சமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து
தனக்கு ஒரு சமூக பொறுப்பும், அக்கறையும் உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து கூறுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை குறித்து தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார். சூர்யாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக மாறியது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பாடலாசியர் வைரமுத்துவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, ''சினிமா துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காமல் தனக்கு ஒரு சமூக பொறுப்பு அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்.
இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல. தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர்'' என்று தெரிவித்தார்