பட்ஜெட், ஸ்டார்ஸ் முக்கியமல்ல... திரைக்கதை வித்தைகளால் சாதிக்கும் மலையாள சினிமா!

பட்ஜெட், ஸ்டார்ஸ் முக்கியமல்ல... திரைக்கதை வித்தைகளால் சாதிக்கும் மலையாள சினிமா!
பட்ஜெட், ஸ்டார்ஸ் முக்கியமல்ல... திரைக்கதை வித்தைகளால் சாதிக்கும் மலையாள சினிமா!

சில தினங்களாக இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது 'த்ரிஷியம் 2'. கிட்டத்தட்ட நிறைவான முடிவோடு முடிந்தது த்ரிஷியம். ஆனால், அப்படத்தின் இரண்டாம் பாகம் என்ற அறிவிப்பு நிச்சயம் ஆச்சரியத்தையே கொடுத்தது. இதற்கு மேல் இப்படத்தை தொடர என்ன இருக்கிறது? அப்படி தொடர்ந்தாலும் அது நாயகனுக்கு எதிராகத்தானே போய்முடியும் எனத் தோன்றியது. ஆனால், 'முடியும்' என சபாஷ் போடவைத்திருக்கிறது 'த்ரிஷியம் 2'. லாஜிக் சறுக்கல்கள் சில இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு அனைத்தையும் சமன் செய்து ரசிக்க வைத்தது. 'த்ரிஷியம்' 2 படத்தின் வெற்றியாக பார்க்கப்படுவது திரைக்கதை கோர்ப்புதான்.

இப்படத்துக்கு மட்டுமல்ல, எந்த ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்புக்கும் முக்கிய காரணம் திரைக்கதை மட்டுமே. 'இந்தப் படத்துல கதையே இல்லப்பா... ஆனா படம் நல்லா இருக்கு'னு சொல்கிற படங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கு காரணம், திரைக்கதைதான். அதேபோல் நல்ல கதை கொண்ட படங்களும் மொக்கையாக போய்விடுவதும் உண்டு. அதற்கு, திரைக்கதையில் ஏற்படும் சொதப்பல்களே காரணம். திரைக்கதையை சரியாக கையாளத் தெரிந்த இயக்குநர்கள் தங்களது படங்களை சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள். தமிழில் நிறைய இயக்குநர்கள் உள்ளனர். ஆனால், சமீப காலமாக மலையாள திரைப்படங்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றன.

திரைக்கதை குறித்து ஒருமுறை பேசிய பாலு மகேந்திரா, "கதையில் நிகழும் அனைத்தும் சொற்களால் விவரிக்கப்படுகின்றன. திரையிலோ கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் காட்சிகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேச வேண்டும். மற்ற இடங்களில் காட்சிகள் மட்டுமே பேச வேண்டும். எல்லா ஷாட்டுகளும் கதை சொல்ல வேண்டுமே தவிர, காட்சியின் அழகுக்காக ஒரு ஷாட் கூட இடம்பெற்றுவிடக் கூடாது. இந்தத் தெளிவு, திரைப்படம் திரைக்கதையாக காகிதத்தில் இருக்கும்போதே இருக்க வேண்டும். அதற்குத் திரைக்கதையை முதலில் முழுமையாக எழுதி முடித்திருக்க வேண்டும்" என்றார். அதுதான் திரைக்கதையின் வெற்றி. படத்தின் வெற்றி.

’இஷ்க்’... மலையாளத்தில் வெற்றியடைந்த திரைப்படம். ஓர் இளம் காதல் ஜோடிக்கும், அவர்களுக்கு இடையான காதல், காதலுக்கான ப்ரைவசி, காதலியின் சுயமரியாதை என நுணுக்கமான விஷயங்களை ஒரு லைன் கதையுடன் கடந்து போகும் இத்திரைப்படம். ஆனால் அடுத்து என்ன? என்ற விறுவிறுப்புடன் சாலை, இரண்டு வீடுகள், ஒரு கார் என மிகச்சிறிய அளவிலான லொகேஷன்கள், குறைவான நடிகர்கள், மிக மிக குறைவான பட்ஜெட் என அழகான சினிமாவாக முடிகிறது. திரைக்கதை பின்னப்பட்டிருக்கும் விதம் மிகச் சரியானதாக இருக்கும். அதுவே, அப்படத்தை சரியாக நகர்த்துகிறது.

