‘அன்பு காட்டி வரும் ரசிகர்களுக்கு நன்றி’ - சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத் உருக்கம்
அண்மையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவருக்கு ஸ்டேஜ் 3 கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வார் எனவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் அவரது மனைவி மான்யதா தத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘அவரது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்திருக்கிறார். ஆனால் அந்த சமயங்களில் அவருக்கு ஊக்கம் கொடுப்பது ரசிகர்களாகிய உங்களது ஆதரவு மட்டும் தான். இதற்காக நாங்கள் எப்போதுமே உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
தற்போது நாங்கள் மற்றொரு சவாலின் மூலம் சோதிக்கப்படுகிறோம். இந்த முறையும் உங்களது அன்பு அவரை காக்கும் என நம்புகிறேன்.
ஒரு குடும்பமாக நாங்கள் இதை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். முடிந்தவரை புன்னகையுடன் இதை கடக்க உள்ளோம். இது மிக நீண்ட போராட்டமாக இருக்கலாம்.
இந்த கடினமான நேரத்தில் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அவரது பக்கத்திலேயே என்னால் இருக்க முடியவில்லை. துபாயிலிருந்து திரும்புயுள்ள நான் இப்போது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
ஒவ்வொரு போரையும் வெல்ல நமக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுவார். நான் இல்லாமல் அவர் எதிர்கொண்டு வரும் இந்த போரில் அவருக்கு வழிகாட்டியாக இருப்பது பிரியா தான்.
கொரோனா சிக்கல்கள் தீர்ந்த பிறகு அவருக்கு வெளிநாடுகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம். இப்போதைக்கு அவர் மும்பையிலேயே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வார்.
அவரது நோய் குறித்து நீங்கள் ஊகிப்பதை விடுங்கள் என தாழ்மையுடன் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.