மெட்ராஸ் மேட்னி
மெட்ராஸ் மேட்னிfb

தந்தையாக மிளிரும் காளி வெங்கட்.. மிடில் க்ளாஸ் குடும்பத்தின் உணர்வு போராட்டமே 'மெட்ராஸ் மேட்னி'!

பெற்றோரின் பாடுகளையும், பிள்ளைகளுக்கு உண்டாகும் அழுத்தங்களையும், சமூகம் நேரடியாக ஒரு குடும்பத்தின் மீது சுமத்தும் பாரங்களையும் பற்றி பேசுகிறது `மெட்ராஸ் மேட்னி'.
Published on

ஆட்டோ ஓட்டுநரான கண்ணன் (காளி வெங்கட்) தன் மனைவி கமலம் (ஷெல்லி) மகள் தீபிகா (ரோஷினி ஹரிப்ரியன்), மகன் தினேஷ் (விஷ்வா) ஆகியோருடன் ஒரு நடுத்தர வாழ்வை நடத்தி வருகிறார்.

வருடக்கணக்கில் ஆட்டோ ஓட்டினாலும் வாடகை ஆட்டோவிலிருந்து சொந்த ஆட்டோ என்ற அளவில் தான் முன்னேற முடிகிறது கண்ணனால். ஆனாலும், தன் அடுத்த தலைமுறை தலையெடுக்க வேண்டும் என அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கிறார்.

மகள் தீபிகா பெங்களூரு IT நிறுவனத்தில் பணிபுரிகிறார். மகன் தினேஷ் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்கு செல்ல இருக்கிறார். ஒருபக்கம் மகள் திருமணத்திற்கு பணம் ஏற்பாடு செய்ய வேண்டும், இன்னொரு பக்கம் மகனின் கல்லூரி கட்டணத்திற்கு பணம் வேண்டும். இதனூடாக பெற்றோரின் பாடுகளையும், பிள்ளைகளுக்கு உண்டாகும் அழுத்தங்களையும், சமூகம் நேரடியாக ஒரு குடும்பத்தின் மீது சுமத்தும் பாரங்களையும் பற்றி பேசுகிறது `மெட்ராஸ் மேட்னி'. 

 மெட்ராஸ் மேட்னி
தக் லைஃப் ரிலீஸ்… கொண்டாடும் ரசிகர்கள்…

சத்யராஜ் மூலம் இக்கதையை நரேட் செய்வதில் துவங்குவது, மகள், மகன், அம்மா, அப்பா என சாப்டர் பிரித்து கதை சொல்வது என வித்தியாசமான பாணியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி. நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை போராட்டங்கள், பெற்றோர் - பிள்ளைகள் இடையே புரிதல் குறைவால் உண்டாகும் சின்ன உரசல்கள், பணத்துக்காக ஓட்டங்கள் இவை அனைத்தையும் இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

நடிப்பு பொறுத்தவரை நம் மனதில் பளிச் என இடம்பிடிப்பது காளிவெங்கட். இயல்பான ஒரு தந்தையாக கண்முன் மிளிர்கிறார். பிள்ளைகள் சிறு வயதில் தன்னை சுற்றி வந்ததையும், வளர்ந்த பின் வந்த இடைவெளியையும் நினைத்து பார்க்கும் ஒரு சின்ன தருணத்தை கூட அத்தனை அழகாக வெளிக்காட்டுகிறார். தன் குடும்பத்தை வாசதியாக வாழ வைக்க முடியவில்லை என்ற ஆற்றாமையை வெளிப்படுத்தும் காட்சியில் பல ஆயிரம் இந்திய தந்தைகளை பிரதிபலிக்கிறார் காளி. 

குழந்தைகளே உலகம் என்று வாழும் அம்மா ரோலில் ஷெல்லி. மிகப் பொருத்தமாக, அழுத்தமாக நடிப்பை கொடுத்திருக்கிறார். சிடுசிடுவென எரிந்து விழுவது, பாசத்தை காட்டமுடியாமல் மருகுவது என தினேஷ் கதாப்பாத்திரத்தில் விஷ்வா, திருமணம் சார்ந்த அழுத்தங்களை, குழப்பங்களை தாங்க முடியாமல் கலங்கும் தீபிகா பாத்திரத்தில் ரோஷினி இருவரும் கச்சிதம். 

சில காட்சிகளில் தலையை காட்டினாலும், கீதா கைலாசம் - ராமர் கூட்டணி பட்டாசாய் இருக்கிறது. கீதா கைலாசத்திற்கு பசிசோந்தி பிரேமா என காமெடி அவதாரம் அழகாக கைகூடியிருக்கிறது. ராமரின் பல ஒன் லைனர்கள் குபீர் ரகம். "பாத்தா நீயே பிஸ்கட் எடுத்து போடுவ, அவ்வளோ தத்ரூபமா இருக்கும்" என சொல்லும் போதெல்லாம் அரங்கம் அதிர்கிறது. கெய்ல் கதாப்பாத்திரம் மூலம் குடி நோய் பற்றி, மின்சார வாரிய அதிகாரி கதாப்பாத்திரம் மூலம், எளியவர்கள் மிக சல்லிசாக கையாளப்படுவது பற்றியும் பதிவு செய்தது கவனிக்க வைக்கிறது.

ஆனந்த் ஜி கே ஒளிப்பதிவு படத்தை தரத்துடனும், ரசனையுடனும் கொடுத்திருக்கிறது. கே சி பாலாசாரங்கன் இசையில் பின்னணி இசை இன்னும் அழுத்தம் சேர்க்கிறது. வடிவேலு குரலில் என்னடா பொழப்பு இது பாடலும் கவர்கிறது.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், சில இடங்களில் வரக்கூடிய நல்ல தருணங்களுக்காக, பல சுவாரஸ்யம் குறைந்த காட்சிகளை பொறுமையாக கடக்க வேண்டி இருக்கிறது. சத்யராஜின் நரேஷன் மூலம் இந்தக் கதை சொல்லப்பட்டதால் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதும் பெரிய கேள்விக்குறி தான். அதிலும் முதல் பாதியில் பெரிதாக எந்த முக்கிய நிகழ்வுகளும் இல்லை என்பதால் அலுப்பையே தருகிறது. இரண்டாம் பாதி போல, முதல் பாதியும் சற்று சுவாரஸ்யமான தருணங்கள் இருந்திருக்கலாம். தனிநபர் பற்றிய coming of age படம் போல, இது ஒரு குடும்பத்தின் coming of age என்பதுதான் படத்தின் பலமும் பலவீனமும். பண குறைவால் ஏற்படும் தடுமாற்றங்களும், உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாமல் ஏற்படும் சிக்கல்களும் தான் அந்தக் குடும்பத்தின் பிரச்சனைகள். ஒரு கட்டத்துக்கு மேல் அதிலிருந்து நம் கவனம் விலகுகிறது.

இது போல சில குறைகள் இருந்தாலும், "அன்னைக்கு ராத்திரி அவங்க சாப்பிட்டது தான், அவங்க குடும்பமா சேர்ந்து சாப்பிடும் கடைசி சாப்பாடு" என வசனம் வரும் போது நம் கண்கள் கலங்காமல் இருக்காது. சின்ன சின்ன குறைகளைத் தாண்டி எமோஷனலாக கண்டிப்பாக நம்மைக் கவரும் இந்த மெட்ராஸ் மேட்னி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com