மதராஸியின் முதல் நாள் வசூல் என்ன? டாப் 5 இடத்தை பிடித்தாரா SK? | Madharaasi
சிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் உருவான `மதராஸி' செப்டம்பர் 5 வெளியானது. இப்படம் வெளியாகும் வரை பெரிய ஹைப் இல்லை, டிக்கெட் புக்கிங் பெரிய அளவில் இல்லை என்றெல்லாம் கருத்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ஆனால், படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்பதும், முதல் காட்சிக்கு பிறகு புக்கிங் பெரிய அளவில் அதிகரித்தது எனவும் சொல்லப்படுகிறது.
படம் வெளியாகி ஒரு நாள் கடந்த நிலையில் படத்தின் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்திய அளவில் மதராஸியின் முதல் நாள் கலெக்ஷன் எனப் பார்க்கையில் 13 கோடி என இப்போது வரை சொல்லப்படுகிறது, இன்னும் உறுதியான கணக்குகள் வந்ததும் இது கூடலாம். சிவகார்த்திகேயனின் முந்தைய படமான `அமரன்' படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 21.40 கோடி, உலக அளவில் 34.70 கோடி என சொல்லப்பட்டது.
`அமரன்' பொறுத்தவரை, அதற்கு செய்யப்பட விளம்பரங்களின் பல ஊர்களுக்கு படத்தை தயாரிப்பு நிறுவனம் கொண்டு சென்ற விதமும் படத்தின் வசூலுக்கு பெரிய காரணமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அமரனின் வசூலில் நடந்ததெல்லாம், அரிதாக நிகழும் ஒரு அதிசயம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறது சினிமா வட்டாரம். ஆனால் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படாத நிலையில் `மதராஸி' வசூல் இவ்வளவு வந்திருப்பது பெரிய ஒன்று.
இது ஏன் பெரிய வசூல் என்பதை விளக்க வேண்டும் என்றால், இந்தாண்டு முதல் நாள் வசூலில் டாப் 5, இடங்களை பிடித்த படங்களின் வசூலைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். முதல் இடத்தில் இருப்பது ரஜினியின் `கூலி' 65 கோடி, இரண்டாவது இடத்தில் இருப்பது அஜித்தின் `குட் பேட் அக்லி' 29.25 கோடி, மூன்றாவது இடத்தில் அஜித்தின் `விடாமுயற்சி' 26 கோடி, நான்காவது இடத்தில் சூர்யாவின் `ரெட்ரோ' 19.25 கோடி, ஐந்தாவது இடத்தில் கமல்ஹாசனின் `தக் லைஃப்' 15.05 கோடி. முதல் ஐந்து இடத்தில் வரவில்லை என்றாலும், மதராஸி மூலம் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார் சிவா.
சிவாவின் சில முந்தைய படங்களின் முதல் வசூலில் கோடிகள் எல்லாம் சிங்கிள் டிஜிட் தான். இப்போது வளர்ந்திருக்கும் சிவாவின் மார்க்கெட்டுக்கு ஏற்றவாறு, மதராஸிக்கு கிடைத்திருக்கும் முதல்நாள் வசூல், நல்ல வசூலே. இனி வர இருக்கும் நாட்களில் சிவாவின் மற்ற பட வசூலை இப்படம் முறியடிக்குமா? ஒட்டு மொத்த வசூலில் எந்த இடத்திற்கு படம் செல்கிறது? என்பதெல்லாம் தெரியும்.