’சோழர்கள் வருகிறார்கள்’.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பொன்னியின் செல்வன்’ புதிய மோஷன் போஸ்டர்!

’சோழர்கள் வருகிறார்கள்’.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பொன்னியின் செல்வன்’ புதிய மோஷன் போஸ்டர்!
’சோழர்கள் வருகிறார்கள்’.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பொன்னியின் செல்வன்’ புதிய மோஷன் போஸ்டர்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்- 1’ படத்தின் புதிய மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட பிரம்மாண்ட திரைப்படமாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஷோபிதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்தை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல எழுத்தாளர் பி.ஜெயமோகன் வசனங்கள் எழுதியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படத்தின் முதல்பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதன்படி, ’சோழர்கள் வருகிறார்கள்’ என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் கூடிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஹ்மானின் பின்னணி இசை மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. வீடியோவில் ஒரு பிரம்மாண்ட கோட்டைச் சுவரும் அதற்கு வெளியே சிலர் கொடியை நாட்டுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அந்தக் கொடி புலிக்கொடி போல் உள்ளது. வாள் உடன் நிற்பவர் அநேகமாக விக்ரம் ஆக இருக்கலாம். ஏற்கனவே இணையத்தில் வெளியான விக்ரம் புகைப்படத்துடன் அது ஒத்துப்போகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com