சேலம் ஜருகுமலையில் எடுக்கப்பட்ட ‘மாமன்னன்’ திரைப்படம்! உற்சாகத்தில் மலைக் கிராம மக்கள்!

‘மாமன்னன்’ படத்தில் வரும் முக்கியமான காட்சிகள் சேலம் மாவட்டம் ஜருகுமலையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவ்வூர் மக்கள் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்பு, ‘மாமன்னன்’ படத்தின் மூலம் மீண்டும் சேலத்தின் பக்கம் திரை உலகத்தின் கடைக்கண் திரும்பியிருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.

தென்னிந்திய திரையுலக வரலாற்றில் குறிப்பாக, தமிழ்த் திரையுலகத்திற்கு நவீன யுகத்தின் திறவுகோலாக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. படப்பிடிப்புக் காட்சிகள் தலைநகர் சென்னையை நோக்கி நகர்ந்த பிறகு, சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மூடப்பட்டது. இந்த அத்தியாயத்திற்குப் பிறகு ஒருசில படங்கள் காட்சிப்படுத்தப்பட்டபோதிலும், அந்தப் படங்கள் வெற்றி காணவில்லை.

இதனால் பெரும்பாலான தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சேலத்தில் படப்பிடிப்பு நடத்த ஆர்வம் காட்டவில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜருகுமலையில்தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது. தவிர, இம்மலைக் கிராம மக்கள் திரையில் தோன்றவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் சென்று நடித்தது குறித்து அந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதைக் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து முழுத் தகவலையும் அறிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com