‘பணம் கேட்கும் யூ-ட்யூப் திரை விமர்சகர்களுக்கு தடை விதிக்கணும்’- மலையாள இயக்குநர் ஆவேசம்!

‘பணம் கேட்கும் யூ-ட்யூப் திரை விமர்சகர்களுக்கு தடை விதிக்கணும்’- மலையாள இயக்குநர் ஆவேசம்!
‘பணம் கேட்கும் யூ-ட்யூப் திரை விமர்சகர்களுக்கு தடை விதிக்கணும்’- மலையாள இயக்குநர் ஆவேசம்!

எதிர்மறை விமர்சனங்களை கொடுத்துவிடுவோம் எனக் கூறி பணம் கேட்டு தயாரிப்பாளர்களை சில யூ-ட்யூப் விமர்சகர்கள் மிரட்டுவதாக பிரபல மலையாள இயக்குநரான ரோஷன் ஆண்ட்ரூஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘How Old Are You?’ படத்தை, தமிழில் ‘36 வயதினிலே’ என்றப் பெயரில் ரீமேக் செய்தவர் பிரபல மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தப் படத்தின் மூலம் தான் ஜோதிகா தமிழ் திரையில் ரீ- என்ட்ரி கொடுத்தார். அண்மையில் துல்கர் சல்மானின் ‘சல்யூட்’ படத்திற்குப் பிறகு, ‘Saturday Night’ என்றப் படத்தை இயக்கியிருந்தார் ரோஷன் ஆண்ட்ரூஸ். நிவின் பாலி நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் திரை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே சுமாரான அளவிலேயே வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் யூ-ட்யூப் விமர்சகர்களை கடுமையாக சாடியுள்ளார். மனோரமா யூ-ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், ‘பணம் தரவில்லையென்றால் எதிர்மறை விமர்சனங்களை யூ-ட்யூப்பில் வெளியிட்டு விடுவதாக தயாரிப்பாளர்களை மிரட்டும் யூ-ட்யூப் விமர்சகர்களை எனக்கு தெரியும். 2 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு, மோசமான படத்தை ட்விட்டரில் நன்றாக இருக்கிறது என்ற கருத்துகளை பதிவிடும் விமர்சகர்களும் உண்டு.

மேலும் திரையரங்கு வாசலில் நின்றுக்கொண்டு, படம் வெளியானதும் யூ-ட்யூபர்கள், திரைப்படம் பற்றிய கருத்துக்களை மக்களிடம் கேட்பதை தடை செய்ய வேண்டும். அப்படி மக்கள் கூறும் எதிர்மறை விமர்சனங்களை தயாரிப்பாளர்களிடம் காட்டி சில யூ-ட்யூபர்கள் மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது உண்டு. தங்களது வருமானத்திற்காக படத்தை பற்றிய மோசமான விமர்சனங்களை செய்கிறார்கள்.

விமர்சனங்கள் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். அதைவிடுத்து ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதெல்லாம் விமர்சிக்கக் கூடாது. சமீபத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. என்னைக் கேட்டால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸின் இந்தக் கருத்து தற்போது சமூகவலைத்தளத்தில் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com