அரைகுறை ஆடையில் ஆபாச பேச்சு விவகாரம்.. மன்னிப்பு கோரிய நடிகர் விநாயகன்!
கேரளாவில் உள்ள தனது வீட்டு பால்கனியில் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு ஆபாசமாகப் பேசிய வில்லன் நடிகர் விநாயகன் வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விநாயகன். இவர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ’ஜெயிலர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் தனது வீட்டு பால்கனியில் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு ஆபாசமாகப் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ”இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கொச்சி போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, அவர் தன்னுடைய தகாத செயலுக்காக மன்னிப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “ஒரு திரைப்பட நடிகனாகவும் ஒரு மனிதனாகவும் என்னால் பல பிரச்னைகளைச் சமாளிக்க முடியாது. என் தரப்பில் இருந்து எதிர்மறை ஆற்றியதற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விவாதம் தொடரட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விநாயகன் இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது முதல்முறை அல்ல. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைந்த சமயத்தில் அவரைப்பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதற்கு முன்பு, மீ டூ தொடர்பாக அவர் பேசியதும் சர்ச்சையானது. மேலும் ஹைதராபாத் விமான ஊழியர்களிடம் அவர் சண்டையிட்டதாகவும், கோவா டீக்கடை ஒன்றின் முன்பு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.