’காலம் யாருக்காகவும் காத்திருக்காது.. அப்படி காத்திருந்தால்...’ – மிரட்டும் மாநாடு டீசர்!
நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த ‘மாநாடு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரன் படத்தை முடித்தக் கையோடு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடிகர் சிலம்பரசன் வெங்கட் பிரபுவின் ’மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமட்சி தயாரிக்கும் இப்படத்தில் ‘அப்துல் காலிக்’ என்ற இஸ்லாமியராக சிம்பு நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், சிம்புவின் பிறந்தநாளையொட்டி ’மாநாடு’ டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, இதன் டீசரை ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். டீசரில் சிம்பு இடம்பெறும் காட்சிகள் அவர் மட்டும் லைவ்வில் இருக்கிறார்.
ஆனால், மற்ற அனைத்து காட்சிகளும் ரிவைண்டில் செல்கிறது. ஸ்டைலிஷ் காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே சூர்யா மிரட்டுகிறார். இவர்களுடன், கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ் உள்ளிடோர் நடித்திருக்கிறார்கள். இதன், மலையாள டீசரை நடிகர் பிரித்திவிராஜும், இந்தி டீசரை பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பும், கன்னட டீசரை கிச்சா சுதீப்பும், தெலுங்கு டீசரை ரவி தேஜாவும் வெளியிட்டிருக்கிறார்கள். யுவன்சங்கர் ராஜாவின் இசை மிரட்டலாக உள்ளது. ஏனெனில் வசனங்கள் ஏதும் இடம்பெறாமலே டீசர் இசை மூலமாகவே ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
கதையின் பின்னணி கோயம்புத்தூரில் இருக்கும் என்பதை டீசர் மூலம் அறிய முடிகிறது. டீசரில், “காலம் யார் ஒருவருக்காகவும் காத்திருக்காது, ஒருவேளை யாருக்காகவாவது காத்திருந்தால்” என்ற வசனம் எழுத்தில் இடம்பெறுகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் ரீதியான த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்ட படமாக இருக்க வாய்ப்புள்ளது.