ் நாராயணனைப் பற்றி தான் பேசுகிறார் என இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இந்நிலையில் இதுகுறித்து கானா பாடகர் மன்னார் முத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பாடகர் அறிவிற்கு பதில் கொடுத்துள்ளார். அதில் கடந்த 2016-ம் ஆண்டே இந்த பாடலை தயாரித்து வெளியிட்டோம், தற்போது இப்போதைக்கு ஏற்ற, தலைமுறைக்கு ஏற்றவாறு பாடல் மாற்றி எழுதி வெளியிட்டுள்ளோம். இந்த பாடலை உருவாக காரணம் சந்தோஷ் நாராயணன் மற்றும் ரகிட் என்டர்டெயின்மென்ட். சமீபத்தில் தெருக்குரல் அறிவு ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அது மிகவும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றும் அளவிற்கு எதுவும் இல்லை. எனக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்தார்கள். நான் தான் சந்தோஷ் நாராயணனிடம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் முதலில் இது உன்னுடைய படைப்பு, நீதான் செய்ய வேண்டும் என்றார், ஆனால் அவர் நான் கேட்டுக்கொண்டதன் பேரிலே இந்த பாடலில் நடித்தார்.
நான் ஏமாறாத அளவிற்கு எனக்கு அறிவுள்ளது. உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஒரு விஷயத்தை குறை சொல்வதற்கு முன்னால் முதலில் நாம் எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய பாடலில் வேலை செய்த என்னுடைய மச்சானுக்கு இன்னும் சம்பளமே தரவில்லை. நீங்கள் வசித்து வந்த வீட்டிற்கு மின்சாரக் கட்டணமே கட்டவில்லை, இப்படி குறை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் முதலில் நீங்கள் எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். கானா பாடல் பாடிக்கொண்டிருந்த ஒருவனுக்கு இன்டர்நேஷனல் வாய்ப்பு கொடுத்தது போல்தான் இந்த பாடல் உள்ளது. பாடலுக்கு நல்ல வரவேற்பு, அனைவருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்- ராஜ்குமார்.ர

