சபரிமலைக்கு எதிராக கருத்து: பிரபல இயக்குனர் மீது சாணி கரைசல் வீச்சு!
சபரிமலையில் 50 வயதுக்கு கீழுள்ள பெண்கள் சாமி தரிசனம் செய்வது குறித்த பிரச்னையில் இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் இன்று காலை தாக்கப்பட்டார்.
மலையாளத்தில், நெய்துகரன், புலிஜன்மம், சுஃபி பரஞ்ச கதா, பதிரகாலம் உட்பட பல படங்களை இயக்கியவர் பிரியனந்தன ன் (53). ’ரெட் ஒயின்’ உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார். இதில் ’புலிஜென்மம்’, 2006- ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற படம்.
சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தெரிவித்து, ’ஆர்போ ஆர்தவம்’ (மாதவிடாய் அசுத்தமல்ல) என்ற நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதற்கு ஆதரவாக கடந்த சில நாட்களுக்கு முன், கருத்து தெரிவித்திருந்தார் இயக்குனர் பிரியனந்தனன். அப்போது சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுப்பது குறித்தும் சபரிமலை குறித்தும் முகப்புத்தகத்தில் விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர்கள், தங்கள் உணர்வை புண்படுத்தி விட்டதாகக் கூறி, அவர் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தனது பேஸ்புக் பதிவை நீக்கினார் அவர்.
இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தின் வெள்ளசிரா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை 9 மணியளவில் கடைக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் ஒன்று, அவர் மீது கரைத்து வைத்திருந்த பசு சாணத்தை வீசியது. பின்னர் அவரை தாக்கி விட்டு தப்பியோடியது.
’’இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியும். இந்து அமைப்புகள்தான் இப்படி செய்திருக்கின்றன. இதுபற்றி போலீ ஸில் புகார் செய்ய இருக்கிறேன்’’ என்றார் பிரியனந்தனன். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.