எப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்?

எப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்?

எப்படி இருக்கு 'செக்கச் சிவந்த வானம்' ட்ரெய்லர்?
Published on

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், 'செக்கச் சிவந்த வானம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜோதிகா, இந்தி நடிகை அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே அறிவித்தப்படி இன்று காலை 10 மணி அளவில் வெளியானது. 

‘இன்றைக்கு இருக்கும் கிருமினலுக்கு நிறைய பெயர் இருக்கு’ என்று விஜய்சேதுபதியின் பின்னணி குரல் ஒலிக்க அறிமுகமாகிறார் ‘சேனாதிபதி’  பிரகாஷ் ராஜ். யார் இந்த சேனாதிபதி..? என்ற கேள்வியுடன் ரிப்போர்ட்டராக வருகிறார் அதிதி ராவ். அதுமட்டுமின்றி பலப்படங்களில் சாக்லெட் பாய்போல வரும் அரவிந்த் சாமி இப்படத்தில் சட்டையை மடக்கி விட்டபடி முரட்டுத்தனமாக வருகிறார். இவருக்கும் ரிப்போர்ட்டராக வரும் அதிதி ராவ்வுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. இது தவிர அவருடைய தம்பிகளாக படத்தில் அருண் விஜய், மற்றும் சிம்பு வருவதாக தெரிகிறது. அருண் விஜய்யின் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கை தமிழில் பேசுகிறார். அதிரடி கார் சண்டைக் காட்சிகள் இடையே அறிமுகமாகிறார் சிம்பு.  

சேனாதிபதிக்கும் பெரியவனாக வரும் அரவிந்த் சாமி  இடையே நடக்கும் யுத்தமே கதையின் மைக்கருவாக இருக்க கூடும் எனத் தெரிகிறது. இதில் காக்கிச் சட்டையில் வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இது தவிர ஜோதிகா, தியாகராஜன் ஆகியோரும் இடையில் வந்து செல்கிறார்கள். அதிரடி காட்சிகளும், துப்பாக்கிச் சத்தமுமாக நிறைந்துள்ளது இந்த ட்ரெய்லர். இப்படம் தெலுங்கில்‘கவாப்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com