மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்த வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த படக்குழு
மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே முதலில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.
‘செக்க சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு, கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை, இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார். ரூ. 800 கோடி பட்ஜெட்டில், 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட திரைப்பட்டாளமே நடித்து வருகின்றது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘பொன்னியின் செல்வனின்’ முதல் பாகம், வரும் கோடைகாலத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாவதாக வதந்தி பரவியது.
இதையடுத்து, இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின், நிர்வாக தயாரிப்பாளரான சிவ ஆனந்த் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெள்ளித் திரையில் மட்டுமே வெளியாகும் என்றும், அதன்பிறகே ஓ.டி.டி.யில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