அகமது கபீர் இயக்கத்தில் வெளியான ’ஜூன்’ திரைப்படம் திரைக்கதைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பின்னோக்கி செல்லும் திரைக்கதையாக அது அமைக்கப்பட்டிருக்கும். நிகழ்காலம், பின்னோக்கிச் சென்று பள்ளிக்காதல் என திரைக்கதை அழகாக கோக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது 'ஜூன்'.

'மகேஷிண்டே பிரதிகாரம்' திரைக்கதையால் சாதித்த மற்றுமொரு திரைப்படம். தன்னை அடித்துவிட்ட ஒருத்தனை திருப்பி அடித்துவிட்டுதான் காலில் செருப்பு போடுவேன் என சபதம் எடுக்கும் நடிகர். அவ்வளவுதான் கதை. மிகவும் நேர்த்தியாக பின்னப்பட்ட திரைக்கதையால் மலையாளத்தில் ஜொலித்த திரைப்படம். தமிழில் 'நிமிர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டாலும் மலையாளம் தொட்ட உணர்வை தமிழால் தொட முடியவில்லை.

சமீபத்தில் ஓடிடியில் வெளியாக சக்கைபோடுபோட்ட திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஒரு வீட்டுக்குள்ளேயே கடத்திபோகிறார்கள் என்றால், அதில் கதை என்ன இருக்கிறது? ஆனால் நம்மை போரடிக்காமல் படத்தை பார்க்க வைத்தார்கள்தானே? சரியான திரைக்கதை மூலம் சரியாக நகர்வுகளாக செல்லும் திரைப்படம் அழகான க்ளைமேக்ஸோடு முடிகிறது. 'ஜோசப்', 'ஹெலன்' என கடந்த சில வருடங்களில் வெளியான மலையாள சினிமாக்கள் பலவற்றை நாம் நல்ல திரைக்கதையால் வென்ற திரைப்படங்களாக நிச்சயம் சுட்டிக்காட்டலாம்.

ஒரு நல்ல திரைக்கதை, திரைப்படத்தை எவ்வளவு தூரம் தாங்கிச் செல்லும் என்ற கணக்கு உண்டு. அதை மீறும்போது நமக்கு படம் சலிப்பூட்டுகிறது. அந்த எல்லையை சரியாக கணிக்கும் இயக்குநர்கள் சரியாக பயணிக்கிறார்கள். ஏன் தமிழில் திரைக்கதையை பாராட்டும் படமே இல்லையா? என கேட்கலாம். நிச்சயம் உண்டு. தமிழிலும் எண்ணற்ற திரைப்படங்கள் உள்ளன. சபாஷ் போட வைக்கும் இளம் இயக்குநர்களும் தமிழில் அசத்தல் சினிமாக்களை கொடுத்துக்கொண்டுதான் உள்ளன. ஆனால் சமீப காலமாக மலையாளம் சினிமாவில் ஒரு தனி ட்ராக்கை பிடிக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த ட்ராக்கை தமிழ் சினிமா எங்கையோ தவறவிடுகிறது.

தமிழில் சூப்பராக முதல் படத்தை ஒரு இளம் இயக்குநர் கொடுத்தால், அடுத்தப் படமே அவர் பெரிய ஹீரோவுக்குள் சிக்கிக்கொண்டு ஹீரோவுக்கான மசாலாவுக்குள் திணறிவிடுகிறார். தமிழில் ஹீரோவுக்கான திரைப்படங்கள் குறைந்து, இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகரிக்க வேண்டும், கோடி கோடி பட்ஜெட் என்ற வீண் விளம்பரங்கள் இல்லாமல் மனதோடும் இழைந்தோடும் திரைப்படங்கள் உருவாக வேண்டும். கதை, திரைக்கதையே முன்னால் நின்று பேச வேண்டுமே தவிர, பட்ஜெட்டும் பிரமாண்டங்களும் அல்ல. அப்படி பயணிக்கும் பட்சத்தில் தமிழில் இன்னும் நிறைய இளம் இயக்குநர்களும், சிறந்த திரைப்படங்களும் வரவு வரும் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com