பிரபல நடிகையின் கார் வேகமாக மோதியில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், நகுல் நடித்த ’நான் ராஜாவாகப் போகிறேன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை ஜரீன் கான். இவர் இந்தியில் சல்மான் கான் நடித்த வீர், ரெடி, ஹவுஸ்புல் 2, ஹேட் ஸ்டோரி 3 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு ஒன்றுக்காக இவர் கோவாவுக்குச் சென்றுள்ளார். ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை, தனது சொகுசு காரில் ஓட்டல் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். காரை டிரைவர் அலி அப்பாஸ் ஓட்டிக்கொண்டு வந்தார். கடற்கரை கிராமமான அஞ்ஜுனா அருகே கார் ஒரு வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள அசிலோ மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து நடந்த போது நடிகை ஜரீன் கான் காரில் இருந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் அருகில் உள்ள மபுசா என்ற பகுதியைச் சேர்ந்த நிதேஷ் கோரல் (31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் அலி அப்பாஸ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ஜரீன் கான், தனது புகழைக் கெடுக்கும்படி நடந்துகொள்வதாக தனது முன்னாள் மானேஜர் அஞ்சலி மீது சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.