30% வட்டியா..? சுரண்டப்படுவதை ஏற்கமுடியாது.. விஷால்-லைகா விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு!
சென்னை உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு 21 கோடி ரூபாய் கடனை 30% வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. விஷால் தரப்பில் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 30% வட்டி அதிகம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர் விஷாலுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, விஷால் சார்பில் லைகா நிறுவனம் செலுத்தியது.
அதன்படி, விஷாலுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர விஷாலுக்கு உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தனி நீதிபதி உத்தரவிற்கு தடை..
லைகா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி விஷால் தரப்புக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த விஷால் தரப்பில் 15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம் எனக்கூறப்பட்டது. மேலும் வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டனர்.. லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரன் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியானால் திவாலானவர் என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா? என விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.
இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

